அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மாநிலத்துக்கொரு குட்டிக்கரணம்!- பாமரன்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   20 , 2016  13:36:13 IST

வெங்காயிஸ்டுகள் …..!

இங்கே இருக்கிற இந்திய கம்யூனிஸ்ட் வீரர்கள், சாதிக் கொடுமையைப் பற்றி இன்றுவரை ஒரு பேச்சுக்கூட பேசுவதேயில்லை. நாம் இதைப் பற்றிப் பேசினாலோ, “சே, சே இது பிற்போக்கு சக்தி பேச்சு. நாங்கள் பெரிய, பெரிய உலக விஷயத்திலெல்லாம் கவனம் செலுத்துகிறோம். இந்த சின்ன சங்கதிக்கு நாங்கள் கவலைப்படவில்லை.” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்களே !

கம்யூனிச கொள்கையை எதிர்க்கிறவனல்ல நான். இன்றைய ‘கம்யூனிஸ்டுகள்’ கோவணங்கூட கட்டத் தெரியாதிருந்த காலத்திலேயே – நான் உண்மைக் கம்யூனிஸ்ட் கொள்கையைப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன். முதன் முதல் இந்த நாட்டில் சமதர்மப் பிரச்சாரம் செய்து, அதற்காகவே சிறைப்பட்டவன் நான்.

சாதி முறையைப் பற்றியும், பார்ப்பனீய முதலாளித்துவத்தைப் பற்றியும் இவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டாமா? பேதத்தை ஒழிப்பதற்குப் பாடுபட வேண்டாமா? அதைச் செய்திருந்தால், இந்த நாட்டில் கம்யூனிசம் எவ்வளவோ வளர்ந்திருக்குமே. அதை விட்டு விட்டு ‘பிற்போக்கு சக்தி’ என்ற பல்லவி பாடிக் கொண்டிருந்தால், இவர்களென்ன கம்யூனிஸ்டுகள்?

வெங்காயிஸ்டுகள் !.

-தந்தை பெரியார் – 10-09-1952

 

 

சில வருடங்கள் முன்பு சின்னாளப்பட்டியில் இருந்து தோழர் பாலு போன் பண்ணியிருந்தார்.

“தோழா! உங்கள நார் நாராக் கிழிச்சு தொங்க விட்ருக்காங்க இன்றைய தீக்கதிர்ல….பார்த்தீங்களா?” என்று.

’இப்பத்தான் குமுதா ரொம்ப ஹேப்பி’ என்று மனதுக்குள் நினைத்தபடி ”அவசியம் இப்பவே பாத்தர்றேன் பாலு.”என்றபடி போனை வைத்தேன். அடுத்து ஆரம்பமானது தீக்கதிரைத் தேடும் எனது பயணம். மற்ற வார, நாளிதழ்கள் கிடைக்கும் பெட்டிக் கடைகளில் எல்லாம் கிடைக்காது. இதற்காகவென்றே வேறு சில கடைகள் இருக்கின்றன. அங்கு தேடினால் கிடைக்கும். தமிழகத்தில் மொத்தம் முப்பத்தி மூன்று பேர் மட்டுமே படிக்கும் பத்திரிக்கைகளை விற்பதற்கென்றே ஒரு கடை இருக்கிறது கோவையில். அங்கு சென்றால் நிச்சயம் கிடைக்கும். நான் அங்குதான் உயிர்மை…. காலச்சுவடு…. ஜெயமோகன்… சாரு… புத்தகமெல்லாம் வாங்குவேன்.

 

கடைக்காரர் “தீக்கதிர்” என்றதுமே….

”இலக்கியப் பத்திரிக்கையா?” என்றார்.

இல்லை இலட்சியப் பத்திரிக்கை என்றேன். பக்கத்தில் இருந்தவரை விசாரித்துவிட்டு “அதெல்லாம் கட்சி ஆபீஸ்ல போய் கேட்டுப்பாருங்க” என்றார்.

அடுத்து மாவட்டக் கமிட்டி அலுவலகம் நோக்கி எனது படையெடுப்பு.

 

பெரும்பாலும் மாவோ… ஸ்டாலின்… சேகுவேரா போன்றோரது புத்தகங்களையே படிப்பதால் நல்லவேளையாக அங்கிருந்த தோழர்கள் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. (ஒருவேளை… தேர்தல் நேரங்களில் மட்டும் முரசொலியோ…. நமது எம்.ஜி.ஆரோ… மேலோட்டமாக வாசிக்கக்கூடும்.)

 

கட்சி அலுவலகம் உள்ளே நாற்காலியில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த தோழரிடம் ’இன்றைய தீக்கதிர் வேண்டும்’ என்றேன்.

”கடைகள்ல இருக்குமே” என்றார்.

’எல்லாம் போயிடுச்சாமாங்க….. இன்னத்த பேப்பரை மட்டும் கொஞ்சம் குடுத்தீங்கன்னா ஜெராக்ஸ் எடுத்துட்டுத் தந்துருவேன் தோழர்” என்றேன் கெஞ்சலாக.

சந்தேகமாகப் பார்த்தபடி…. எதை நகலெடுக்கனும்? என்றார்.

நம்மைக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கும் கதையை நாமே சொல்வானேன்…? என்று நினைத்தபடி…. ’இல்ல இன்னத்த நடுப்பக்கக் கட்டுரைய நகலெடுக்கனும் அதான்….’ என்றிழுக்க…..

பின்புற அமர்ந்திருந்த தோழரிடம் ”இன்னத்த தீக்கதிர் இருந்தா கொஞ்சம் எடுத்துக் குடுங்க” என்றார்.

அவரோ….. “இன்னைக்குத் தேதி முப்பத்தி ஒன்னல்ல….. பைண்டிங்குக்கு இப்பத்தான் நம்ம ஸ்டாலின் எடுத்துகிட்டுப் போனாரு…” என்று உதட்டைப் பிதுக்கினார்.

 

வெளியில்  வந்து  தொலைக்காட்சியில்   பணிபுரியும்     நண்பன் அவினாசிலிங்கத்துக்குப் போனைப் போட்டு தகவலைச் சொல்ல….. “ஏன் தலைவா டி.சி.ல இருக்குமே கேட்டீங்களா? “என்றான் தோழன்.

டி.சி.க்கு முன்னாடி நின்னுதான் போனையே போட்டிருக்கேன் என்றேன்.

“அப்ப அங்க பக்கத்துல உள்ள டீக்கடைல நில்லுங்க பத்து நிமிசத்துல வந்தர்றேன்….” என்றபடி போனைத் துண்டித்தான் தோழன். அதன் பிறகு அவினாசி வந்ததும்… பின்னர் பலபக்கம் போனில் விசாரித்து கடைசியாக ராம்நகரில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்துக்கு கூட்டிப்போய் “தீக்கதிரை” வாங்கி நகலெடுத்துத் தந்ததும்….. ஒரு நாவலுக்குரிய சமாச்சாரங்கள்.

 

நிற்க.

 

நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவோம்.

எப்பொழுதிருந்து ஆரம்பிக்கிறது  இந்த இடதுசாரிக் கட்சிகளுக்கும் தமிழக மக்களுக்குமான ”ஏழரை”? அற்புதமான தத்துவங்கள் இருந்தும் இவர்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுப் போனது எவையெவையால்?

”புரட்சித் தலைவி”வின் வருகைக்குப் பின்னா?

”புரட்சித் தலைவரின்” பிளவுக்குப் பின்னா?

”கலைஞரின்” அரியாசணத்துக்கு அடுத்தா?

“அண்ணாவின்” தனி ஆவர்த்தனத்துக்கு அப்புறமா?

பெரியாரின் போர்ப்பிரகடனங்களுக்கு பின்னரா?

எளிய மக்களுக்கான உன்னத தத்துவங்களுக்குச் சொந்தக்காரர்கள் அந்த எளிய மக்களாலேயே உதாசீனப்படுத்தப்பட்ட வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது?

ஏன் ஆயிற்று அப்படி?

”எதிர்ப்புரட்சி கும்பலின் சதி” என்று புறந்தள்ளிவிட்டுப் போய்விடலாமா இதை? அல்லது “பூர்ஷ்வாக்களின் பசப்பு மொழிகளுக்கு பலியாகிவிட்டார்கள் மக்கள்.” என்று பழியை அவர்கள் மீதே போட்டுவிடலாமா?

எங்கிருந்து தொடங்குகிறது காம்ரேடுகள் சொந்த செலவிலேயே சூனியம் வைத்துக் கொண்ட கதை? உலகிலுள்ள உழைக்கும் மக்கள் அனைவரது விடியலுக்குமான பொதுவுடைமைச் சித்தாந்தத்தையே சொத்தாகக் கொண்ட தோழர்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு நிற்கும் அவலம் எங்கிருந்து ஆரம்பகிறது?

 

அந்தத் தவறுகளின் வரலாறு முப்பதுகளின் மத்தியிலிருந்தே தொடங்கி விடுகிறது. அதாவது ஏறக்குறைய எண்பதாண்டுகளுக்கு முன்னரே. அதைத் தொடங்கி வைத்த “பெருமைக்குரியவர்கள்” ப.ஜீவானந்தம்…முத்துச்சாமி வல்லத்தரசு போன்றவர்கள்தான்.

 

சமத்துவத்தையும், சமூகநீதியையும் ஏற்றுக் கொள்ளாத காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியாரின் வீச்சு வர்ணாசிரம அதர்மத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்தவர்களை ஒரு ஆட்டு ஆட்டியது. அவரது சுயமரியாதை இயக்கம் சூறாவளியென சுழன்றடித்ததன் விளைவு சிற்சில சீர்திருத்த நடவடிக்கைகளில் மட்டுமே திருப்தி கொண்டிருந்த நீதிக்கட்சியினரையும் அசைத்துப் பார்த்தது.

 

இன்றைக்குச் சிற்சில என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனாலும் அன்றைய காலகட்டத்தில் அவை கற்பனைக்கும் எட்டாத சீர்திருத்த நடவடிக்கைகள்தான்.

அக்கட்சியில் சனாதனிகளும் உண்டு. சீர்திருத்தக்காரர்களும் உண்டு.

குழுச்சண்டைகளும் உண்டு. கூட்டுழைப்பை வலியுறுத்துபவர்களும் உண்டு.

ஓரிரு ஜமீன்தார்களும் உண்டு. சமதர்மச் சிந்தனையாளர்களும் உண்டு.

 

ஆனால் ஒப்பீட்டளவில் சமூகநீதியையே சகித்துக் கொள்ளாத…. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையே ஒப்புக்குக்கூட ஒப்புக்கொள்ளாத அன்றைய காங்கிரசைக் காட்டிலும் நீதிக்கட்சி எவ்வளவோ மேல்.

 

பெரியார் காங்கிரசில் இருந்த காலத்தில் இருந்து வலியுறுத்தி வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கான அரசாணையையே பிறப்பித்தவர்கள்தான் நீதிக்கட்சிக்காரர்கள்தான்.

 

அன்று அவர்கள் போட்ட விதைதான் இன்றைக்கு 69 சதவீதம் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் பிரிவு மக்களுக்குப் பயன் தரும் மரமாக நின்று கொண்டிருக்கிறது. நீதிக்கட்சியினர் கொண்டு வந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பது சகல வகுப்பினருக்குமான அவர்களது எண்ணிக்கைக்குத் தக்க ஒதுக்கீடு. ஆனால் அதற்கும் ஆப்பு வைத்தவர்கள்தான் ”சமதர்மத்தை ஏற்றுக் கொள்வார்கள்” என்று ஜீவா நம்பிப் போன காங்கிரஸ்காரர்கள்.

 

”ஜமீன்தார்களுக்கான கட்சி” என்று சில பொதுவுடைமைச் சித்தாந்தவாதிகளால் சித்தரிக்கப்பட்ட நீதிக்கட்சியை குட்ட வேண்டிய நேரத்தில் குட்டி தட்டிக்கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டிக் கொடுத்து தமிழ் மக்களுக்கான காரியங்களைச் சாதித்து வந்தார் பெரியார்.

 

1933 இல் ராசிபுரத்தில் கூட்டப்பட்ட ஜமீன்தாரல்லாதார் மாநாட்டில் பேசிய பெரியார் நீதிக்கட்சியைச் சேர்ந்த பொப்பிலி அரசரையும் கண்டிக்கத் தவறவில்லை.

 

“இதைப்போல….. லேவாதேவிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளிகள் அல்லாதார் மகாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மகாநாடு, மேல்சாதிக்காரர் அல்லாதார் மகாநாடு….  என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச் செய்ய வேண்டியது நமது கடமையாகும்.” என்றார் பெரியார்.

 

இந்த அழுத்தத்தின் விளைவே சென்னை மாகாணத்திலுள்ள ஜமீன் ரயத்துகளுக்கு உள்ளதைப் போலவே இனாம்தாரி நிலங்களில் உழுது பயிரிட்டோருக்கும் உரிமையை வழங்கும் மசோதா 1933 இல் சென்னை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

இதை சட்டமாகாமல் தடுக்க சகல வழிகளிலும் ஜமீன்கள் மட்டுமல்ல….. ஆளுநர்…. வைஸ்ராய் என சகலரும் வித்தை காட்டினர்.

”காங்கிரஸ் சத்தியமூர்த்தி அய்யரும், வெங்கட்டராம  சாஸ்திரியார் போன்ற மிதவாதிகளும் சூழ்ச்சி செய்கிறார்கள்….. போதாக்குறைக்கு ’தேசீயப்பத்திரிக்கைகள்’ என மார்தட்டிக் கொள்ளும் ஹிந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளும் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன….” என்று வாய்விட்டுப் புலம்பினார் நீதிக்கட்சி முதலமைச்சராய் இருந்த பொப்பிலி அரசர்.

ஒரு சில ஜமீன்தார்கள் நீதிக்கட்சியை விட்டே வெளியேறினார்கள். சுயமரியாதை இயக்கம் மசோதாவை சட்டமாக்கச் சொல்லி மீண்டும் எச்சரித்தது.

 

விளைவு : வேறு வழியே  இல்லாமல் வைஸ்ராயின் மறுப்புகளையும் மீறி 1936 ஆம் ஆண்டு ”எஸ்டேட் நிலத் திருத்தச் சட்டம் XVIII “ பொப்பிலி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. ஒரு சுமாரான சட்டத் திருத்தத்துக்கே இவ்வளவு பாடுபட வேண்டியிருந்தது நீதிக்கட்சிக்கு.

 

அன்றைக்கு வெள்ளையரை எதிர்த்த எல்லோரும் தேசபக்தர்களுமல்ல.

ஆதரித்தவர்கள் அனைவரும் தேசத்துரோகியுமல்ல.

 

ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டும் கோயிலுக்கு தேவரடியார்களாக பொட்டுக்கட்டி விடப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட “தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்…..”

 

பச்சிளம் குழந்தைகளுக்குத் “திருமணமும்”…. அதன் மற்றொரு விளைவாய் பால்மணம் மாறாத குழந்தைகள் ”விதவைகள்” என்கிற பெயரில் இம்மண்ணில் வலம் வந்த கொடுமையையும் சகிக்காது கொண்டுவரப்பட்ட “குழந்தைத் திருமணம் ஒழிப்புச் சட்டம்…..”

 

சமூகநீதியை நிலைநாட்ட கொண்டுவரப்பட்ட  “வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டம்…” எனச் சகலதும் வந்தது பொதுவுடைமைவாதிகள் எதிர்த்த நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில்தான்.

 

இவை எவற்றையும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என எதிர்ப்புத் தெரிவித்து சண்டித்தனம் செய்ததுதான் அன்றைய காங்கிரஸ் செய்த ”சமத்துவப்பணி”.

 

இந்தக் காங்கிரசில்தான்… சமதர்மத்தை நிறைவேற்றுவார்கள் என்று நம்பி நாலணா உறுப்பினர் கட்டணம் கட்டி ஜீவாவும் பிறரும் அடைக்கலமானார்கள்.

 

ஒருபுறம் காங்கிரசின் பெயரால் ஒத்துழையாமை இயக்கமும்…. மறுபுறம் சுயராஜ்யக் கட்சி என்கிற பெயரில் ராஜவிசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டு ஒத்துழைப்பு இயக்கமும் நடத்திய இந்தக் காங்கிரசை நம்பிக் கரையேற நினைத்தவர்கள்தான் அன்றைய காம்ரேடுகள்.

 

வெள்ளையனுக்கு வால் பிடிப்பவர்கள்…. ஜமீன்தார்கள்…. என்று சாடிவிட்டு சரணாகதி அடைந்த இடம் எதுவென்று பார்த்தால்…..

 

சட்டமறுப்பியக்கத்தை வாபஸ் பெற்ற கையோடு காந்தியார் “அரிசனங்கள் பிரச்சனையில் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க உண்ணாநோன்பைத் தொடங்கிய இடம் எதுவென்று பார்த்தால்….

 

புனே நகரின் பெரும் ஜவுளி ஆலையின் முதலாளி சர் வித்தல்தாஸ் தாக்கர்சேவின் பளிங்கு மாளிகைதான்.

 

இதைத்தான் வெர்ரியர் எல்வின் என்பவர் எழுதினார் :

“காந்தி ஒரு பளிங்கு மாளிகையில் சாகும்வரை உண்ணாநோன்பு இருப்பது…. ஏசுநாதர் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காரில் ஏறிக் கொண்டு சிலுவையில் அறையப்படுவதற்குச் செல்வதைப் போன்றது” என்று. அதைப்போலவே பரமஏழை ஜி.டி.பிர்லாவுக்கும் காந்திக்கும் காங்கிரசுக்கும் இருந்த உறவு உலகப்பிரசித்தம்.

 

எந்தச் சமரசமும் இல்லாத வர்க்கப்போரை காங்கிரசைக் கைப்பற்றி காம்ரேடுகள் நடத்திய கதை இவ்விதம் போகிறது.

 

பழைய குப்பையைக் கிளறுவானேன்? மூக்கைப் பொத்துவானேன்?

 

ஆக சமூகநீதித் தளத்தில் திராவிட இயக்கங்கள் சாதித்த ”அற்ப சீர்திருத்த” விஷயங்களிலும் இடதுசாரிகளுக்கு எந்தப் பங்குமில்லை…..

 

சரி சமரசமேயற்ற வர்க்க விடுதலைப் பாதையில் எத்தனை தூரம் பயணப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலோ கேப்டன் கட்சி அலுவலகம் நம்மைப் பார்த்துப் பல்லிளிக்கிறது.

 

”வறட்டு நாத்திகவாதி”…. “இயக்கவியல் பொருள்முதல் வாதம் புரியாத பேதை” என்று பெரியாரிடமே முரண்பட்ட இவர்கள் ஒருவேளை கேப்டன் விஜயகாந்திடம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான பாதையைக் கண்டடைந்திருக்கலாம்.

 

ஒரு ராஜபுத்ர வம்சத்தில் வந்த ஒரு விஸ்வநாத் பிரதாப் சிங்கிற்குத் தெரிந்திருந்த சமூகநீதித் தத்துவம் “பாரிற்கடையரே எழுங்கள்” எனக் குரல் கொடுத்த காம்ரேடுகளுக்குப் புரியாமல் போனது எவ்விதம்? சமூகநீதிக்கான ஒதுக்கீடுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத இவர்கள்தான் இன்றைக்கு கிரீமிலேயர் குறித்துக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். போராடி வாங்கித் தந்தவர்கள் பேசலாம் அவைகளைப் பற்றி. ஆனால் இவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது அதில்?

 

சமூகநீதி கிடக்கட்டும்…..

 

முப்பதுகளின் மத்தியில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்திக்கு எதிராக எத்தகைய போராட்டங்களை நடத்தினார்கள் இவர்கள்?

 

மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது “ஐக்கிய கேரள”த்திற்காக மொத்த மலையாள தேசமே கூடி நின்று கூக்குரலிட்டபோது தமிழகப் பொதுவுடைமைக் கட்சியினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

 

எண்பதுகளின் தொடக்கத்தில் தமிழகமே ஈழப்படுகொலைகளுக்காக குரல் கொடுத்தபோது எங்கே போயிருந்தார்கள்? ஈழத்தை ஆதரிக்காவிடினும் சரி. ஆனால் இந்திய அமைதிப்படை காலங்களில் நிகழ்ந்த அத்துமீறல்களையும், வல்லுறவுகளையும்…. ஒரு குறைந்தபட்ச மனித நேயத்தோடு அணுகி உலக அரங்கிற்கு எடுத்துச் சொன்னார்களா இவர்கள்?

 

அவ்வளவு ஏன்….

 

2009 இல் மனிதகுலம் கற்பனைசெய்துகூட பார்த்திராத இனப்படுகொலை ஈழத்தில் நிகழ்ந்தபோது…..

 

உலகிலுள்ள மானுட நேயர்களெல்லாம் குமுறி அழுது வீதிக்கு வந்து நின்று கதறிக் கொண்டிருந்த வேளையில்…

 

”பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறுகின்ற மனிதர்களை”க் காக்கக் கிளம்பியவர்கள் எங்கே போயிருந்தார்கள்?

அப்போது நான் சந்தித்த ஒரு ”இடதுசாரி” சொன்னார் : ”காவல் கோட்டம் நாவலை எடுத்தா கீழே வைக்கவே முடியல…. இந்த மாசத்துல மட்டும் மூணு முறை படிச்சேன்.”

 

வயிறு எரிந்தது.

 

எதையும் படிக்கக்கூடாது என்பதல்ல. அந்நாவலில் உடன்பாடோ அல்லது முரண்பாடோ இருக்கிறது என்பதனாலும் அல்ல…..

 

படித்தவேளைதான் மனதை உலுக்கிப் போட்டுவிட்டது.

 

இனப்படுகொலை தலைவிரித்தாடி தன் கோரக் கரங்களால் லட்சக்கணக்கான மக்களை சிங்களப் பேரினவாதம் கொன்று குவித்துக் கொண்டிருந்த வேளையில்…..

 

எலின் சாண்டர்….. அருந்ததிராய்…. வி.ஆர்.கிருஷ்ணய்யர்…. ஃப்ரான்ஸ் ஹாரிசன்…. என எண்ணற்ற மனிதநேயர்கள் குமுறிக் கொண்டிருந்த வேளையில்….

 

அதுவும் அதே மே மாதத்தில் ஒரு இடதுசாரி 1048 பக்கங்கள் கொண்ட நாவலை சாவகாசமாக மூன்று முறை வாசித்துக் கொண்டிருந்தார் என்பதைக் கேட்கும்போது எங்கே போய் முட்டிக் கொள்வது.?

 

சரி சர்வதேச பிரச்சனைகளை விட்டுத் தள்ளுவோம்…. அவ்வளவு ஏன்…..

 

கடந்த இருபது நாட்களாக மக்கள் தெருக்களில் கையில் காசில்லாமல்…. இருந்தாலும் அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வங்கியில் இருந்து எடுக்க இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களே….. இவர்களது கிளைகளுக்கு ஒரே ஒரு மெயில் மூலம் தகவல் தந்து ”தவிக்கும் மக்களை ஒருங்கிணைத்து வீதியில் இறங்க வையுங்கள் தோழர்களே” என்று போராட்ட களத்திற்கு வரவழைத்திருக்க வேண்டாமா? (அதுவும் ஏற்கெனவே வீதியில் நிற்பவர்களை…)

 

விஞ்ஞான சோசலிசம்…. சோசலிச விஞ்ஞானம் என்றெல்லாம் சொல்கிறார்களே தவிர இவர்களது விஞ்ஞான அறிவு என்பது இன்னும் புறாக்காலில் கட்டி அனுப்பும் அளவில்தான் இருக்கிறது.

 

ஓர் எளிய பெட்டிக்கடைக்காரர் கூட இவர்கள் முல்லைப் பெரியார் பிரச்சனையிலும்…. காவிரியில் நீர் திறந்துவிடும் பிரச்சனையிலும் எத்தனை குட்டிக்கரணங்கள் மாநிலத்துக்குத் தக்கபடி போடுவார்கள் என்பதைத் துல்லியமாகச் சொல்வார்.

 

மாநிலங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் மெளனம் சாதித்துவிட்டு…. பிறமொழித் திணிப்புகளின்போது குப்புறப்படுத்துத் தூங்கிவிட்டு…. சமூகநீதிக்கான போராட்டங்களின் போது மாவட்ட அளவிலும்கூட முணுமுணுக்காது விட்டுவிட்டு…. ஆபத்துமிக்க அணு உலைகள் விஷயத்தில் தமிழகத்திற்கு ஒன்றும், மேற்கு வங்கத்திற்கு ஒன்றுமாய் நிலைப்பாடுகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் தமிழகத்தில் ஆட்சியை 2216 இல் மட்டுமல்ல…. 8018 இல் கூட பிடிக்க இயலாது.

 

இடதுசாரி அமைப்புகளில் இருந்தாலும் அதிலுள்ள எண்ணற்ற அர்ப்பணிப்புமிக்க தோழர்களை அறிவேன் நானும். இங்கு சுட்டுவது அனைத்தும் பேரன்புமிக்க அந்த எளிய தோழர்களை நோக்கியல்ல. அத்தலைமைகளை நோக்கித்தான்.

 

இவைகளை இனியாவது இவர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும்.

 

இல்லாவிட்டால் வழக்கம்போல் நாவல் படித்துக் கொண்டோ…. அல்லது கேரம் போர்டு விளையாடிக் கொண்டோ இருக்கலாம்.

 

அவ்வளவே.

 

(2016 டிசம்பர் அந்திமழை இதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...