அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அறிந்திலேன் இதுவரை - ராஜமார்த்தாண்டன்

Posted : புதன்கிழமை,   ஜுன்   10 , 2009  10:43:30 IST

ராஜமார்த்தாண்டன் - மனதின் கலைஞன் - ஹரன்பிரசன்னா

கவிஞர் ராஜமார்த்தாண்டன் அகால மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். 60ம் கல்யாணம் முடிந்து ஒரு வருடம் கழியாத நிலையில், அவரது மகனின் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடியாத நிலையில், அவர் குடும்பத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.

ராஜமார்த்தாண்டன் கவிஞர், திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர்.

நூல்கள்: அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்), என் கவிதை (கவிதைகள்), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு), கொங்குதேர் வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி), புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி), புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).

குடும்பம்: மனைவி, ஒரு மகன், ஒரு மகள்.

நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். மனமாச்சரியங்களுக்கு ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் ஒட்டுமொத்த மரபு/புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார். அத்தொகுப்பில் தி.சோ. வேணுகோபாலன், நாரணோ ஜெயராமன், என்.டி. ராஜ்குமார், லக்ஷ்மி மணிவண்ணன், பிரம்மராஜன் போன்ற கவிஞர்களை அவர் சேர்க்கவில்லை. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தான் அவர்களைத் தேர்ந்தெடுக்காததன் காரணத்தைத் தெளிவாக முன்வைத்தார் ராஜமார்த்தாண்டன்.

“தி.சோ. வேணுகோபாலனைப் பொருத்த வரை பிச்சமூர்த்தியைப் படித்த கவிதை வாசகனுக்கு வேணு கோபாலனைப் படிக்கவேண்டியதில்லை. அதுபோலவே பசுவய்யாவின் அபரிமிதமான பாதிப்புக்கொண்டவர் நாரணோ ஜெயராமன் என்பதாலேயே சேர்க்கப்படவில்லை.”

பிரம்மராஜனின் கவிதைகளை அவர் புறக்கணித்ததற்கான காரணம் முக்கியமானது. கவிதைகளை ஒரு பொது சாதனமாகப் பார்க்காமல், அக்கவிதை எங்கிருந்து எழுகிறது, அதன் போக்கு என்ன என்பதைப் பற்றிய தெளிவான எண்ணம் ராஜமார்த்தாண்டனுக்கு இருந்தது. அவ்வகையில் பிரம்மராஜனின் கவிதைக்குத் தமிழ்ப்பரப்பில் என்ன இடம் என்பதைப் பற்றி யோசித்து, பிரம்மராஜனின் கவிதைகளைப் புறக்கணித்ததற்கான காரணத்தை அவரால் தெளிவாகக் கூற முடிந்தது.

“பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன். புதுக்கவிதைகளில் அவருக்குள்ள ஈடுபாடு, உலகக் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் அவர் பங்களிப்பு, அவர் நடத்திய ‘மீட்சி’ பத்திரிகை குறித்தெல்லாம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எண்பதுகளில் புதுக்கவிதையில் நவீனத்துவத்தை அதிகமும் வலியுறுத்தியவர் பிரம்மராஜன். ஆனால், அந்த நவீனத்துவம் தமிழ் மனம் சார்ந்ததாக இல்லாமல் மேலைநாட்டுக் கவிதைப் போக்கின் அதீதத் தாக்கத்தாலும் படிப்பறிவின் மூலமான அனுபவ வெளிப்பாட்டினாலும் உருவானது. சோதனை முயற்சிக்காகவே சோதனை என்றானதாலும் திருகலான மொழி நடையினாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிப்பது போன்ற உணர்வை, அந்நியத் தன்மையை இவரது கவிதைகள் தோற்றுவித்துவிடுகின்றன. இதனாலேயே அவரது கவிதைகள் குறித்து மேலான அபிப்பிராயம் ஏதும் எனக்குக் கிடையாது.”

அதுமட்டுமின்றி, சி.சு. செல்லப்பாவின் கவிதைகளையும் அவர் புறக்கணித்தார். இன்றைய நவீன கவிதைகளின் செழிப்பில் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை. அதே சமயம், சி.சு.செல்லப்பாவின் கவிதையை, நவீன கவிதைகளின் சிறந்த ஒரு முகமாக அவர் ஏற்கவில்லை. இப்படி ஒரு தெளிவான நிலையை எடுக்க, தான் கவிதைகள் குறித்துக் கொண்டிருக்கும் கருத்துகளின் மேலே சற்றும் குன்றாத நம்பிக்கையும், கவிதைகள்/கவிஞர்கள் குறித்த தொடர்ந்த அவதானிப்பும் வேண்டும்.

“தமிழ்ப் புதுக்கவிதையைப் பொருத்தவரையில், சி.சு. செல்லப்பாவின் தீவிரமான முயற்சியும் அவரது ‘எழுத்து’ பத்திரிகையும்தான் தமிழில் புதுக்கவிதை இந்த அளவில் வேரூன்றி வளர்வதற்குக் காரணமாக இருந்தன. புதுக்கவிதை வளர்ச்சியோடு இரண்டறக் கலந்துவிட்ட சிறுபத்திரிகை இயக்கங்கள்கூட செல்லப்பாவின் தொடர்ச்சியே. அவரும் தமிழில் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். புதுக் கவிதைகள் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சுயமாக நிறையக் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் அவரது கவிதைகள் என்னுள் எவ்விதமான பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. புதுக்கவிதை வளர்ச்சியில் அவரது ‘எழுத்து’ பத்திரிகையின் பங்களிப்புக் காரணமாக அவரது கவிதைகளையும் நான் மேலான கவிதைகள் எனக் கருத வேண்டியதன் அவசியமென்ன?”

ராஜமார்த்தாண்டன் கவிதைகளை கோட்பாட்டளவில் அணுகாமல், தன் மனத்தினாலேயே அணுகினார். அவரது ரசனை சார்ந்தே கவிதைகளை வகைப்படுத்தினார். ஜெயமோகன் ராஜமார்த்தாண்டனை ‘கவிதைகளை நேரடியாக மனதால் வாங்கிக்கொண்டவர்’ என்கிறார். ராஜமார்த்தாண்டனுடன் மாறுபட பல கருத்துகள் இருந்தாலும், அவர் கவிதைகளை ஏற்றுக்கொண்டதற்கும், நிராகரித்ததற்கும் பின்னால் வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். அஜெண்டாக்களுடன் கவிதைகளை அணுகாமல் இருந்ததையும் பார்க்கமுடிகிறது. இன்றைய நிலையில் தலித் கவிஞரொருவரை நிராகரித்தால் எழும் முத்திரைகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

“தலித் கவிஞர் எனப் பரவலாக அறியப்படுகிற என்.டி. ராஜ்குமார் கவிதைகள்கூட எதையோ பிரமாதமாகச் சொல்லும் பாவனையில் ஆரம்பித்து எந்த அனுபவத்தையும் தராமல் சிதைந்துபோய்விடுகின்றன.”


ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் அவரது விமர்சனத்தைச் சார்ந்தே அமைந்துள்ளதையும் காணலாம். மேல்நாட்டுக் கோட்பாட்டுகளுக்கிணங்க கவிதைகளை அவர் செய்யவில்லை. மனதில் தோன்றும் உணர்வுகள், அனுபவங்கள், இயலாமைகளையே அவர் கவிதையாக்கினார். எஸ். வைதீஸ்வரனின் ‘கால் மனிதன்’ கவிதை நூல் பற்றிய விமர்சனத்தில், “மனிதனுக்கும் அல்லது அவன் மனத்துக்கும் வாழ்க்கைக்குமான முரண்பாடே ஆரம்பம்முதல் இன்றுவரையிலான வைதீஸ்வரன் கவிதைகளின் அடிச்சரடாகத் தொடர்கிறது.

இந்த முரண்பாடு ஒரு பார்வையாளனுடையதாக அல்லாமல், தன்னையும் உட்படுத்தியதாக, அதனால் தவிர்க்கவியலாத எள்ளல் கலந்ததொரு விமர்சனப் பார்வையாக வெளிப்படுவது இவரது கவிதைகளின் தனிப்பண்பாக அமைகிறது” என்கிறார். இதையே இவரது கவிதைகளுக்கும் சொல்லலாம். ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் பெரும்பாலும் அவரைப் பற்றியே பேசுகின்றன. தனது கோபம், சோகம், பயம் என எல்லாவற்றையும் அவரது கவிதைகளில் பார்க்கமுடிகிறது. தனது திறமையின்மை என்பதை அவர் பொருளாதாரத்தின் மூலமாக ஒரு காக்கையில் கண்டுகொள்கிறார் என்று தோன்றுகிறது. அவரது கவிதைகள் பறவைகளைப் பற்றிக் கொண்டே சுற்றுகின்றன. எவ்வித கட்டுகளுமில்லாத பறவையாக, பருந்தாகவும் அதன் எதிர்முனையில் காக்கையாகவும் அவர் தன்னைக் கண்டுகொண்டிருந்திருக்கிறார் என்று படுகிறது.

ஒரு விமர்சகராக இருந்ததால், அவரது விமர்சனத்தின் மீதான விமர்சனமாகவும் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். (விமர்சனம் கவிதை.) கிராமத்திலிருந்து பிரித்து நகரத்தில் நடப்பட்ட ஒரு மனிதரின் அதிர்ச்சியும், அதை எதிர்கொள்ளமுடியாது தவிக்கும் தவிப்பும் அவரது கவிதைகளில் கிடைக்கின்றன. மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையைப் பல கவிதைகளில் பார்க்கமுடிகிறது. தான் பருந்து என்றாலும் காக்கையாகும் துருவங்களை அவர் வேறொரு விதத்தில் ‘அதுவொரு பறவை’ கவிதையில் பதிவு செய்கிறார் என்று சொல்லலாம். காக்கை என்றாலும் அதன் மண் சார்ந்த உறவில் அவருக்கு பெருமிதமும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. கிளி, பருந்து, காக்கை, மைனா, குயில் என்று பறவைகளின் வழியாக அவரது கவிதைகளை மீண்டும் வாசிப்பது பல புதிய அர்த்தங்களை ஏற்படுத்துகிறது.

‘எனது வாள்’ கவிதையில் வாளின் செயல்களைப் பட்டியலிடும் ராஜமார்த்தாண்டன், அதை விட்டெறியும் மார்க்கம் தெரியவில்லை என்கிறார். ‘மனப்பறவை’ கவிதையில் மலைச்சிகரம் நோக்கிப் பறக்கும் கவிதையைப் பற்றிப் பேசுகிறார். அந்த மனப்பறவை ராஜமார்த்தாண்டனே அன்றி வேறல்ல. ‘எல்லாமே நம்பிக்கையில்தான்’ கவிதையில், தன் கவிதை நம்மாலோ நம் வாரிசாலோ எப்படியும் உணரப்படும் என்கிறார். அவர் இறந்த செய்தி கேட்டு, ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, அவரது நம்பிக்கை உண்மையாவதை உணர்ந்தேன். அதை உணர அவரில்லை. அஞ்சலி.

1. எல்லாமே நம்பிக்கையில்தான்உங்களிடம்
ஒரு கவிதை சொல்லப் போகிறேன்
காதுகளை மூடிக் கொள்ளலாம் நீங்கள்
வருத்தமில்லை எனக்கு
உதட்டசைவிலும் என் கவிதை
உங்கள் கண் வழியே புகுந்துவிடும்
கண்களையும் மூடிக் கொள்ளலாம்
அப்போதும் வருத்தமில்லை
காற்றிலே அலைந்து திரியுமென் கவிதை
என்றேனும்
கண்களை விழித்தீரெனில்
உள் புகுந்து அதிர்ச்சியூட்டும்
பிடிவாதமாக மூடிக் கொள்ளலாம் நீங்கள்
அப்போதும் வருத்தமில்லை எனக்கு
உம் வாரிசாலோ வாரிசின் வாரிசாலோ
உணரப்படும் என் கவிதை
என்றேனும் ஒரு நாள்
எனவேதான்
வருத்தமில்லை எனக்கு
நஷ்டமில்லை.
2. எனது வாள்

கூர்வாளொன்று
எப்போதும என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்
முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்து
கம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்
நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்
பிரியம் காட்டுவதாய் நினைத்து
குரல்வளையை கீறிவிடும்
ரோஜாக்களைக் கொய்து
கைப்பிடியில் சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.
விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்
கூர்வாளொன்று…

3. மனப்பறவை

விண்ணிலேறிப் பறந்தொரு புள்ளியாகி
விருட்டெனத் தரையிறங்கியதென் சினேகப் பறவை
சாலையோரக் கண்ணாடித் துண்டுகள் பொறுக்கி
குப்பைத் தொட்டியில் போட்டது
எதிர்வீட்டுத் தோட்டத்தில் ரோஜாப்பூ கொய்து வந்து
பள்ளிச் சிறுமியின் தலைசூடி மகிழ்ந்தது

சுடிதார் மாணவியிடம் குறும்பு செய்த
காலிகளை கூரலகால் கொத்தி எச்சரித்தது

நடைபாதைக் குடியிருப்பில் அழும் குழந்தையின் கையில்
கொய்யாப்பழம் கொத்தி வந்து வைத்தது

பஸ் நிறுத்தக் கிழவனின் வீங்கிய காலுக்கு
மூலிகை கொண்டு ஒத்தடம் கொடுத்தது

அரிசிமணிகள் பொறுக்கி வந்து
அவன் பாத்திரத்தில் கவனமாய் இட்டது

தந்திக் கம்பத்தில் பறந்தமர்ந்து
சுவாசமாய் அங்குமிங்கும் நோக்கியபின்
பாட்டிசைத்துப் பறந்தது மலைச்சிகரம் நோக்கி.

4. இப்படியும் சில விஷயங்கள்

பறவைகளில் காகங்கள் மீது
அலாதி பிரியம் எனக்கு

குழந்தைகள் கைப்பண்டத்தை
லாகவமாகப் பறித்துச் செல்லும்
திருட்டு ஜென்மம்தான்

வீட்டு மதில்மேல் வந்தமர்ந்து
சமயா சந்தர்ப்பம் அறியாது
கத்தித் தொலைக்கும் மூடப்பிறவிதான்

எனினும்

நான் தவழ்ந்து வளர்ந்த கிராமத்திலும்
இன்று பிடுங்கி நடப்பட்ட இந்த நகரத்திலும்
தினமும் என்னைப் பார்த்து

கரைந்தழைக்கும் நண்பனல்லவோ அது.

5. அது ஒரு பறவை

ஒற்றைப் பனைமர உச்சியில்
தனித்தொரு பருந்தின் தவசு
அரைவட்டக் கோணத்தில்
தரைநோக்கி அலையுமதன் பார்வை
அவ்வப்போது வான் நோக்கியும்
இரை கண்டால் தரைநோக்கிப் பாய்ச்சல்
இல்லையேல் விண்ணோக்கிப் பறந்து
வட்டமிட்டு மிதக்கும்

அதுவொரு பறவை
இரை அதற்குத் தேவை மட்டும்
பறந்து களித்தலே அதன் இலக்கு.

6. தூரத்துப் பார்வை

நேற்று என்னூரில் பார்த்த
அதே காக்கைகள்
அதே ஜோடி மைனாக்கள்
அதே வண்ணப் புறாக்கள்
அதே பச்சைக்கிளிகள்
அதே சிட்டுக் குருவிகள்

மரங்களும்
கிளைதாவும் அணில்களும்
அப்படியேதான்

மனிதர்கள் மட்டும்
வேற்று முகங்களுடன்

7. வால் மனிதன்

இப்போதெல்லாம் அவனுடன் ஒரு வால்
ஏதேனுமொரு வால்
சிலபோது குரங்கின் வால்
சிலபோது சிங்கத்தின் வால்
சிலபோது நரியின் வால்
சிலபோது குதிரையின் வால்
சிலபோது எலியின் வால்
சிலபோது ஆட்டின்வால்
சிலபோது பன்றியின் வால்

என்றிப்படி எப்போதும்
ஏதேனுமொரு வால்

ஒரு வால் மறைந்த கணம்
ஒட்டிக்கொள்ளும் இன்னொரு வால்
விரைவாக
இப்போதெல்லாம்
அரிதாகி வருகின்றன
வாலில்லாமல் அவன்
நடமாடும் கணங்கள்

8. எனினும்

இல்லாமல் போக
இப்போதும் மனமில்லை

நூறாண்டு வாழ்ந்துவிட்டபோதும்

கொஞ்சம் நேசம்
அநேகம் துரோகங்கள்
கொஞ்சம் சந்தோஷம்
அநேகம் துக்கங்கள்
கொஞ்சம் நிம்மதி
அநேகம் பதற்றங்கள்
கொஞ்சம் நம்பிக்கை
அநேகம் அவநம்பிக்கைகள்
கொஞ்சம் செல்வம்
அநேகம் கடன் சுமைகள்

எனினும்
பூக்களின் புன்னகை
மரஙக்ளின் ஸ்நேகம்
பறவைகளின் சங்கீதம்

எனவேதான்…

9. கணிப்பு

நீ ஒரு அயோக்கியன்
நீ ஒரு சந்தர்ப்பவாதி
என்றெனக்குச்
சான்றிதழ் வழங்கிவிட்டாய்

அவசரப்பட்டுவிட்டாய் நண்பனே
என் நிழலாய் என்னைத்
தொடர்ந்தவன் போலும்
என் மனக்குகை இருளில்
துழாவித் திரிந்தவன் போலும்.

என்னை நானே
இன்னும் தேடிக்கொண்டிருக்கையில்
அவசரப்பட்டுவிட்டாய்.

சற்றே
நிதானித்திருக்கலாம் நண்பனே
என்னைப்போலவே.


10. தாமதமாகவே என்றாலும்…

தொடங்கியாயிற்று
தாமதமாகவே என்றாலும்
தீர்மானத்டுடன்.

திட்டமிட்ட பயணங்கள்
ஆயத்த மூட்டை முடிச்சுகளுடன்
விவாதச் சுமைகளுடன்
அறை மூலையில் கிடக்க

தொடங்கியாயிறு பயணத்தை
இலக்கற்று
பாதைகளற்று
தன்னந்தனியாக
சுதந்தரமாக.

11. விமர்சனம்

எழுது எழுது என்றாய்
எழுதினேன்

உன் மீசையின் கம்பீரத்தைப்
போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்
மீசையின் வரலாறு தெரியுமா?
அதன் வகைகள் அறிவாயா?
மீசையைப் பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன் எழுதிய
சர்ரியலிசக் கவிதை படித்திருக்கிறாயா?
கேள்விகளை அடுக்குகிறாய்.

நண்பனே
உன் கற்பனை மீசையைத் திருகி
நீ கொள்ளும் பரவசம்
எவ்விதம் நானறிவேன்
எங்கனம் அதுகுறித்து எழுதுவேன்.

நன்றி :http://www.tamilhindu.com

ராஜமார்த்தாண்டன் - ஜெயமோகன்

ஜூன் ஏழாம்தேதி காலை ஆறுமணிக்கு வசந்தகுமார் சென்னையில் இருந்து கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் வந்துசேர்ந்தார். இரவெல்லாம் நல்ல மழை கொட்டிக்கொண்டிருந்தது. காலையிலும் மழை. நான் கார் வரச்சொல்லியிருந்தேன். வீட்டில் இருந்து காலை ஒன்பது மணிக்கு கிளம்பினோம். கிளம்பும்போதும் மழை. போகும்வழியிலேயே அ.கா.பெருமாளை அவர் வீட்டில் இருந்து கூப்பிட்டுக்கொண்டோம்.

மழையிலேயே கன்யாகுமரி சாலையில்சென்றோம். சுசீந்திரத்தில் இருந்து மலர்மாலை வாங்கிக்கொணோம். சுசீந்திரம் கன்யாகுமரி சாலை மிக அழகானது. குளங்கள். நீர் நிறைந்து வழியும் ஓடைகள். மழைத்திரைக்கு அப்பால் ஓங்கிய மருத்துவாழ் மலை. ராஜமார்த்தாண்டன் அந்தமலைமீது சிறுவயதில் உச்சிவரை ஏறியதைப்பற்றி பலமுறை சொல்லியிருந்தார். மருத்துவாழ்மலையின் சிகரம் மிகச்செங்குத்தானது. சாகசக்காரர்கள் மட்டுமே ஏறமுடியும். சிறுவயதில் அண்ணாச்சி திடகாத்திரமானவர்.


கொட்டாரம் சந்திப்பில் திரும்பி சந்தையடி சாலையில் சென்று இடையன்விளை கிராமத்தை அடைந்தோம். ஏராளமான கார்கள். ஒருவேளை அந்தக் கிராமத்தில் அப்படியொரு பெரும் மரியாதை எவருக்குமே கிடைத்திருக்காது. ராஜமார்த்தாண்டனை அவரது ஊரிலும் சரி குடும்பத்திலும் சரி சற்றே குறைத்துதான் மதிப்பிட்டிருந்தார்கள். அவரது பழக்கவழக்கங்கள்தான் காரணம். இலக்கியம் பற்றி அவர்களுக்கு தெரியாதே. அவர் புகழ்பெற்றவரும் அல்ல. ஆனால் அவரது இரு பிள்ளைகளுக்கும் ஒரு தம்பிக்கும் அவரது இலக்கியம் பற்றி மதிப்பு இருந்தது

ராஜமார்த்தாண்டனின் மகள் திருமணத்துக்கு நாகர்கோயில் விஐபிகள் திரண்டுவந்ததும் அதன்பின் அவருக்கு நடந்த அறுபதாம் ஆண்டு நிறைவுவிழாவும் அவரைப்பற்றி உயிரெழுத்து வெளியிட்ட மலரும் எல்லாம் அவரை அவர்கள் கண்ணில் சட்டென்று வேறு ஒருவராகக் காட்டின என்று சொல்லலாம்.

சென்ற மார்ச் மாதம் இறுதியில் ராஜமார்த்தாண்டனின் மகன் திருமணம். அவர் நாமக்கல்லில் ஒரு கல்லூரியில் ஆசிரியர். அவர் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்ற வருத்தம் அண்ணாச்சிக்கு இருந்தது. ஆனால் அவர் கல்லூரியில் நன்றாகப் படித்துவேலைக்குப்போனதில் மனநிறைவு. கிராமத்தில் நடந்த திருமணத்துக்கு நானும் வேதசகாய குமாரும் நாஞ்சில்நாடனும் வந்திருந்தோம். அப்போதுதான் கடைசியாக இடையன் விளைக்கு வந்தேன்

அதன்முன்னர் பலமுறை நான் இடையன்விளைக்கு வந்திருக்கிறேன். முதல்முறையாக வந்தது அவரது தம்பி திருமணத்துக்கு. பதினைந்துவருடம் முன்பு. அண்ணாச்சி உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் இருந்து திரும்பிவந்து ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சற்றே குணமடைந்து ஊருக்குத் திரும்பியபோது வேதசகாயகுமாருடன் வந்தேன். தன் பிள்ளைகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை, செத்தால் மனசு ஆறாது என கண்ணீர் விட்டார்.

அண்ணாச்சி பிழைத்துக்கொண்டது அவரது சொந்த ஊரினாலும் மீனினாலும்தான். சென்னைதான் அவரைச் சீரழித்தது. மேன்ஷன் வாசம். தேடிவந்துகொண்டே இருக்கும் குடிகாரர்கள். சாப்பாடு இல்லாமை. ஊரில் மீனும் சோறும் அவரை தேற்றின.மேலும் அவர் காலச்சுவடில்செய்த வேலை அவரை மிக உற்சாகமாக வைத்திருந்தது. அவருக்கு கடைசி காலம் மிக மனநிறைவுடன் இருந்தது.

வேதசகாயகுமாரின் மகள் திருமணத்துக்கு மே 27 அன்று வசந்தகுமார் வந்திருந்தார். கல்யாணத்தன்று அண்ணாச்சியைப் பார்த்தேன். சென்ற ஐந்துவருடங்களில் அண்ணாச்சி உடல்நலம் தேறி பொலிவுடன் இருந்தார். முகத்தில் சிரிப்பு. புலித்தலைவர் பிரபாகரனின் மரணத்தில் கொஞ்சம் கலங்கினார் என்றார்.மற்றபடி எல்லாமே நிறைவாக முடிந்தது என்றார். பகல்முழுக்க விடுதி அறையில் நாஞ்சில்நாடன், குமரிமைந்தன், எட்வின்பிரகாஷ்,தேவதேவன், வசந்தகுமார் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கடைசியாக அப்போது பார்த்ததுதான் அண்ணாச்சியை.

உள்ளே சென்றோம். தமிழினி சார்பில் அ.கா.பெருமாள் அண்ணாச்சிக்கு மலர்மாலை வைத்தார். கூட்டத்தில் நாகர்கோயிலின் ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் இருந்தார்கள். அண்ணாச்சிக்கு முதலில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தியவரான கொடிக்கால் சேக் அப்துல்லா,பொன்னீலன். கலையிலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோழர்கள். பேராசிரியர்கள்.

திருச்சியில் இருந்து கவிஞரும் காவலதிகாரியுமான சின்னச்சாமி உயிரெழுத்து ஆசிரியர் சுதீர்செந்தில், விமரிசகர் முருகேசபாண்டியன் ஆகி§யோர் வந்திருந்தார்கள். மதுரையில் இருந்து தேவேந்திரபூபதியும் திரைநடிகரும் நாடக ஆர்வலருமான சண்முகராஜாவும் வந்திருந்தார்கள். கலாப்ரியா தென்காசியில் இருந்து வந்திருந்தார். சென்னையில் இருந்து தேவிபாரதி வந்திருந்தார். நாஞ்சில்நாடன் அவரது இன்னொரு நண்பருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வரவில்லை. சென்னையிலிருந்தமையால் வேதசகாயகுமார் வரவில்லை.

அண்ணாச்சி 6 ஆம்தேதி காலை 11 மணிக்கு வழக்கம்போல காலச்சுவடு அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். சாலையைக் கடக்கும்போது ஏதோ கனத்த வாகனம் மெல்ல தட்டியிருக்கிறது. அந்த வண்டிக்கே அது தெரிந்திருக்குமோ தெரியவில்லை. சென்றுவிட்டது. அண்ணாச்சிக்கு சற்று காது மந்தம். உள்ளூர அடி. அங்கேயே விழுந்து இறந்திருக்கிறார். ஏராளமான குருதி வெளியேறியிருக்கிறது. அவர் கிடப்பதை அரைமணிநேரம் கழித்துதான் அருகே ஜூஸ் விற்பவர்கள் கண்டிருக்கிறார்கள். உடனே காலச்சுவடுக்கு தகவல்சொல்லியிருக்கிறார்கள். கண்ணன் ஓடிவந்து பார்க்கும்போது ஏற்கனவே மரணம் நடந்துவிட்டது

உடனே அ.கா.பெருமாளுக்கு தகவல் சொன்னார் கண்ணன். பெருமாள் எனக்குச் சொன்னார். நான் அப்போது கணிப்பொறியில் இருந்தேன். செய்தியை போட்டுவிட்டு உடனே கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றேன். செல்லும்வழியிலேயே வசந்தகுமார் நாஞ்சில்நாடன் வேதசகாயகுமார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டே சென்றேன்.

ஆஸ்பத்திரியில் அண்ணாச்சி ஏற்கனவே பிணமாக அறிவிக்கப்பட்டு கிடந்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு பிரேதபரிசோதனைக்குக் கொண்டு சென்றார்கள். அண்ணாச்சியின் மருமகன் வந்துசேர்ந்தார். போலீஸ் வந்து வழக்கு பதிவுசெய்தார்கள். அண்ணாச்சியின் நண்பர்கள் மாறிமாறி ·போனில் அழைத்துக்கொண்டே இருந்தார்கள்.

மழைகொட்டிக்கொண்டெ இருந்தது. குடை இருந்தாலும் பாதி உடைகள் நனைந்துவிடன. எங்களூரில் சாவுக்கு மழைபெய்வது ஒரு நிறைவான விஷயம் என்ற நம்பிக்கை உண்டு. அண்ணாச்சியின் இந்துநாடார் குலவழக்கப்படி சொந்த நிலத்திலேயே புதைப்பது வழக்கம். ரயில்பாதை தாண்டி அவரது அப்பா அம்மா சமாதிகள் இருந்த தென்னந்தோப்புக்குள் அவர்களுக்கு அருகே அண்ணாச்சிக்கு குழி வெட்டப்பட்டிருந்தது. அங்கே அவரை அடக்கம்செய்தார்கள்.

நான் அண்னாச்சியை பார்க்கவேயில்லை. பொதுவாக நான் சடலங்களைப் பார்ப்பதில்லை. அவரது இனிய சிரிக்கும் முகம் என் மனதில் நிறைந்திருந்தால் போதும் என்று விட்டுவிட்டேன். அடக்கம் நடந்து முடிந்தபோது ஒவ்விருவராக கிளம்பினார்கள். நாங்கள் கிளம்பும்போது கொஞ்சநேரம் எங்காவது திறந்த வெளிக்குப் போகவேண்டும் போலிருந்தது. கன்யாகுமரிக்குச் சென்றோம்.

அலைகளே இல்லாத கடல். மழைக்காலத்துக்குரிய வெளிறிய நிறம். வசந்தகுமார் ”அவ்ளவுதான் ஜெயன்..ஒண்ணும் பெரிய விசயம் கெடையாது. மறந்துட்டு வாழ்க்கை போய்ட்டே இருக்கும்…”என்றார். நான் ஆம் என்றேன்.

மாலை வசந்தகுமார் ஏற்கனவே பதிவுசெய்திருந்த 5 மணிக்கு ரயிலில் கிளம்பினார். நெய்தல் கிருஷ்ணனும் காலச்சுவடும் இணைந்து அண்ணாச்சிக்கு ஒரு அஞ்சலிக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அதற்குச் சென்றபோது பாதியாகிவிட்டிருந்தது. அ.கா.பெருமாள் பேசிக்கொண்டிருந்தார். அண்னாச்சியைப் பற்றிசில சொற்கள் சொன்னேன். நானே நினைத்துக்கொள்ளக்கூடிய சில சொற்கள். இன்னும் பலவருடங்களுக்கு.

நன்றி : ஜெயமோகன்.இன்

நிஜம்

நேற்றைப்போலவே
இன்றைப்போலவே
ஏதுமின்றி
கடந்துபோயிற்று
நாற்பத்தாறாவது ஆண்டும்

காலையிலும் மாலையிலும்
உடன்வரும் நெடிய நிழலை
உச்சிப்போதில்
நாய்க்குட்டியென
காலடியில்
பதுங்கிவரும் நிழலை
அறிவேன்

அறிந்திலேன் இதுவரை
நிழலின் நிஜத்தை

- ராஜ மார்த்தாண்டன்

ராஜமார்த்தாண்டன் 60 : சூடேறாத தீவிரம்

ராஜமார்த்தாண்டன் 60- விழா


சமணத்துறவிகள் பிட்சை ஏற்கும்போது உணவை எந்த வித பாத்திரத்திலும் வாங்க மாட்டார்கள். இலையில்கூட பெற மாட்டார்கள்.வெறும் கையில் வாங்கி நேரடியாக உண்பார்கள். கவிதையை வெறும் இதயத்தால் வாங்கக்கூடிய விமரிசகராக நிற்கிறார் ராஜமார்த்தாண்டன் - ஜெயமோகன்

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்

தமிழின் முக்கியமான புனைவுகள்: பட்டியல்: ராஜமார்த்தாண்டன்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...