அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அவமானம் பழகுங்கள்!- தயாரிப்பாளர் டி.சிவா

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   01 , 2019  15:28:42 IST


Andhimazhai Image
என்னுடைய 36 வருட அனுபவத்தில் சினிமா புதிது புதிதாக கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போது ஒரு படம் பண்ணினாலும் அதில் நான் புதிதாகக் கற்றுக்கொள்ள ஒன்று இருக்கும். அது முடிவிலாத ஒன்றாகும். ஒரு முறை சுஜாதா சினிமா என்றால் என்ன? என்ற கேள்விக்கு பின்வருமாறு சொன்னார் -  “காத்திருத்தல். காத்திருத்தல். காத்திருத்தல்”. காத்திருத்தல்தான் ஜெயிக்கும் வரைக்குமான விஷயம். காத்திருத்தலுக்கான மகிழ்ச்சியை நாம் உருவாக்கிக் கொண்டால்தான் நாம் வெற்றி பெறுவோமே தவிர, அது நம் வேகத்துக்கு வராது.
 
இங்கே சாதிக்க வேண்டும் என்றால் வெற்றி பெற வேண்டும் என்றால் அவமானம் பழக வேண்டும். நீங்கள் ஜெயித்தால் கூட ஊர் பேர் தெரியாதவன் கூட யூ டியுப் சேனலில் உங்களைக் கெட்ட வார்த்தை போட்டுத் திட்டுவான். 120 பேர் இருக்கும் யூனிட்டில் ஒரு 5 பேர் தகராறு பண்ணினாலும் அன்று ஷூட்டிங் கேன்சல் ஆகிவிடும். வியாபாரம் பண்ணுமிடத்தில் அவமானம் வரும். தாங்கவேண்டும். நாம் வாய்ப்புக் கொடுத்து வளர்ந்த நடிகன் நம்மையே ஏறி மிதிப்பான். இப்படி சகலவிதமான அவமானங்களையும் தாங்க வேண்டும். நட்டமானாலும் அவமானம் கிடைக்கும். வெற்றிபெற்றாலும் அவமானம் கிடைக்கும். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளப் பழக வேண்டும்.
 
வெளியிலிருந்து பார்க்கும் கவர்ச்சி உள்ளே கிடையாது. உள்ளே இந்த சூழல்கள் கொடுக்கும் ஸ்ட்ரெஸ்சைத் தாண்டி நாம் கிரியேட்டிவாக செய்கிறோம்.
 
பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து அது முடியாததால், படம் தயாரித்தால் எல்லோரையும் பார்த்து விடலாம் என ஒரு படம் தயாரித்தேன். இந்த ஒரு படத்தோடு முடித்து விடுவோம் என்று சொல்லிச் சொல்லியே கடந்த முப்பத்தாறு வருடங்களில் இருபத்தைந்து படங்கள் பண்ணி விட்டேன்.
 
படம் எடுக்க வரும் நீங்கள் இன்றைய சூழ்நிலையில் முழுமையாக படத்தை முடிக்க பைனான்ஸ் செட் அப் இருந்தால் மட்டுமே முடியும். அப்போதெல்லாம் ஒரு படத்துக்கு பூஜை போடும் வரைதான் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்தோம். நடிகரை ஃபிக்ஸ் பண்ணி இளையராஜா சாரை குத்து விளக்கு ஏற்ற வைத்து பூஜை போட்டவுடனே படம் விற்றுவிடும். தேவைப்பட்டால் மொத்த தயாரிப்பு செலவில் 20% மட்டும் நாம் பைனான்ஸ் பண்ண வேண்டி வரும். இதெல்லாம் 1995 வரை நடந்தது. இப்போது அவுட்ரைட் எல்லாம் கிடையாது, இனிமேல் டிஸ்ட்ரிபியூஷன்தான் எல்லாம் என்றபோது எல்லாமே அடிவாங்கியது. நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்து படம் பண்ணுவார்கள். படம் ஓடினால் மொத்த லாபமும் அவருக்கு. விழுந்தால் மொத்த நட்டமும் அவருக்கு. இதனால் என்ன நன்மை என்றால் பத்து படம் வெளியிட்டால் இரண்டு மூன்று விழுந்தாலும் மற்ற லாபத்தை வைத்து சமாளிக்க முடிந்தது. இப்போது உள்ள டிஸ்ட்ரிபியூஷன் முறையில் படம் ஓடினால் மொத்த லாபமும் கிடைக்காமல் ஆனால் நட்டமானால் முழு நட்டமும் நமக்கு (தயாரிப்பாளருக்கு) என்று மாற்றப்பட்டுள்ளது. முப்பது வருடத்துக்கு முன் தொழில் பண்ணிய தயாரிப்பாளர்களில் ஒரு ஐந்து பேர்தான் இப்போது இருக்கிறோம். இந்தப் புதுமுறையினால் பலரும் தொழிலை விட்டு போய்விட்டனர். தமிழ் சினிமாவின் டிரென்ட் செட்டர் குஞ்சுமோன், ஆபாவாணன் ஆகியோர் இன்று படத் தொழிலில் இல்லை.
 
இப்போதுள்ள சூழலில், நடிகனை அடிப்படையாகக் கொண்டுதான் வியாபாரம் உள்ளது. ஸ்டார் வேல்யூ இருந்தால்தான் குறைந்தபட்சம் எஃப் எம் எஸ் சும், டிஜிட்டலும் விற்கும்.
 
படம் ஆரம்பிக்கும் முன் கதையை தெரிந்த உங்கள் நலம் விரும்பிகளிடம் சொல்லுங்கள். அதே போல் டபுள் பாசிட்டிவ் எடுத்து வந்து காட்டுங்கள். எல்லோரிடமும் கருத்துக் கேளுங்கள். இவற்றை உள்வாங்கிக் கொண்டு ஃபைனல் காப்பிக்குப் போனீர்கள் என்றால் அந்தத் தயாரிப்புக்கு ஒரு மதிப்புக் கிடைக்கும்.
 
ஒன்று பெரிய டைரக்டர் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய ஸ்டார் இருக்க வேண்டும். அதுதான் இன்று விற்பனையாகும் சரக்கு.
 
இரண்டும் இல்லாமல் புதுமுகங்கள் என்றால் பலரிடம் கருத்துக் கேட்டு ஃபைனல் காப்பிக்கு செல்வது நல்லது.
 
படத் தயாரிப்பு செலவைப் பொருத்தமட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் சொந்த ஆட்களை, கருவிகளை வைத்துள்ளீர்களோ அவ்வளவுக்கு அது நல்லது. இங்கே ஃபெப்சி என்பது பல நிர்ப்பந்தங்களைத் தருகின்றது. தொழிலாளர் அமைப்பினை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது என்னை அளவுக்கு மீறி நிர்ப்பந்திக்கும்போது திரையில் என் படத்தை அது வர விடுவதில்லை. ஒரு நாளைக்கு ஷூட்டிங் செலவு நாலு லட்சம் என்றால் அதில் ஆர்ட்டிஸ்ட் அசிஸ்டெண்ட்க்கு பேட்டா, எல்லோரும் சாப்பிட சாப்பாட்டுக் கணக்கு 20 ஆயிரம் அதைப் பரிமாற 15 ஆயிரம் எல்லாம் அடக்கம்.
 
உலகில் எந்தத் தொழிலிலும் இது இராது. ஒரு நடிகை வருகிறார் என்றால் அவருக்கு 30 ஆயிரம் ரூபாயில் ஓட்டல் அறை, அசிஸ்டெண்ட்க்கு நாலாயிரம் ரூபாயில் ரூம், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் பேட்டா, இது போக ஓட்டல் பில், அவங்க மும்பையில் இருந்தும் ஹைதராபாத்தில் இருந்தும் வர ஆறு பேருக்கான விமான டிக்கெட்கள் – இவை எல்லாம் சினிமாவுக்கு வெளியே ஆகும் செலவுகள். சின்ன சின்ன நடிகை வரை ஐயாயிரம், ஆறாயிரம் பேட்டா, ஒரு படத்தின் அன்றாட செலவில் இருபது சதவீதம், ஆர்ட்டிஸ்ட்களின் அசிஸ்டெண்ட் பேமென்ட் ஆக இருக்கும். அதே போல் புரடக்சன் பாய்ஸ் இத்தனை பேர் வைக்க வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கின்றன. இவைதான் சினிமாவைக் கெடுக்கும் விசயங்கள்.
 
ஆனால் எல்லோருமே இவற்றை எல்லாம் வைத்துதான் எடுக்கணும் என்ற கட்டாயம் கிடையாது.
 
நீங்கள் ஒரு சுதந்திரத் தயாரிப்பாளராக ஆகவேண்டும் என்றால், உங்கள் இன்வெஸ்ட்மென்ட்டில் ஒரு பகுதியை சின்னச் சின்னக் கருவிகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இவை எல்லாம் ஆன்லைனில் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் படத் தயாரிப்பு செலவில் ஒரு பெரும் பகுதியைக் குறைக்க முடியும்.
 
ஒரு இருபத்தைந்து லட்சம் முதல் போட்டால் குட்டி குட்டிக் கருவிகளை வாங்கிப் போட்டு, கேமிரா மட்டும் இல்லாத ஏனைய கருவிகளைக்கொண்ட  தனி யூனிட் ஒன்றையே உருவாக்கிவிடமுடியும். இது பற்றி கேமிரா மேனுக்கு புரிதல் இருக்க வேண்டும். இந்த சமரசத்துக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும்.
 
25 பேர் மட்டும் உள்ள யூனிட்டை வைத்து ஷூட் பண்ணிப் பாருங்கள். தரம் சிறப்பாக வரும். ஆனால் எண்பது, தொண்ணூறு பேரை வைத்து பேட்டா கொடுத்து சாப்பாடு கொடுத்து, பிரேக் விட்டு எடுத்துப் பார்த்தால் படத்தின் செலவுதான் ஏறிக் கொண்டே போகும். அந்தப் பணத்துக்கும் தரத்துக்கும் சம்பந்தமே இருக்காது.   
 
இன்றைக்கு மொபைல் கேமிராவில் படம் எடுத்து ஆஸ்கார் அவார்டு வரை போகின்றனர். என்ன உள்ளடக்கத்தைக் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியமானது. உங்களின் மேக்கிங் ஸ்டைலில் கொஞ்சம் வீக்காக இருந்து உள்ளடக்கம் வலிமையாக இருந்ததென்றால் போய்ச் சேர்ந்து விடும்.
 
ஒரு படம் ஒரு கோடி ரூபாய் வரை ஆகும் என்றால் அதில் என்னால் நாற்பது லட்சம் வரை குறைத்துத் தர முடியும். என்னால் அந்த பிளானை போட்டுத் தர முடியும்.
 
ஒரு படம் கொல்கத்தாவில் 18 நாள் ஷூட் பண்ணினோம். அங்கே தயாரிப்பு செலவு ஒரு நாளைக்கு குறைந்தது 8 லட்சமாவது ஆகும். 18 நாள் எடுத்திருந்தால் ஒரு கோடியே முப்பது லட்ச ரூபாய் ஆகியிருக்கும். ஆனால் எங்கள் டைரக்டர் முப்பது லட்சம் ரூபாயில் முடித்துக் கொடுத்தார். அதற்குக் காரணம் நமக்கான சொந்தமான யூனிட், சொந்தமான செட் அப். 26 பேர்தான் மொத்த யூனிட்டே. அப்புறம், நாம் எப்படி புத்திசாலித்தனமாக வேலையை செய்கிறோம் என்பதும் இருக்கிறது.
 
அங்குள்ள ஒரு நட்சத்திர  ஓட்டலில் பத்து மணி நேரம் ஷூட்டிங் நடத்த  வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் இதற்காக செலுத்த வேண்டும். ஒரு தடவை உள்ளே நுழைந்தால் குறைந்தது ஐந்து லட்சம் கொடுக்க வேண்டும். அதில் ஒரு குறிப்பிட்ட சூட்டில் கொல்கத்தாவின் மொத்த வியூவுமே தெரியும். அங்கேதான் டைரக்டரின் இன்வால்வ்மெண்டும் புத்திசாலித்தனமும் உதவும். ஓட்டலில் ரூமை ஆன்லைனில் புக் பண்ணி, ஒரு சூட்கேசில் கேமிராவை வைத்து எடுத்துக் கொண்டு இரண்டு பேருடன்  அறைக்குள் நுழைந்தனர். இரண்டு ஆர்ட்டிஸ்ட் உள்ளே போனார்கள். ஒரே ராத்தியில் பெட் ரூம், பாத் ரூம் காட்சிகளை எடுத்து முடித்து, காரிடார், லிப்ட் ஷாட் எடுத்து விட்டு காலையில் ஓட்டலில் தரும் காம்ப்ளிமென்ட் டிபனை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர். செலவு வெறும் 48 ஆயிரம்தான். இதில் யாரையும் ஏய்க்கவில்லை. கொல்கத்தாவின் ஒட்டுமொத்த வியூவையும் எடுத்தாகி விட்டது. இது வெறுமனே தயாரிப்பாளரால் சாத்தியமாகாது. இவ்வாறு யோசிக்கும் டைரக்டரும் அமைய வேண்டும். கேமிரா மேனும் அமைய வேண்டும். இது மாதிரி மாத்தி யோசிக்கும் ஆட்கள் வர வேண்டும்.
 
இந்தத் தொழிலில் இனிமேல் யாரையும் நம்பிக் கொண்டு இருக்காமல் நாமே சொந்தமாக யூனிட்டை உருவாக்கி எவ்வளவுக்கு எவ்வளவு செலவை இறுக்கிப் பிடிக்கிறோமோ அந்தளவுக்கு வரமுடியும் என்ற நிலை உண்டாகிவிட்டது.
 
ஸ்டார் வேல்யூவை விட்டுவிட்டு பரிட்சார்த்தமான படங்களை சுதந்திரத் தயாரிப்பாளராக செய்யலாம்.
 
பிரபலமான ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்டும் சொந்தத் தயாரிப்புக்கு போய்விடுவதால் சுதந்திரத் தயாரிப்பாளர் தரப்பு பலவீனமாகி வருகிறது. ஆர்ட்டிஸ்ட் கைவசம் இருந்தால் நான்கைந்து படங்கள் வைத்துக் கொண்டு வியாபாரத்தில் மேல்கை எடுக்கலாம். ஆர்ட்டிஸ்ட் நம் வசம் இருப்பதால் டிஜிட்டலிலும் நல்ல விலை வைக்க முடியும். மீடியம், ஸ்மால் பட்ஜெட்டில் படம் எடுக்கும் நம்மால் அதை எல்லாம் செய்ய முடியாது. ஆனால் படத்தின் உள்ளடக்கம் சிறப்பாக இருந்தது என்றால் எல்லாவற்றையும் ஸ்கிப் பண்ணி வந்து விடலாம். தொரட்டி நல்ல உதாரணம். நல்ல விமர்சனம் வந்தது அதற்கு. கணிசமான விலைக்கு அதன் சேட்டிலைட் உரிமை போயிருக்குது.
 
இப்போதுள்ள நடைமுறைகளில் பலவற்றை நாம் மாற்றியாக வேண்டும். படம் எடுத்து முடித்து அதன் புரோமொசனுக்காக நிகழ்ச்சி வைத்தால் கூட அதற்கும் டிராவலிங் பேட்டா, விமான டிக்கெட் என செலவு செய்தாக வேண்டியுள்ளது. ஷூட்டிங் நாட்களில் உணவுக்கான மெஸ் பில் 20 ஆயிரம். அதைப் பரிமாற 15 ஆயிரம் எனப் பிடுங்குகிறார்கள். இந்த நடைமுறையினை விட்டு வெளியே வரவேண்டும். தயாரிப்பாளர் சங்கம் சில முயற்சிகளை எடுத்து வருகிறது. கேரள சினிமாத்துறையில் எல்லாம் பரிமாற தனி ஆட்கள் எல்லாம் இல்லை. பஃபே தான். ஆட்கள் கம்மிதான். நேரத்துக்கு சூட்டிங் ஆரம்பித்து விடுவார்கள். ஆர்ட்டிஸ்ட்டுக்கு இத்தனை அசிஸ்டெண்ட் வைத்துக் கொள்ள மாட்டார்கள். கும்பல் கம்மியாக இருக்கும்.
 
ஆனால் இங்கே இருபது பேர் செய்ய வேண்டிய வேலையை நூறு பேர் செய்வர். அதனால் தாமதம் வந்தே தீரும். ஆனால் புதிதாக தயாரிக்க வருபவர்க்கு இந்தத் தொல்லை எல்லாம் இல்லை. சுயமாக முடிவெடுத்து ஆட்களைக் குறைந்த அளவில் வைத்துப் படமெடுக்கலாம். பெரிய ஸ்டார் படங்களில் மட்டுமே ஃபெப்சி தலையிடும். சிறிய பட்ஜெட் படங்களில் அவர்கள் நிர்ப்பந்தம் தர மாட்டார்கள்.
 
எனவே ரெகுலர் சினிமா யூனிட் வேலைமுறையில் இருந்து விடுபட்டு திறமையான படம் எடுக்க முன்வாருங்கள்.
 
நீங்கள் நம்பகமான நபர் ஒருவரை மேனேஜராக வைத்துக் கொள்வது மிக அவசியம். படம் முடியும்போது சங்கம் அல்லது கில்டுவில் உறுப்பினராகி விடுங்கள். இது சென்சாருக்கு போவதற்கு தேவை.  படம் ஆரம்பிக்கும்போதே உறுப்பினராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இதற்கான கட்டணம் மூன்று லட்ச ரூபாய்.
 
யூனியன் ஆட்கள் யாரையும் அமர்த்தாமலே நீங்கள் உங்களுக்கு வேண்டிய ஆட்களை வைத்து படத்தின் ரஷ் காப்பி வரை தயாரித்து விட்டீர்கள். இனி அதை போஸ்ட் புரோடக்சனுக்கு கொண்டு செல்லப் போகிறீர்கள். இந்த நிலையில் யூனியன் இப்படத்தை மேற்கொண்டு கொண்டு செல்ல எதிர்க்குமா? இல்லை. நிச்சயமாக இல்லை. போஸ்ட் புரோடக்சனுக்கும் யூனியனுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. டப்பிங், போன்றவற்றில் யூனியன் கிடையாது. தெருவுக்கு நான்கு டப்பிங் தியேட்டர் உள்ளது. அதனால் நீங்கள் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லாமல் போஸ்ட் புரொடக்சன் வேலைகளை செய்ய முடியும்.
 
யூனியனைப் பொருத்தமட்டில் பெரிய படங்கள், ஸ்டார் படங்கள், அதிக வேலை வாய்ப்பு உள்ள படங்கள் இவற்றில்தான் அவர்கள் தலையீடு இருக்கும். புதிதாக வருவோரையோ, லோ பட்ஜெட் படத்தையோ அவர்கள் எதுவும் செய்வதில்லை.
 
மூன்று கோடிக்குக் குறைவான பட்ஜெட் படத்தில் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்றும் தேவைப்பட்டால் யூனியனில் உள்ளோரை சேர்த்துக் கொள்வோம் என்றும் தயாரிப்பாளர் சங்கம், ஃபெப்சியிடம் பேசியுள்ளது.
 
புதிதாக வருபவர்களுக்கு டப்பிங் உட்பட போஸ்ட் புரொடக்சன் வேலைகளைப் பற்றியும் அதன் செலவு பற்றியும் அறிவு இல்லை என்றால் பாஃப்டா போன்றவர்களை அணுகினால் இது பற்றி தெளிவுபடுத்துவர். அல்லது சீனியர் தயாரிப்பாளர் ஒருவரை இது போன்ற ஆலோசனைக்காக வேலைக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதைப்போலவே விசுவாசமான மேனேஜர் ஒருவரை படத்துக்கு அமர்த்திக்கொள்வது மிக மிக முக்கியம். சினி பீல்டின் மொத்த அடிப்படையே அவரிடமிருந்துதான் தொடங்கும். எனவே மேனேஜரை மிக மிக நம்பகமான ஆளாகப் பார்த்து நியமிக்க வேண்டும்.
 
படத்தை ரிலீஸ் பண்ண, அதற்கான விளம்பரங்கள் தர என, குறைந்தது 25 லட்சம் ரூபாயாவது ஒதுக்கி வைக்க வேண்டும். சுதந்திரத் தயாரிப்பாளர்களுக்கு எந்த யூனியனும் இடைஞ்சல் தராது. செலவைக் குறைத்து திட்டமிடுங்கள். நீங்கள் திட்டமிட்டு செய்யும் ஒவ்வொரு பைசாவும் ஸ்கிரீனில் இருக்க வேண்டும்.
 
படத்தின் பி.ஆர்.ஓ அல்லது புரொடக்சன் மேனேஜர் மூலம் படத்தை வாங்குபவர்களை பிரிவியூவில் படம் பார்க்க வரவைக்க வேண்டும். படத்தின் உள்ளடக்கம் ஸ்ட்ராங் ஆக இருந்தால் முதல் இரண்டு ஷோவிலேயே வியாபாரம் ஆகிவிடும். சராசரி படம் கொஞ்சம் தாமதமாகலாம். சுமாரான படத்தை பார்க்கவே மாட்டார்கள். ஆக சரக்கு ஸ்ட்ராங் ஆக நிற்கணும். எட்டுத்தோட்டாக்கள் நல்ல உதாரணம். அந்தப் படம் பிரிவியூவிலேயே உடனடியாக விற்று விட்டது. மைனாவும் அப்படி வியாபாரம் ஆன ஒன்றுதான். எட்டுத்தோட்டாக்கள் டீம் நல்ல பேரை சம்பாதித்ததால் அதே டீமின் ஜீவி படத்துக்கு டிஜிட்டலும் சேட்டிலைட்டும் நன்கு விற்றுவிட்டது.
 
படம் நன்றாக மட்டும் இருந்து விட்டால், ஒரு ஷோ போதும். பார்த்தவர்களே காட்டுத் தீ போல் பரப்பிவிட்டு பி.ஆர்.ஒ. வேலை அதுவாக நடந்துவிடும்.
 
படத்தை விற்கும்போது எந்த எந்த ரைட்சை விற்கிறீர்கள் என்பதை ஆவணங்களைப் படித்து புரிந்து கொண்டு கையெழுத்துப் போடுவது நல்லது. அவுட்ரைட் விற்பனை என்பது படத்தின் எல்லா உரிமைகளையும் விற்பதுதான். அது படத்தின் பர்ஸ்ட் காப்பியைத் தருவது. அவுட்ரைட்ஸ் வாங்கியவர் அப்படத்தின் எல்லா வணிக சாத்தியத்தையும் பயன்படுத்துவார். உங்களிடம் அதன் பின் எந்த உரிமையும் அப்படத்தின் மீது இருக்காது. 
 
-கற்பகவிநாயகம்
 
(BOFTA  திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளர் டி.சிவா நிகழ்த்திய உரையிலிருந்து)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...