அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தோற்றோம் ஜெயித்தோம்!- நெட்கான் மகாலிங்கம் ராமசாமி!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   25 , 2014  12:39:46 IST


Andhimazhai Image

 

 

“முதல் தலைமுறை தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு தொழில் பற்றிய அறிவு ஒரு தடை என்றால் அதை விட அதிகமாக சமூகம் தரும் அழுத்தம் மிகப் பெரிய தடை. ‘உங்கூட படிச்சவனெல்லாம் வேலைக்கு போய் இவ்வளவு சம்பாதிக்கிறான், நீ என்ன செய்யற?’ என்பது போன்ற குடும்பத்தின், சுற்றத்தாரின் கேள்விகளை எதிர்கொள்வதுதான் மிகக் கடினமான ஒன்று” என்கிற மகாலிங்கம் ராமசாமி கோவையை தலைமையிடமாகக் கொண்ட நெட்கான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர். மும்பை ஏர்போர்ட் ஐடி நெட்வொர்க் வடிவமைப்பாளர். தற்போது துபாய் ஏர்போர்ட்டிற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது நெட்கான். அந்திமழைக்காக கோவை அலுவலகத்தில் அவரை சந்தித்தபோது பகிர்ந்து கொண்ட தகவல்கள் அவருடைய வார்த்தைகளில் கீழே:

 

  “அப்போதெல்லாம் எட்டாம் வகுப்பு படிக்கும்போது மாநில அளவில் தேர்வு நடக்கும். அதில் தேர்வானவர்களுக்கு திருச்சி பிஷப் ஹீபர் போன்ற நல்ல பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே அட்மிஷன் கிடைத்துவிடும். அத்தேர்வில் நான் தேர்வாகி பிஷப் ஹீபரில் படித்து திருச்சி ஆர்இசியில் என்ஜினியரிங்கும் நன்றாக படித்து தேர்வாகியிருந்தேன். அந்த கால கட்டத்தில் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு இரண்டு கனவுகள்தான் இருக்கும். முதலாவது அமெரிக்கா செல்வது.இரண்டாவது பெரிய நிறுனவங்களில் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகி சேருவது.

 

சங்ககிரிக்கு அருகில் சாதாரண கிராம பின்னணியிலிருந்த வந்த எனக்கு ஆரம்பத்தில் அமெரிக்கா கனவு இல்லாவிட்டாலும் இறுதியாண்டு படிக்கும்போது தொற்றிக்கொண்டது. அதனால் கேம்பஸ் இன்டர்வியூவில் விப்ரோவில் வேலை கிடைத்தும் சேரவில்லை. அமெரிக்கா  செல்லும் கனவுக்காக வேலைக்கு சேராமல் படித்த கல்லூரியிலேயே கம்ப்யூட்டர் மையத்தை நிர்வகித்துக் கொண்டு முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

 

கம்ப்யூட்டர் பிரிவில் என்னுடைய விருப்பம் நெட்வொர்க்கிங். 1992 - 93 காலகட்டத்தில் இந்தியாவில் இணைய பயன்பாடு கணிசமாக அதிகரிக்க தொடங்கியிருந்தது. கல்லூரியில் நெட்வொர்க்கிங்கில் ஈடுபாட்டுடன் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது திருச்சி ஆர்இசியில் இருந்தது ஆசியாவிலேயே மிகப்பெரிய நெட்வொர்க்கிங்  மையம். அதனால் நல்ல அனுபவம் கிடைத்தது. இரண்டு முறை அமெரிக்கா செல்வதற்கான என்னுடைய விசா நிராகரிக்கப்பட்டது.  அப்போதுதான் மாணவர்களுக்கான விசாவை அமெரிக்கா கடுமையாக்கியிருந்த நேரம். அத்துடன் அமெரிக்கா கனவை மூட்டைக் கட்டி வைத்தாகிவிட்டது. வேலைக்கும் செல்ல வேண்டாம்,தொழில் தொடங்குவோம் என்ற எண்ணம் வந்தது.

 

டெக்ஸ்டைல் துறைக்கான எலக்ட்ரானிக்ஸ்  சாதனங்களை தயாரிப்பது என்ற எண்ணம் இருந்தது. கல்லூரி கம்ப்யூட்டர் மையத்தின் தலைவராக இருந்த சீனியருடன் சேர்ந்து தொழிலை தொடங்கிவிட்டோம். எங்கள் இருவருக்குமே எங்களுடைய துறையைப் பற்றி தெளிவான பார்வை இருந்தது. ஆனால் வியாபாரத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. எப்படி நிறுவனத்தை தொடங்குவது, எப்படி பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது , R &D  எப்படி செய்வது என்ற எந்த அனுபவமும் இல்லை.கொஞ்சம் கொஞ்சமாக அனுபவம் மூலமாகவே வியாபாரத்தை கற்றுக்கொண்டே  நடத்தி வந்தோம். முதல் தலைமுறை வியாபாரத்தில் இறங்கும் இளைஞர்களுக்கு முதலில் சில வருடங்கள் நீங்கள் விரும்பும் துறையில் வேலை பாருங்கள்.பெரிய நிறுவனமாக இல்லாமல் வளர்ந்துவரும் சிறிய நிறுவனமாக இருப்பது நல்லது. அப்போதுதான் ஒரு நிறுவனம் இயங்கும் முறையைப் பற்றி முழுமையான அறிவு கிடைக்கும் என்றே சொல்லுவேன். இதை  சொல்வதற்கு காரணம் என்னுடைய அனுபவம் தான். முதல்  இரண்டு வருடம் பெரும் போராட்டம் தான். 2000 மாவது வருடத்தை ஒட்டி ஐடி துறையில் பெரிய மாறுதல் வந்து கொண்டிருந்தது. ஐடி சர்வீசஸ், நெட்வொர்க்கிங் விஷயங்களுக்கு பரவலான தேவை இருந்தது. ஏற்கெனவே கல்லூரியில் பணியாற்றியிருந்த அனுபவத்தைக் கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்தினோம். 1998 ல் இந்தியாவில் முதல் முறையாக VPN  என்ற நெட்வொர்க்கிங் சிஸ்டத்தை ஒரு சென்னை நிறுவனத்துக்காக செய்தோம். தமிழ் நாடு முழுக்க பெரிய புராஜெக்ட் எல்லாம் கிடைத்து, மார்க்கெட்டில் நல்ல பெயரும் கிடைத்தது. 2002 வரை கல்லூரியிலேயே வேலை பார்த்து வந்த நண்பரும் வேலையை விட்டு விட்டு தொழிலில் இணைந்து கொண்டார். டெக்னிக்கலாக என்னதான் நன்றாக செய்தாலும், பைனான்ஸ் விஷயத்தில் நாங்கள் தடுமாறிக் கொண்டுதான் இருந்தோம். ஒவ்வொரு புராஜக்ட்டுக்குமான காஸ்டிங், வியாபாரத்திற்கான பண புழக்கத்தை சரிவர செய்வது போன்ற விஷயங்களில் அனுபவமின்மையால் சறுக்கினோம்.

 

பின்னடைவு

அப்போது டெல்லியில் ஒரு நிறுவனம் விலைக்கு வருகிறது, நாம் வாங்கி இந்தியாவெங்கும் வியாபாரத்தை விரிவுபடுத்துவோம் என்றார் நண்பர். தமிழ்நாட்டிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் தொழிலை முன்னேற்றும் எண்ணம் எனக்கும் சரியாகத் தான் தோன்றியது. ஆனால் கம்பெனியை வாங்கி சில காலம் கழித்துதான் தெரிந்தது, அந்த நிறுவனம் மாதம் இருபது இலட்ச ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்தது என்பது. அதை சரி செய்ய போராடி பார்த்தோம். முடியவில்லை.அதே சமயத்தில் இங்கே தமிழகத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டேப் போனது.‘அவங்க வெளியூர்ல பிஸினஸ் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க, நமக்கு டெக்னிக்கல் சப்போர்ட் செய்யமாட்டேங்கிறாங்க’-ன்னு எங்களுடைய முக்கியமான கஸ்டமர்களே சொல்லக்கூடிய நிலை வந்துவிட்டது. வேறு வழி தெரியாமல் கம்பெனியை விட்டு நான் விலகிக் கொள்வதாக அறிவித்தேன்.வெளியே வரும்போது என்னுடைய பங்காக 60 லட்ச ரூபாய் கடன் இருந்தது.

 

நெட்கான் தொடக்கம்

    முதலில் கடனை அடைத்து விட்டு புதிதாக கம்பெனி தொடங்க வேண்டும் என்பதுதான் எண்ணம். கடனை அடைக்க பல வழிகளில் முயற்சி செய்தேன். என்னுடைய நிலத்தை விற்றேன்.அப்பாவிடம் பணம் கேட்டபோது,‘இரண்டு மகன்களில் ஒருவனுக்கு மட்டும் நான் பண உதவி செய்வது சரியாக இருக்காது,வேண்டுமானால் கடனாகத் தருகிறேன். திருப்பி தந்துவிட வேண்டும்’ என்றார். அவரும் பணம் கொடுத்தார்.தெரிந்த இடங்களில் பணம் கடன் வாங்கியும் கொடுத்தார். 2007-ல் நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து நெட்கான் டெக்னாலஜிஸ் கம்பெனியை தொடங்கினோம். இப்போது என்னுடைய பலம், பலவீனம் தெரிந்திருந்தது. அதே சமயத்தில் கம்பெனியில் என்னென்ன செய்யலாம்,செய்யக்கூடாது என்று அனுபவம் கற்றுக் கொடுத்திருந்தது. விற்பனை, மார்க்கெட்டிங் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களை நான் கவனித்துக் கொள்கிறேன். பைனான்ஸ் மற்றும் அக்கௌண்டிங் போன்றவற்றை என்னுடைய மனைவி கவனித்துக் கொள்கிறார். மூன்று வருடத்தில் பழைய கடன் முழுவதையும் அடைத்தேன். மெதுவாக தமிழ்நாடு தாண்டியும் விரிவுபடுத்தினோம்.

 

 பெங்களூருவில் சில புராஜக்ட்களை செய்தோம். 2010-க்குப் பிறகு கம்பெனியை விரிவுபடுத்தும் நோக்கத்தில் பெங்களூரு, ஹைதராபாத  நகரங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்தினோம். அதற்கடுத்து மும்பை விமானநிலையத்துக்கு ஐடி வடிவமைப்பு கன்ஸல்டண்ட் ஆக வாய்ப்பு வந்தது. அதன் மூலமாக மும்பையிலும் எங்களுடைய வியாபாரத்தை விரிவுபடுத்த முடிந்தது.இதைத் தொடர்ந்து துபாய் விமான நிலையத்துக்கு தற்போது வடிவமைப்பு ஆலோசகராக இருக்கிறோம். 90 சதவீதத்திற்கு அதிகமான வாடிக்கையாளர்கள் ஆரம்பம் முதலே எங்களுடன் உள்ளார்கள். இதுதான் எங்கள் பலம்.

 

எதிர்காலத் திட்டம்

நெட்கான் என்ற பிராண்ட்டை இந்தியாவெங்கும் நிலை நிறுத்தும் முயற்சியில் இப்போது உள்ளோம்.அடுத்து இந்தியா தவிர துபாய் விமான நிலையம் வடிவமைப்பில் உள்ளதுபோல, சிங்கப்பூரிலும் சிறிய அளவிலான வியாபாரம் நடத்திக் கொண்டுள்ளோம்.வெளிநாடுகளில் இதுவரை வேறு ஒரு கம்பெனியின் பார்ட்னராகத்தான் இயங்கி வருகிறது நெட்கான்.இனி வரும் காலங்களில் பன்னாட்டு நிறுவனமாக வெளிநாடுகளில் தனித்து இயங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
அடுத்த மூன்றாண்டுகளில் நெட்கான் 100 கோடி ரூபாய் கம்பெனியாக வளர்வது எங்களுடைய குறிக்கோள்”.

 தோல்வியைக் கண்டு துவண்டு விடாமல்  ஜெயித்துக் கொண்டிருக்கும் மகாலிங்கம்  ராமசாமியை வெற்றியடைய துடிக்கும் அனைவரும் முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

 

-இரா. கௌதமன்

 

(அந்திமழை செப்டம்பர் 2014 இதழில் வெளியான கட்டுரை)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...