அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பலே பாண்டியா.....! பாமரன் கட்டுரை

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   15 , 2014  12:16:51 IST


Andhimazhai Image
 
 
அறையில் இருந்து வரும் வழியில் இடது பக்கம் அந்தக் குளக்கரை இருக்கிறது. பலமுறை அதைக் கடக்கும் முன்னர் வண்டியை நிறுத்தி உச்சா அடித்துவிட்டு அங்கு நின்று அதனை ரசித்துக் கொண்டிருப்பேன். மரங்கள் சூழ கொக்குகள் உலவும் இடம் அது. அன்றும் அப்படித்தான். வானில் பறக்கும் நாரைகளை நின்று ரசித்துக் கொண்டிருந்தேன். ஒரு விமானம் போல மேலெழுந்து நேர்த்தியாகப் பறந்து செல்லும் காட்சி அற்புதமாக இருந்தது. சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தபடி அல்லியும் தாமரையும் பூத்துக் கிடந்த அந்தக் குளத்தை கண்களால் விழுங்கியபடி இருந்தேன். ரொம்பநாள் ஆயிற்று. இப்படி ஓர் ரம்மியமான காட்சியும்... சுற்றியிருக்கும் அமைதியும் கிடைத்து. 
நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே..... அப்படியெல்லாம் தொடர்ச்சியாக ஒரு இருபத்து நான்கு மணிநேரம் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது என்று. 
 
இயற்கைக்கு அது பொறுக்காது. அழைத்தது அலைபேசி. எடுத்துப் பார்த்தால் சமூக ஆய்வாளர் சித்தானையிடம் இருந்து அழைப்பு. எடுத்ததுமே “அண்ணாச்சி உங்களுக்கு யாராவது தகவல் சொன்னார்களா?” என்றார். இல்லையே தோழா ஏன்? என்ன தகவல்? என்றேன். ”நம்ம பாண்டியன் அண்ணாச்சி போய்ட்டாரு. இப்பதான் தகவல் வந்தது.... டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பிட்டல்ல வெச்சிருக்காங்க....” மறுமுனையில் சித்தானை ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். தோழர்….. போயிட்டீங்களா தோழர்…..... கண்களை உடைத்துக் கொண்டு குளத்தில் இருந்து நீர் தாரை தாரையாய்.... என்ன செய்வது? ஏது செய்வது என்று ஒன்றும் புரியாமல் அந்த இடத்திலேயே கொஞ்சநேரம் நின்றிருந்தேன். ஆக….. பாண்டியன் போயாச்சு.
 
நம்மில் பலருக்கு அலெக்ஸ் பாண்டியனைத் தெரியும் அல்லது அட்டாக் பாண்டியனைத் தெரியும்….. ஆனால் எம்.எஸ்.எஸ். பாண்டியனை?
 
நான்கைந்து வருடங்கள் இருக்கும். புது டில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் இருந்து தோழர் கலையரசன் வந்திருந்தார். கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென “உங்க ரசிகர் ஒருத்தர் உங்களோடு பேசணும்ன்னு ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருக்கார். இருங்க அவருக்குப் போனைப் போடுறேன்” என்றபடி யாரையோ அழைத்தார். மறுமுனையில் எடுத்ததும் கலை ”சார்  இருங்க பாமரன் பேசறார்” என என் கையில் கொடுக்கிறார். வாங்கி வணக்கம் என்றதுதான் தாமதம். “வணக்கம் நான் எம்.எஸ்.எஸ். பாண்டியன் பேசறேன்” என்றதும் அடிவயிறு கலங்கி விட்டது. ஆடிப் போய்விட்டேன் நான். என்னது மறுமுனையில் பேசுவது எம்.எஸ்.எஸ். பாண்டியனா? அதுவும் என்னோடா? அந்த மாபெரும் மனிதருக்கு என்னைத் தெரிந்திருக்கிறதா? கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது. “அய்யா…. உங்களப் பத்திப் பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா நேர்லதான் சந்திக்க வாய்ப்பு வரலை” என்று ஏதேதோ பேசிக் கொண்டு செல்கிறேன். “அதெல்லாம் விடுங்க சார்…. நான் உங்க எழுத்துக்களுக்கு ரசிகன்” என்கிறார் தோழர். நான் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போகிறேன். தமிழகம் குறித்தும், திராவிட இயக்கம் குறித்தும், பெரியாரின் மகத்தான பங்களிப்புகள் குறித்தும் தென்னகம் தாண்டி வடக்கு-கிழக்கு என நாடு முழுக்கக் கொண்டு சென்ற அந்த மனிதன் எங்கே? வெகுசன தளத்தில் வெட்டிக்குச் ஜல்லியடித்துக் கொண்டிருக்கிற நானெங்கே? இன்னும் பச்சையாகச் சொன்னால் இந்த நாட்டையும் தாண்டி பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களுக்கு தமிழ் மண்ணின் மகிமையை சுமந்து சென்றவர் அவர். ஆனால் அவர் எழுதியதெல்லாம் ஆங்கிலத்தில். அவர் எழுதிய “பிராமணர் – பிராமணரல்லாதோர்” நூலாகட்டும் எம்.ஜி.ஆர் குறித்து அவர் எழுதிய “இமேஜ் டிராப்” நூலாகட்டும் உலகப் புகழ் பெற்றவை. ஒரு முறை பெங்களூர் சென்றிருந்த போது அவரது “பிராமணர் – பிராமணரல்லாதோர்” ஆங்கில நூலை வாங்கி வந்தேன். பிரித்துப் படிக்க உட்கார்ந்தால் இரண்டு பத்தி படிப்பதற்குள் டங்குவார் அந்துவிட்டது. ஒரு பத்தியைப் படிக்க வேண்டுமென்றால்கூட அதைப் புரிந்து கொள்வதற்கு மேலும் பத்து புத்தகங்கள் படித்தாக வேண்டும். நானெல்லாம் கோனார் நோட்ஸ் மட்டுமே படித்து வளர்ந்த ஜாதி. இவருடையதோ டெக்ஸ்ட் புக். எப்படியோ மூணு மாதம் முக்கி  முனகிப் படித்து முடித்தால் போதாக்குறைக்கு நூலின் கடைசியில் இன்னும் படிக்க வேண்டிய துணை நூற்களின் பெரும் பட்டியல் வேறு. அவருடைய நூல்களைப் படிக்கிற எவருக்கும் இந்த ஆள் மனுசனா அல்லது ஏதாவது ரோபாட்டா என்கிற சந்தேகம் சத்தியமாய் வரும்.
அவரும் வேறிருவரும் சேர்ந்து எழுதிய “Muslims, Dalits and the Fabrication of History” புத்தகத்துக்கு Flipkart இணைய தளத்தில் மாதா மாதம் தவணை முறையில் கட்டுவதற்கான E M I திட்டமே வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவனவன் வீடு வாங்குவதற்கு…. வண்டி வாங்குவதற்கு  EMI யில் பணம் கட்டினால் இவருடைய புத்தகம் வாங்குவதற்கே EMI திட்டம் என்றால் அவருடைய எழுத்துக்கு இருக்கும் வரவேற்பை நாம் புரிந்து கொள்ளமுடியும். இதுதான் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் எழுத்துக்குள்ள மகிமை.
 
 
அதன் பிற்பாடு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது அலைபேசியில் அழைப்பார். இருவருமே இரவுக் கோட்டான்கள் என்பதால் பெரும்பாலும் பதினோறு மணி சுமாருக்கு இணையத்தள Chat ல் வருவார். பத்துப் பதினைந்து நிமிடங்கள் தொடரும் எமது உரையாடல். அவரது அறச்சீற்றம் நேர்மையற்ற பலரை அவரிடம் இருந்து ஒதுங்க வைத்திருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு அக்டோபர் மாதத்தில் ஓர் நாள் எந்தக் கழிசடை காயப்படுத்தியதோ தெரியாது.  Tamilnadu is so against me என அவரது இணையதள கலந்துரையாடல் ஆரம்பமாகிறது. தலைவனை யாரோ காயப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொள்கிறேன். “தலைவா! அப்படியெல்லாம் இல்லை. தமிழ்நாடு உங்களுக்கு எதிராக இல்லை. தமிழ் நாட்டில் உள்ள சில தறுதலைகள்தான் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். நீங்கள் எங்களுக்குக் கிடைத்த சிந்தனைச் சொத்து.” என எழுத ஓரளவு ஆறுதலடைகிறது அவரது மனசு. ஆனாலும் என் மனசு அடங்காமல்…
 
.” தலைவா.... எனக்கு அவ்வளவா ஆங்கிலம் வராது. ஆனால் உங்களது எழுத்தையும், உங்களது உணர்வையும்,உங்களது நேர்மையையும் நிச்சயம் புரியும். உங்களைச் சந்திக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன்.” 
 
என எழுத ”நிச்சயம் டிசம்பரில் சந்திக்கலாம்” என முற்றுப் பெறுகிறது அன்றைய உரையாடல். 
ஒவ்வொருமுறை கலந்துரையாடும் போதும் டெல்லிக்கு வாருங்கள்… டெல்லிக்கு வாருங்கள்….. என ஓயாது அழைத்துக் கொண்டிருந்தார். எனக்கு ஆத்மாவில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஆனால் ஆஸ்த்துமாவில் அபார நம்பிக்கை உண்டு. ஏனெனில் பாரம்பரியமாக எனக்குக் கிடைத்த குடும்பச் சொத்து அது ஒன்றுதான். குளிரில் டெல்லிக்குப் போனால் சவப்பெட்டியில்தான் திரும்ப வேண்டியிருக்கும் என்கிற பயம் உள்ளுக்குள்.
 
சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்று ஒருமுறை சத்தமில்லாமல் டெல்லிக்கு டிக்கெட் போட்டுவிட்டு தலைவனுக்குப் போன் போட்டால் பஞ்சாப்பில் இருக்கிறேன் என்கிறார் அவர். நல்லவேளை டெல்லி போய் இறங்கி போனைப் போடவில்லையே என எங்களை நாங்களே மெச்சிக் கொண்டு டிக்கெட்டை ரத்து செய்தோம். ஒரு வழியாக தோழனைச் சந்தித்தது கடந்த ஆண்டு ஜூலையோ ஆகஸ்டிலோ தான். வேளச்சேரி வீட்டிற்கு வழி சொல்லிவிட்டு கனிவோடு காத்துக் கொண்டிருந்தார் அந்த மகத்தான மனிதர். என் இளம் நண்பன் சேகுவேராவும் நானும்தான் சென்றிருந்தோம் அவரது வீட்டுக்கு.
 
என்னை அம்போவென்று விட்டு விட்டு அவரும் அவனுமே மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்தார்கள். உலக சினிமா அவரது இமேஜ் டிராப் நூல், JNU வில் போதிக்கும் பாடத்திட்டங்கள் என என்னென்னவோ நீண்டது பேச்சு. நான் வாயைப் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தேன். கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது. பேச்சுக்கிடையில் மகள் பிரீத்தி வந்தார். அந்தச் சிறுமியும் இப்போது எழுத ஆரம்பித்துவிட்டதாக உற்சாகமாகச் சொன்னார். துணைவியார் ஆனந்தி பணிக்குச் சென்றிருந்தார் அந்த வேளை.
 
இரவு உச்ச நீதி மன்ற வழக்குரைஞர் பாரிவேந்தனுக்கு அலைபேசினேன். தோழனுடைய உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரது துணைவியார் புதுதில்லிக்கு விரைந்து கொண்டிருப்பதாகவும், நாளை இரவுக்குள் தோழனை சென்னை கொண்டுவந்து விடுவார்கள் எனவும் தகவல் சொன்னார். மனம்  முழுக்க சோகம் பிசைய சென்னை நோக்கி பயணத்தைத் துவக்கினோம். அந்த எளியவனின் இறுதிப் பயணத்தைக் காண.
டெல்லியில் அவரது நிழலாய்த் துணையிருந்த தோழன் கலையரசன் கட்டியணைத்துத் தழுதழுத்தார். வெள்ளிக்கிழமை இரண்டு மணி நேரம் வகுப்பு எடுக்கிறார் என்றால் அதற்காக அந்த வாரம் முழுவதும் பல நூல்களைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டு பரிட்சைக்குப் போவது போல தயார் ஆவாராம். ”அவர் வகுப்பு எடுக்கிறார் என்றால் பல்கலைக் கழக வளாகம் முழுக்க பரபரப்பு பற்றிக் கொள்ளும் தோழர்” என்றார் கலை. அவர் எகானாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லியில் எழுதி வந்த கட்டுரைகளைக் கண்டு அறிஞர் உலகமே ஆச்சர்யப்பட்டிருக்கிறது. அவரது நூல்கள் தமிழில் வெளிவராதது நம் அனைவருக்குமே பேரிழப்பு. தொலைக்காட்சி நிலைய வாசல்களிலேயே பாயும் தலைகாணியுமாய் படுத்திருக்கும் நம் ”படைப்பாளிகள்” மத்தியில் எந்தத் தொலைக்காட்சிக்கும் பேட்டியளிக்கச் சம்மதித்ததில்லை பாண்டியன். பத்திரிக்கைப் பேட்டிகளுக்கும் அவ்விதமே. ஈழவிடுதலையின்பால் மாளாக் காதல் கொண்டிருந்தார். தளபதி கிட்டுவும் பாண்டியனாரும் மிக நெருங்கிய தோழர்கள். சமூகநீதி…. சாதி ஒழிப்பு….. தலித் எழுச்சி…. திராவிட இயக்கத்தின் அளப்பரிய பங்களிப்புகள்….. தந்தை பெரியாரின் பன்முகத் தன்மைகள்…. தமிழகத்தின் தனித்துவம் என டில்லிவாலாக்களுக்குப் புரிபடாத பல்வேறு சேதிகளைச் சுமந்து சென்ற பறவை அது. இப்போது அப்பறவை கண்ணாடிப் பேழையினுள். தோழனைத் தொட்டுப்பார்க்க ஆசையாய் இருந்தது. இரவு மூன்று மணி வரை அங்கிருந்துவிட்டு காலையில் வருவதாகக் கூறி விடைபெற்றோம்.
காலையில் அவரது வீட்டருகே எண்ணற்ற பிரமுகர்களும் பிரபலங்களும் குழுமி இருந்தனர். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் சில மணிநேரத்தில் தோழன் பயணப்பட்டு விடுவான் தான் பிறந்த ஊரான மார்த்தாண்டத்துக்கு. ஆம்புலன்ஸ் வந்து நிற்கிறது. தோழனை விமானத்தில் ஏற்றிக் கொண்டு போக. சென்னையில் இருந்து திருவனந்தபுரம் அப்புறம் அங்கிருந்து சாலை வழியாக மார்த்தாண்டம் நோக்கி என இனித் தொடங்கும் இறுதிப்பயணம். தோழனை கண்ணாடிப் பெட்டியில் இருந்து மரப்பெட்டிக்கு மாற்றவேண்டும் என்றார்கள். தோழன் இன்பாவும், கலையும் கால்பகுதியைப் பற்றிக்கொள்ள நான் பெற்ற பாக்கியம் தலைப்பகுதி எனக்கு. மெல்லக் கன்னத்தை வருடினேன். சில்லிட்டிருந்தது. மனதின் அடியாளத்தில் இருந்து அழுகை முட்டிக் கொண்டு. ”ஏன் சாமி…… இன்னும் தூங்கலியா?” என இரவுப் பொழுதுகளில் கேட்கும் குரல் இனி கேட்காது. பெட்டிக்கு மாற்றினோம். ”போகாதே பாண்டியா”….. “போகாதே பாண்டியா”…. என்று அவரது துணைவி பாண்டியனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். தாள முடியவில்லை. சட்டென வெளியில் வந்து கொஞ்சம் தள்ளிப்போய் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். 
 
ஆம்புலன்ஸ் முன்னே செல்ல பாண்டியனை வழியனுப்ப காஷ்மீரில் இருந்து வந்திருந்த ஒரு மாணவி, கோட்டயத்தில் இருந்து வந்திருந்த மற்றொரு மாணவி, ஆந்திராவில் இருந்து வந்திருந்த கனகவிநாயகம், JNU வில் இருந்து ஜெகதீஷ், கலை, இவர்களோடு இன்பா, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ரெங்கையா முருகன், சேகுவேரா, சித்தானை ஏர் இந்தியாவில் பணிபுரியும் நண்பர் அழகப்பன் என ஏழெட்டு பேர் மட்டும் பார்சல் ஏற்றப்படும் இடத்தில். ஆம்….. சரக்குகளோடு சரக்காகத்தான் பயணப்பட்டார் நம் பாண்டியன். 
 
அவரது உறவினர் ஒருவர் அருகே இருந்தார். அவரிடம் தோழனை எரிப்பீர்களா அல்லது புதைப்பீர்களா? என்றேன். ”புதைக்கத்தான் போகிறோம்” என்றார். அப்படியானால் சின்னதாக ஒரு கல்லறையாவது கட்டி வையுங்கள் என்றேன். எதற்கு என்பதைப் போல பார்த்தார். 
”இன்னும் நூறு இருநூறு வருடம் கழித்துக்கூட எவனாவது ஒரு மனிதன் இந்த மானுடநேயனைத் தேடி மார்த்தாண்டம் வருவான். இந்த மக்களையும் அவர்களது வாழ்க்கையையும் நேசித்த….. அதன் பொருட்டே பலரிடம் கோபம் கொண்ட…… இந்தக் கள்ளம்கபடமற்ற குழந்தையின் கல்லறையில் தான் சுமந்து வந்த மலரொன்றை வைத்து நன்றி செலுத்தி விட்டுப்போவான். அதற்காகத்தான்” என்றேன்.
 
ஆம். 
 
தோழன் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் ஐம்பத்தி ஆறு வயதைத் தொட்டாலும் என்னைப் பொருத்தவரை  ஒரு சின்னஞ் சிறு குழந்தைதான்.
 
உள்ளே பகையும் உதட்டில் உறவும் வைக்கத் தெரியாத உலகம்தான் பாண்டியன் எனும் அக்குழந்தையின் உலகம்.
 
போய்வாருங்கள் பாண்டியரே.
 
 
(அந்திமழை டிசம்பர் 2014 இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...