அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மறக்க முடியாத மைக்கேல்! - கிருஷ்ணா டாவின்ஸி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுன்   28 , 2009  08:31:45 IST

அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், ( ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெச்சூர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.

பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒரு முகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் 'திரில்லர்' இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை ) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான 'ஆப் தி வால்' ஐக் கொடுத்து 'இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு' என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ஆப்ராடிஜி” ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.

மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், •ஆப்ரிக்கா, லாட்டினோ, சா•ப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஓர் போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சு•பி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஓர் பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.

இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்” “பில்லி ஜீன்” “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்” மற்றும் “திரில்லர்” இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அந்தப் பாடல்களைக் கேட்டாலே, ஒன்று எழுந்து ஆட வேண்டும் போல் இருக்கும் அல்லது எவனையாவது பிடித்து உதைக்க வேண்டும் போல் இருக்கும். அப்படிப்பட்ட “fire” அந்தப் பாடல்களில் இருந்தது.

அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “human nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.

மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.

”anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான் ) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது.

உதாரணத்துக்கு “lady in my life” பாடலில் வரும் வரிகள் மிகவும் கவித்துவமானவை. “baby through the years, even when we are old and grey, I will love you more each day, because you are always be the lady in my life” என்று காதலாகிக் கசிந்துருகும் வரிகள். பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”

“மைக்கேல் ஜாக்ஸனிடம் நான் கண்ட எனர்ஜியை வேறு எந்த இசைக்கலைஞரிடமும் கண்டதில்லை” என்று சொல்லி இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். தன் வயது, உடல் நிலைக்கு மேற்பட்ட எனர்ஜியை மைக்கேல் செலவிட்டுக் கொண்டே இருந்தார். அந்த எக்ஸ்ட்ரா எனர்ஜி தந்த வலிகளுக்காக அவர் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட ஆரம்பித்தார். அதுவே அவருடைய உயிருக்கு உலை வைத்து விட்டது. ஐம்பது என்பது சாகிற வயசா! இன்னும் எத்தனை இசைக் கோவைகள் அந்த மூளைக்குள் இருந்ததோ தெரியவில்லையே!

ஏ. ஆர் . ரஹ்மானுக்கும் மைக்கேல் ஜாக்ஸனுக்கும் இருக்கும் ஒரு சில ஒற்றுமைகளைச் சொல்லத் தோன்றுகிறது. இருவருமே ஓயாத உழைப்பாளிகள். நுண்ணியமாக இசை செதுக்குபவர்கள். அதனால் இருவரின் பாடல்களும் கேட்கக் கேட்கத் தான் பிடிக்கும். கடைசியாக, இருவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்கள். இறக்கும் போது மைக்கேலின் பெயர் “மிகயீலா’க மாறியிருந்தது.

இன்றைக்கு மைக்கேலின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், அவருடைய கடன் சுமையைப் பற்றியும், சிறுவர்களுடனான பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றியும் ஏகப்பட்ட செய்திகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இவை எதுவுமே என் மனதில் தங்கியிருக்கவில்லை. நேற்றிரவில் இருந்து என்னிடம் இருக்கும் அத்தனை மைக்கேல் ஜாக்ஸனின் பாடல்களையும் தொடர்ந்து கேட்ட படி இருக்கிறேன். “they don’t care about us”, “girl friend”, “earth song”, “childhood” “man in the mirror”, “I just cant stop loving you”, “the way you make me feel”.என்று எத்தனை பாடல்கள்! ஒவ்வொன்றும் ரத்தினங்கள்! இவை மரணம் இல்லாதவை!

மைக்கேல், உன்னை மறக்க முடியாது!


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...