அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உலகிலேயே மிகவும் ஆதிகுடிகளில் முதன்மையானவன் தமிழன்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   13 , 2009  10:02:21 IST

திருச்சியில் ஒரு கால்சென்டரில் பணிபுரியும் விருமாண்டி பார்ப்பதற்கு சாதாரணமாகத்தான் இருக்கிறார். ஆனால் அவர் மனித இனம் உருவாகி பல இடங்களுக்கு நகர்ந்து சென்ற நிகழ்வின் முக்கிய கண்ணி அவர். தமிழனின் தொன்மைக்கு வாழும் அறிவியல் சான்றுகளில் அவரும் ஒருவர். எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஒரு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டு அங்கிருந்து மனித இனம் நகர்ந்தது. அங்கிருந்து புறப்பட்ட மனிதன் அடுத்த ஆயிரம் ஆண்டில் இப்போதைய ஆஸ்திரேலியா சென்றடைந்தான். வழியில் அவன் தங்கிப் பெருகிய இடங்களில் ஒன்று நமது மேற்குதொடர்ச்சிமலைத் தொடர்.
அந்த ஆதிமனிதக்குழுவின் மரபணுத் தொடர்ச்சி ஒன்றை விருமாண்டி கொண்டிருக்கிறார். அவரிடம் இருக்கும் எம்130 என்கிற மரபணுக்கூறு ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள், மலேயாவின் பூர்வகுடிகள், பிலிப்பைன்ஸில் இருக்கும் பூர்வகுடிகள் ஆகியோரிடமும் இருக்கிறது.
இது டி.என்.ஏக்களின் காலம். எச்சில், தலைமுடி, சிறு திசு, ரத்தம் எது கிடைத்தாலும் தனித்தனியாகப் பிரித்துப்போட்டு நீ யார் எங்கிருந்து வந்தாய் என்று ஆணிவேறு அக்குவேறாய் சொல்லும் காலம்.
‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே’ உருவான மூத்தகுடியான தமிழ்க்குடியின் பழைமையை இதை வைத்து ஆராய்ந்து நிரூபிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திராவிடர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களா? ஆரியர்கள் பின்னால் வந்தவர்களா என்கிற முற்றுப்பெறாத விவாதங்களை கூட இந்த அறிவியல் முடித்துவைக்ககூடும்.
‘‘முதலில் டி.என்.ஏ. என்பது குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. கொல்லப்பட்டது யார்?, கொல்லப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் யார்? ஒருகுழந்தை யாருடையது? கற்பழிப்பு வழக்குகள் ஆகியவற்றில் டி.என்.ஏ மிகவும் உதவிகரமாக இருந்தது. இதற்கெல்லாம் டி.என்.ஏவியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆராய்ந்தால் போதும். ஆனால் இப்போது டி.என்.ஏவில் இருக்கும் பல லட்சம் தொடர்ச்சிகளை ஆராயும் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர்கள், வழிமுறைகள் எல்லாம் வந்துவிட்டன. இதை வைத்து ஒரு மனிதரின் தலைமுறைகளை பின்னோக்கி ஆராயலாம். சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தலைமுறைகளைக் கூட கண்டறியலாம். எந்த ஆதிகுழுவிலிருந்து நான் உருவானோம்? எங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தோம்? என்பதெல்லாம் கூறமுடியும்’’ என்கிறார் தடயவியல் துறை நிபுணரான டாக்டர் சந்திரசேகர்.
‘‘சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்முடைய மூதாதையர்கள் எந்த குரங்குகள் என்று கண்டுகொள்ளலாம்’’ என்கிறார் அவர்.
மனித இனம் உருவானது எங்கே என்கிற கேள்விக்கு சில ஆண்டுகள் முன்பே மாபெரும் மரபியல் விஞ்ஞானியும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியருமான காவேலி ஸ்போர்ஸா ஆப்பிரிக்காவில் தான் தோன்றினான் என்று விளக்கியிருக்கிறார். சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கு தோன்றிய இந்த மனித இனம் அங்கிருந்து புறப்பட்டு உலகம் முழுக்க பல்வேறு காலகட்டத்தில் வியாபித்தது. எங்கிருந்து யார் எப்போது போய் செட்டிலானார்கள் என்பது பற்றிய ஆராய்ச்சிகள்நடந்து வருகின்றன. இதில் ஓரளவுக்கு தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ‘‘சுமார் 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஐரோப்பாவில் மனித இனம் பரவியது என்று கூறப்படுகிறது. ஆனால் சுமார் 70ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்தியாவுக்கு மனிதன் வந்துவிட்டான். ஐரொப்பியர்கள் இந்தியாவின் மேற்குப்பகுதியிலிருந்துதான் கிளம்பி ஐரோப்பாவுக்கு சென்றிருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். இப்போது பெரிய அளவில் ஆய்வுகள் நடக்கின்றன’’ என்கிறார் பேராசிரியர் பிச்சப்பன். மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் உயிர் அறிவியல் துறையில் மூத்த பேராசிரியர். எம்130 மரபுக்கூறை விருமாண்டியின் உடலில் அடையாளம் கண்டவர் இவர்தான். அதுமட்டுமல்ல ஏற்கெனவே தொழுநோய், காசநோய் போன்றவற்றால் மனிதர்கள் பாதிக்கப்படுவதற்காகக மரபணுவையும் கண்டறிந்தவர். ‘‘ இனம் என்கிற ஒரு விஷயமே கிடையாது. இதைத்தான் தற்போதைய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன. சாதி என்பது ஒரு சமூக கலாச்சார அமைப்பு. எந்த சாதியும் மரபணு ரீதியில் தூய்மையானது அல்ல. மனித இனத்தின் வரலாறு என்பது பல இடப் பெயர்ச்சி களின் வரலாறுதான். தொழில்நுட்பத்துடன் இடம்பெயர்ந்து வருகிற மனிதக்குழு வந்துசேரும் இடத்திலிருக்கிற அந்த தொழில்நுட்பம் தெரியாத சமூகக்குழுவை ஆக்கிரமிக்கிறது. இரண்டறக்கலக்கிறது’’ என்கிறார் அவர்.
பேராசிரியர் பிச்சப்பன், அமெரிக்காவில் உள்ள மரபியல் வல்லுனரும் மானுடவியலாளாருமான ஸ்பென்ஸர் வெல்ஸ் என்பவருடன் சேர்ந்து மனித இனத்தின் இடப்பெயர்ச்சி பற்றிய கண்ணிகளை அறிய நடைபெற்றுக்கொண்டிருக்கும் திட்டத்தில் இந்தியப் பொறுப்பாளராக இருக்கிறார். உலகம் முழுக்க ஒரு லட்சம் சாம்பிள்கள் ஆண்களிடமிருந்து இந்த டி.என்.ஏ.ஆய்வுக்காகத் திரட்டப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இவரது குழுவினர் இதுவரை 9000 சாம்பிள்களை ஆண்களிடமிருந்து திரட்டியுள்ளனர். வாயில் சிலநிமிடங்கள் கொப்புளித்து துப்பினால் போதும் சாம்பிள் தயார். 2005 ல் தொடங்கிய இந்த ஐந்தாண்டு கால ஆராய்ச்சி முடியும்போது மேலும் பல உண்மைகள் அறிவியல்ரீதியாகத் தெரியவரும் என்கிறார் பிச்சப்பன். இந்த ஆய்வு நேஷனல் ஜியாகிரபிக் சொசைட்டி, ஐபிஎம் ஆகியற்றின் கூட்டுமுயற்சியில் நடத்தப்படுகிறது. இந்த ஆய்வு ஒய் குரோமோசோம் அடிப்படையில் நடத்தபடுவதாகும். அதாவது ஒய் குரோமோசோம் என்பது தந்தையிடமிருந்து மகனுக்குத் தரப்படுவது. இது ஆதி காலம்தொட்டு மனிதனிலும் பிற உயிரினங்களிலும் தலைமுறைகளாக நடந்துவருகிறது. இவ்வாறு தரப்படுவதில் ஏதேனும் சிறு பிழை அதாவது மாற்றம், ஏற்பட்டால் அதுவும் பின்வரும் தலைமுறைகளுக்குக் தரப்படும். இந்த பிழை அல்லது மாற்றம்தான் ஆங்கிலத்தில் னீutணீtவீஷீஸீ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு பல மரபணு மாற்றங்களை அவை எப்போது நிகழ்ந்தன என்பதையும் கண்டறிந்துள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு மனிதனின் டிஎன்ஏவும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் விருமாண்டியின் மரபணுவில் இருக்கும் எம்130 என்பதும் ஒரு மரபணு மாற்றம்தான். எழுபதாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இந்திய மண்ணில் காலடி வைத்த முதல்மனிதனின் உடலில் இருந்தது இதுதான்.
இதேபோல் பெண்களின் வம்சாவழியை ஆராய செல்களில் இருக்கும் மைட்டோகாண்டிரியாவில் உள்ள டி.என்.ஏ ஆராயப்படுகிறது. இந்த டி.என்.ஏ தாயிடமிருந்து மகனுக்கும் மகளுக்கும் தரப்படுகிறது. தந்தையின் மைட்டோகாண்டிரியில் டி.என்.ஏ அவரைத்தாண்டி அடுத்த தலைமுறைக்கு வருவதில்லை.
இவற்றை வைத்து பல்வேறு குழுக்களாக மனிதர்கள் பிரிக்கப் பட்டுள்ளனர். அதைவைத்து எங்கிருந்து ஒரு மனிதரின் மூதாதையர்கள் இடம்பெயர்ந்தனர்? எந்த திசையிலிருந்து வந்தார்கள் என்பதைச் சொல்லிவிட முடிகிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பல நிறுவனங்கள் சில நூறு டாலர்களுக்கு இந்த பரிசோதனையைச் செய்து உங்கள் மூதாதையர் யார்? என்பது பற்றிய சான்றிதழைத் தரத்தயாராக உள்ளன. இதை வைத்து தங்கள் கடந்த காலத்தை எண்ணி மகிழமுடியும். அதைக் கொண்டாட முடியும்.
தமிழர்களின் வரலாறு என்று தமிழ் இலக்கியங்கள் சொல்வதும் இடப்பெயர்ச்சிதான். அறிஞர் காவேலி ஸ்போர்ஸா, மனிதன் இடம்பெயர்ந்து சென்றது பற்றிக் குறிப்பிடுவதுபோல தெற்கிலிருந்து பாண்டியன் கடல்கோளின் போது மக்களோடு வடக்கு நொக்கி வந்ததை நம் இலக்கியங்கள் குறிப்பிட்டுக்கொண்டே இருக்கின்றன. மாமல்ல புரத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முருகன் கோயில் மூன்று சுனாமிகளின் ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது. ‘‘ இந்தியாவின் கிழக்கு மேற்கு, தெற்குப்பகுதிகளில் கடல் இப்போதி ருப்பதுபோலில்லாமல் 200 கிமீக்கு அப்பால் இருந்ததற்கான புவியியல் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் லெமூரியாக் கண்டத்தில் தமிழன் வாழ்ந்தான் என்று சொல்லப்படுவதற்கு ஆதாரங்கள் இல்லை. அதாவது கண்டங்கள் மாறுபாடு(நீஷீஸீtவீஸீமீஸீtணீறீ பீக்ஷீவீயீt) நிகழ்ந்தது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக. அப்போது மனித இனமே தோன்றியிருக்க வில்லை. ஆனால் கடல்கோள்களால் இன்றைக்கு கடற்கரையிலிருந்து பல கிமீ தள்ளி வாழ்ந்த மனிதன் மேலேறி வந்திருக்கலாம். தமிழனின் பண்டை நாகரிகத்தை அறியவேண்டுமானால் கடலடியில்தான் தோண்ட வேண்டும்’’ என்கிறார் பேராசிரியர் பிச்சப்பன்.
இந்தியாவில் கோத்திரங்கள் என்று சொல்லப்படும் பாரம்பரியப் பெயர்கள் இருக்கின்றன. வட இந்தியாவில் குடும்பப்பெயர் இருக்கிறது. இதெல்லாம் பரம்பரையை பின்னோக்கி சென்றுபார்க்கும் முறைகள்தான். ஆனால் பெண்களுக்கு கோத்திரங்கள் உதவுவதில்லை. ஏனெனில் திருமணம் ஆனதும் அவர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும் மாறிவிடுகின்றன. ஆனால் இவையெல்லாம் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுக்கு உட்பட்டவையே. அதற்கு முன்பு இவ்வாறான அமைப்புகள் இருந்ததில்லை. தற்போது நடக்கும் ஜீனோகிராபிக் திட்டத்தின் நோக்கம் உலகெங்கும் மனித இனம் எப்படி வியாபித்தது என்பதைக் கண்டறிவதே.
தற்காலத்தில் இதுபோன்ற டி.என்.ஏ.ஆய்வுகள் உலகெங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவில் இருக்கும் ஜெனட்டிக் டிடெரிமெண்டல் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிபுணரான ரிச்சர்ட் ஃபெல்ட்மேன்,‘‘ டி.என்.ஏ மூலக்கூறின் வரிசைகளை ஆராய்வதின் மூலம் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், ஒருவருக்கு இருக்கும் தனித்திறமைகள் போன்றவற்றைக் கண்டறி யலாம். ஒரு குறிப்பிட்ட மக்கள்குழுவினருக்கு இதுபோன்ற தன்மைகளைப் படிக்க நாம் முதலில் அந்த ஜனத்தொகையின் வர்க்க மூலத்தில் 10% மக்களின் டி.என்.ஏக்களை ஆராய்ச்சி செய்தாகவேண்டும்’’என்கிறார்.(பார்க்க பேட்டி) இது தொடர்பாக தடயவியல் துறை நிபுணரான சந்திரசேகரனுடன் இணைந்து தமிழகத்தில் ஆய்வு செய்யவிருக்கிறார் இவர். ‘‘ ஃபெல்ட்மேன் சிறந்த கணிணி ப்ரோக்கிராமரும் கூட. இந்த ஆராய்ச்சிக்கு தமிழக அரசின் நிதியுதவியும் கிடைத்தால் நன்றாக இருக்கும். அதற்காக தமிழக முதல்வரிடமும் கோரிக்கை வைக்க இருக்கிறோம். தமிழரின் பழம்பெருமைகள் பற்றி ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் தமிழக முதல்வர். அவர் உதவி செய்யக்கூடும்’’ என்கிறார் சந்திரசேகரன்.
இதன்படி பார்த்தால் வருங்காலத்தில் குழந்தை பிறந்தவுடனேயே அது எம்மாதிரியான திறமைமைகளைக் கொண்டிருக்கிறது என்பதை டி.என்,ஏ வைத்துக் கணித்துவிடலாம். ஆனால் நம்மூரில் ஜாதகத்தில் பார்த்து ஜோசியர்கள் சொல்வதற்கும் டி.என்.ஏ ஆராய்ச்சிக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா என்பதுகூட ஆராய்ச்சி செய்யவேண்டிய ஒன்றுதான்.
‘‘ ஜாதகம் வைத்திருப்பது போல் எல்லோரும் டி.என்.ஏ ஆய்வு ரிப்போர்ட்டையும் கையில் வைத்திருக்கவேண்டியிருக்கும் காலம் தொலைவில் இல்லை’’ என்கிறார் சந்திரசேகரன்.
சரி நமது மூதாதையர்களைப் பற்றி, பரம்பரையைப் பற்றி டி.என்.ஏ ஆய்வு செய்வதால் என்ன ஆகிவிடப்போகிறது?
‘‘ பழைமையைக் கொண்டாடுவதுதான். நாம் நமது பழைமையைக் கொண்டாட தவறிவிடுகிறோம்’’ என்கிறார் பிச்சப்பன்.
ஆக இனி ராஜராஜ சோழன் பரம்பரையாக்கும் நான் என்று யாராவது பீற்றிக்கொண்டால் எங்கே உன் டி.என்.ஏ ஆதாரம் என்று கேட்டுவிடலாம்.
எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்த ஆதிமனிதன் விட்டுச்சென்ற மரபணுக்களின் மிச்சம் இன்னும் தமிழர்களின் ரத்தத்தில் தொடர்கிறது. இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே மிகவும் ஆதிகுடிகளில் முதன்மையானவன் தமிழன் என்பது அறிவியல்ரீதியாக நிரூபணமாகியும்கூட பழம்பெருமை பேசுவதில் யாருக்கும் சளைக்காத நாம் இதைக் கொண்டாடத் தவறிவிட்டோம் என்றே தோன்றுகிறது.

- என்.அசோகன்

நன்றி:தி சண்டே இந்தியன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...