அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நல்லி- வெற்றியின் கதை!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   25 , 2014  12:50:03 IST


Andhimazhai Image

 

புருவத்துக்கு நடுவே சின்னதாக குங்குமப்பொட்டு, மேலே ஒரு சந்தனப்பொட்டு. படிய வாரிய  தலை. பிரேம் போடாத மூக்குக் கண்ணாடி. தீவிரமான சிந்தனை உள்ள முகம். பேச்சில் எப்போதும் தவழும் உற்சாகமும் துள்ளலும்.  நல்லி குப்புசாமி செட்டியாருடன் அந்திமழை நேர்காணலுக்காக செலவழித்த இரண்டு மணிநேரமும் அவரிடம் ஞாபகங்கள் துள்ளி விளையாடுகின்றன.

 

1928-ல் இவரது தாத்தா சின்னசாமி செட்டியாரால்  சென்னை மாம்பலத்தில் தொடங்கிய நல்லி இன்று ஒரு சர்வதேச பிராண்டாக பட்டுத் துணிகளில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. 200 சதுர அடியில் தொடங்கிய கடை 30,000 சதுர அடிக்கு விரிவடைந்த கதையின் பின்னால் ஐந்து தலைமுறைகளின் ஆர்வம் ததும்பும் உழைப்பு இருக்கிறது.

 

“இந்தியா சுதந்தரம் அடைந்தபோது எனக்கு வயசு ஏழு. அப்போ நான் இங்கே இருக்கிற ராமகிருஷ்ண மடத்தின் பள்ளியில் தமிழ்மீடியத்தில்தான் படித்துவந்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் அன்றைக்கு சுதந்தர தினத்தைக் கொண்டாடியது எனக்கு நினைவில் இருக்கிறது. நாங்கள் இருந்த வீடு பாண்டி பஜாரில் இருந்தது. அங்கிருந்து நான் மட்டுமே தனியாக நடந்து சாலைகளைக் கடந்து பனகல் பூங்காவுக்கு எதிரே இருக்கும் எங்கள் கடைக்கு வந்துவிடுவேன். ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறைதான் அப்போதெல்லாம் மோட்டார் வண்டிகள் போகும். அன்றைக்கு 100 ரூபாய்க்கு மேல் கடையில் விற்பனை ஆகியிருந்தால் அப்பா எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருவார். அன்றைக்கெல்லாம் சேலை விலை 12-15 ரூபாய்தான் இருக்கும்” பழைய நினைவுகளில் மூழ்குவதில் நல்லிக்கு பெரும் ஆனந்தம்.

 

“ஏழரை மணி ஆனால் அப்போது தி நகர் இருட்டாகி விடும். யாருமே இருக்கமாட்டார்கள். எட்டரை மணி வரை கடையில் சும்மா இருப்போம். அதன் பின்னர் கடையை மூடிவிட்டுச் செல்வோம்.  காஞ்சிபுரத்தில் இருந்து இங்கே குடிவந்த புதுசில எங்க வீட்டுக் கதவு ஒரு நாள் இரவுல ஆடிருக்கு. போய்ப் பாத்தா ஒரு நரி.. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் தி.நகர் அந்த நாளில் இருந்தது ஒரு கிராமம் போலத்தான் என்று சொல் வதற்காகத்தான்.”

 

காஞ்சிபுரத்தில் நெசவாளராக இருந்த நல்லி சின்ன சாமிச் செட்டியார் சென்னை மைலாப்பூர் பகுதியில் தன் பட்டுச்சேலைகளுக்கு நிறைய வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்தார். அதற்காக சென்னைக்கு வாரம் இருமுறை வரவேண்டியிருந்தது. அதனால் மாம்பலம் ரயில் நிலையம் அருகே ஒரு வாடகை வீடு பிடித்து தங்கி அங்கே 1928-ல் ஆரம்பித்ததுதான் இந்த வெற்றிக்கதை. இதுதான் நல்லி சில்க்ஸ் என்ற ஆலமரத்தின் சின்ன விதை.

 

இரண்டாம் உலகப்போரின்போது சென்னை நகரமே குண்டுவீச்சு அச்சத்தில் மூன்றுவாரங்களுக்குக் காலியான போது நகரில் திறந்திருந்த ஒரே துணிக்கடை நல்லிதான். அந்த சமயத்தில் எந்த விளம்பரமும் இன்றி சென்னை முழுக்க கடையின் பெயர் பிரபலமாகி விட்டதாக அந்திமழையிடம் சொல்கிறார் நல்லி.

 

“தாத்தாவுக்குப் பின்னர் அப்பா நாராயணசாமி  செட்டியார் கடையின் விற்பனைப் பொறுப்பை ஏற்றார். 1948-ல் இருந்து 1953-ல் அவர் திடீரென காலமாகும் வரையில் விற்பனை சுறுசுறுப்பாக உயர்ந்தது. அதற்கு என் தந்தையின் கடுமையான உழைப்பும் அன்பான நடைமுறைகளும் காரணம்.”

 

இதற்கு எழுத்தாளர் அசோகமித்திரனே ஒரு உதாரணத்தை எழுத்தில் வடித்திருக்கிறார். ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திருமண விஷயமாக அவர் குடும்பம் வந்தபோது முன்பின் தெரியாத அக்குடும்பத்துக்கு நாராயணசாமி செட்டியார்  6000 ரூபாய் கடனாகக் கொடுத்து உதவி இருக்கிறார். இப்படி யாரென்றே தெரியாதவர்களுக்கு உதவுகிறீர்களே என்றபோது அவர் சொன்ன பதில்: “எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது”

 

1953-ல் குப்புசாமி 12 வயது பாலகனாக இருக்கையில் தந்தை காலமாகி விட, கல்லூரிக்குப் போய் எம்.ஏ.பி.எல் வரைக்கும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அவர் எஸ்.எஸ்.எல்சியுடன் படிப்பை நிறுத்திவிட்டு 15 வயதில் கடைக்கு வந்துவிட்டார். அவரது  சித்தப்பா ரங்கசாமி செட்டியார் சில காலம் கடையை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தினார்.

 

காலையில் கடையை முதல் ஆளாக வந்து திறப்பது, இரவில் கடைசி ஆளாக வீட்டுக்குச் செல்வது என்றிருந்த இளம்வயது குப்புசாமி செட்டியார் கடையில் ஒரு விஷயம் உறுத்தலாக இருப்பதாக உணர்ந்தார். அந்த காலகட்டத்தில் பேரம் பேசி புடவைகளை வாங்குவது பழக்கத்தில் இருந்தது. அதற்கே அரை மணி நேரம் செலவாகி, வாடிக்கையாளர்களுக்கு மனதிருப்தி ஏற்படாததை உணர்ந்த அவர் சேலைகளுக்கு கறார் விலை என்பதை நிர்ணயித்தார். இந்த முடிவை அவ்வளவு எளிதாக கடையில் இருந்த பிறர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் 1965 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு முதல் ஒரே விலை என்பதை துணிந்து அறிமுகப்படுத்தினார். வாடிக்கையாளர்களிடம் ஆதரவு பெருகியதே தவிர குறையவில்லை.

 

“தள்ளுபடி விற்பனை என்று சொல்லி விலையைக் கூட்டி அதன்பிறகு குறைத்து விற்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்தது இல்லை. ஒரு சம்பவம்  சொல்கிறேன். ஒரு பெண்மணி இன்னொரு  கடையில் தள்ளுபடி விற்பனையில் சிந்தெடிக் சேலை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்தார். அவரிடம் என்ன வாங்கினீர்கள் என்றதற்கு அந்த சேலையை எடுத்து தள்ளுபடியில் வாங்கினேன் என்று பெருமையுடன் காண்பித்தார். விலை 362 ரூபாய் போட்டு தள்ளுபடி போக 290ரூபாய்க்கு வாங்கியிருந்தார். நான் உடனே எங்கள் கடையில் இருந்த அதே சேலையைக் கொண்டுவரச் சொல்லி விலையைக் காண்பித்தேன். 145 ரூபாய்!  அவர் கோபத்துடன் அந்தக் கடைக்குப் போய் சண்டைபோடுவதற்காகக் கிளம்பிப் போய்விட்டார். இதுதான் நிலவரம்” என்கிறார் நல்லி.

 

நல்லியின் வளர்ச்சி என்பது பல இசைப் பிரபலங்களுடனான நட்புடன் வளர்ந்ததாகும். இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு புதுமையான வண்ணத்தில் ஒரு புடவை நெய்து தந்திருந்தார் காஞ்சிபுரத்தைச்  சேர்ந்த நல்லியின் உறவினரான முத்துச்சாமி செட்டியார். இவர் இசை கற்றவர். அதனால் இசைத்துறையைச்  சேர்ந்த பலருக்கும், சென்னையில் உள்ள பல பெரும் குடும்பங்களுக்கு இவர்தான் துணி நெய்வார். இதுவரை இல்லாத புதுவிதமான நீலக்கலரில் அதை வடித்திருந்தார். அது அதிக வகையிலான வண்ணங்கள் அதிகம் இல்லாத நேரம். எம்.எஸ். அச்சேலை அணிந்து கச்சேரி செய்து முடித்ததும் அந்த வண்ணச்சேலைக்கு பெரும் தேவை ஏற்பட்டுவிட்டது. மறுநாள் முழுக்க நல்லிக்குப் போன் செய்து பல வாடிக்கையாளர்கள் கேட்டிருக்கிறார்கள். முத்துசாமி செட்டியாரிடம் அதிக அளவில் புடவைகள் நெய்ய வசதிகள் இல்லை. எனவே அந்த வண்ணக்கலவையின் ரகசியத்தை நல்லியிடம் தந்தார். அந்த நீலக்கலர் புடவைதான் ‘எம்.எஸ்.புளூ’ என்று புகழ்பெற்றது.

 

“என் மகள் திருமணத்தின் போது நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் தான் நாதசுரம் வசிக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அவருக்கு  நல்ல அகலமான ஜரிகை வைத்த வேட்டி நெய்து கொடுத்திருந்தோம். ஒரு ஜாண் அகலமான ஜரிகை வேட்டி அது. அதைக் கட்டிக் கொண்டுதான் அவர் திருமண வைபவத்தின்போது அமர்ந்திருந்தார். அந்த வேட்டி எல்லோரையும் கவர்ந்திருக்கவேண்டும். மறுநாளே வீணை பாலச்சந்தர் அழைத்து ஏன் எனக்கு ஒரு வேட்டி கிடையாதா என்று கேட்டார். இந்த வேட்டியைப் பலருக்கும் தந்தோம். நாமகிரிப்பேட்டையார் அவரது சொந்த மகன் திருமணத்தின்போது நாங்கள் கொடுத்த வேட்டியைக் கட்டி அமர்ந்திருந்தார். பொதுவாக மாமனார் கொடுக்கும் துணியைத்தான் உடுத்துவார்கள். ஆனால் நாங்கள் கொடுத்த வேஷ்டியைக் கட்டி இருந்தார். நான் அதைப் பார்த்து நெகிழ்ந்துபோனேன்” பெருமையுடன்நினைவு கூர்கிறார் நல்லி.

 

“1911-ல் இந்திய தலைநகர் கல்கத்தாவிலிருந்து புதுடெல்லிக்கு மாறியது. அப்போது டெல்லியில் நடந்த விழாவுக்கு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் வந்திருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு ஏதாவது சிறப்பாக செய்யவேண்டும் என்று ஒரு புதிய பட்டுப்புடவையை எங்கள் தாத்தாதான் நெய்து கொடுத்தார். அதற்கு தர்பார் பார்டர் புடவை என்று பெயர். சுமார் 25 ஆண்டுக்கு முன்னால் ஒருவர் வந்து அதுபோன்ற புடவை வேண்டும் என்றார். நாங்களோ பெயர்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். சாம்பிள் எதுவும் எங்களிடம் இல்லை. அப்புறம் எம்.எஸ். அம்மாவிடம் அந்த புடவை இருப்பதை அறிந்து அவர்களிடமிருந்து வாங்கிவந்து அதுபோல் டிசைன் போட்டு நெய்துகொடுத்தோம்”.

 

திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள்,  சர்வதேச நாடுகளின் தூதர்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் என்று எக்கச்சக்கமான பேர் நல்லியின் வாடிக்கையாளர்கள்.

 

செட்டியாரின் இசை ஆர்வம் மிகவும் பிரபலமான ஒன்று. அது பற்றிப் பேசினோம். ‘’1954-ல் கிருஷ்ணகான சபா, குமரன் சில்க்ஸ் இன்றைக்கு இருக்கிற இடத்தில் அமைந்திருந்தது. நான் கடையின் வெளியே வந்து நின்று பாடல்களைக் கேட்பேன். யார் பாடுகிறார்கள் என்று தெரியாது. அதுதான் என் இசை ஆர்வம் தொடங்கிய காலம். பின்னர் இந்த சபா வேறொரு இடத்துக்கு மாறியது. அப்போது அவர்களுக்கு பணம் தேவைப்பட்டது. ஆளுக்கு 1000 ரூபா வீதம் கொடுத்தோம். வட்டியில்லாத கடன் மாதிரி அது. ஒரு ஆண்டு கழித்து திரும்பக் கொடுக்க வந்தார்கள். நான் வேண்டாம் உங்கள் சபாவுக்கு நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். நான் சொன்னதைக் கேள்விப் பட்டு மற்றவர்களும் அப்படியே சொல்லிவிட்டார்கள். பின்னர் எனக்கு அந்த சபாவில் துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். அதன் பின்னர் மெல்ல மெல்ல சென்னையில் இருக்கும் பல சபாக்களின் பொறுப்புகளும் என்னைத் தேடி வந்தன. ஆரம்பத்தில் எது என்ன ராகம் என்றே எனக்குத் தெரியாது. போகப்போகத்தான் புரிந்தது. இன்றும் நான் ஒரு இசை ரசிகனாகத்தான் இருக்கிறேன்” அடக்கமாகச் சொல்கிறார்.

 

”இப்ப சென்னையில் பாடறவங்க, பக்கவாத்தியம் உபபக்கவாத்தியம் சுமார் 2000 பேருக்கு மேல இருப்பாங்க. 2007-ல் சுமார் 60 சபாக்கள் இருந்தன. இப்போ சென்னையில் மட்டும் சுமார் 140 சபாக்கள் உள்ளன. முப்பது நாள்கள் பெரும் இசை விழா நடக்குது. உலகிலேயே இங்கேதான் இப்படி இருக்குதுனு நினைக்கிறேன்” என்கிற நல்லி  அந்த இசைவிழா வரலாறில்  ஓர் அங்கமே.

இந்தியா சுதந்தரம் அடைந்தபோது நல்லி சார்பில் நேஷனல் பார்டர் என்ற ஒரு பட்டுப் புடவையை தயாரித்தார்கள். அதில் ஐந்து வண்ணங்கள் இருக்கும். அப்புறம் தியாகபூமி படம் வந்தபோது அந்த பெயரிலும் பின்னர் பாலும் பழமும் படம் வந்தபோது அந்த பெயரிலும் புடவை டிசைன்களை அறிமுகப் படுத்தினார்கள். இப்போது ராகங்களின் பெயரில் புடவைகளை அறிமுகப்படுத்திக் கொண்டுவருகிறார்கள். தங்கள் வெற்றிக்கு மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறார் இவர். “என்றைக்குமே தரத்தில் சமரசம் செய்யமாட்டோம். தாத்தா காலத்தில் இருந்தே அதுதான். அப்புறம் டைமுக்குக் கொடுக்கணும். முகூர்த்தபுடவைகளில் நேரத்துக்கு கொடுத்தே ஆகணும். மூன்றாவது விஷயம் சேவை. நல்லியின் வர்த்தகம் உயர்ந்ததற்கு அந்த காலகட்டத்தில் அவர்கள் செய்த வாடிக்கையாளர் சேவைகளும் காரணம். ஒரு வீட்டுக்கு திருமணத்துக்குப் புடவைகள் கொடுக்கிறார்கள் என்றால் அந்த வீட்டின் திருமண நிகழ்ச்சியை  சொந்த வீட்டுக்குச் செய்வதுபோது கூட இருந்து பந்தல் போடுவது, கச்சேரிக்கு,சமையலுக்கு ஆள் நிர்ணயிப்பது என்று எல்லா வேலைகளையும் அந்தக் காலத்தில் நல்லிக் கடைக்காரர்களே ‘ஈவென்ட் மேனேஜ்மெண்ட்’ செய்துகொடுத்திருக்கிறார்கள்.”

 

இப்போது அதுமாதிரி இல்லை. ஆனால் வாடிக்கையாளர்களுக்கான சேவையை வேறுவிதத்தில் நல்லி செய்கிறார். நாம் போயிருந்தபோது ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வந்திருந்தன. ஓயாமல் தொலைபேசி அழைப்புகள் கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளுக்கு அட்மிஷன் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டு வந்துகொண்டிருந்தன. எல்லாம் வாடிக்கையாளர்களின் அழைப்புகள்.

 

இப்போது ஐந்தாம் தலைமுறை நல்லியில் பணிபுரிய ஆரம்பித்துள்ளது. அவர்கள் பெரும் துணிச்சலுடன் முடிவுகள் எடுக்கிறார்கள் என்கிறார் நல்லி.‘’எங்க காலத்துல நாங்க கடையைத் திறக்கறதில் இருந்து மூடுறவரைக்கும் கடையிலேயே இருப்போம். வெளியே போறதே இல்லை. அதனால் கடைக்கு கிளைகள் திறக்க ரொம்ப யோசித்தோம். குழந்தைகள் வளர்ந்து பெரியவங்க ஆனபிறகுதான் கிளைகள் திறந்தோம். இப்ப எங்களுக்கு 27 கிளைகள் இருக்கு. இந்தியாவில் 25ம்  சிங்கப்பூர், கலிபோர்னியாவில் ஒவ்வொண்ணும் இருக்கு. தமிழ்நாட்டில் உள்ளது மட்டும் நான் பாத்துக்கறேன். மத்ததை என் மகன் தான் பாக்கறார். என் பேத்தி லாவண்யா ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்து அப்புறம் மெக்கென்சியில் இரண்டு ஆண்டு வேலை பார்த்துட்டு எங்க நிறுவனத்தில் பணி புரியுறாங்க. அவர் பெங்களூர்ல கணவருடன் இருந்துகிட்டு தமிழ்நாட்டு வெளியே இருக்கற கிளைகளைப் பார்த்துக்கொள்கிறார்.  பேரன் நிராந்த் எஞ்சினியரிங் முடிச்சுட்டு வந்தார். நாங்க ஜுவல்லரி ஆரம்பிக்க இடம் பார்த்துட்டு தயாராக இருந்தோம். ஆனா புது தொழில்ங்கறதால தயங்கிட்டு இருந்தோம். இவர் வந்த உடனே நான் அதைப் பார்த்துக்கிறேன்னு பொறுப்பை ஏத்துகிட்டார். புதிய தலைமுறையின் கையில் பொறுப்புகள் போகும்போது இன்னும் பெரிதா வளரும்னு நினைக்கிறேன். ஏனெனில் அவங்க பார்வை, கல்வி எல்லாம் பெரிசு. ஒரு கிளையில் இருக்கிற சர்வீஸ் அடுத்த கிளையில் இருக்குமான்னு நான் யோசிப்பேன். ஆனா இவங்க தைரிமா செய்கிறார்கள்”

 

பட்டுச்சேலைகளை பார்த்து தடவிப்பார்த்து வாங்கவே எல்லோரும் விரும்புவார்கள். இந்த இ-காமர்ஸ் உலகில் இணையதளம் மூலம் சேலைகள் எப்படி நல்லியில்விற்பனை ஆகின்றன?‘

 

‘இணையதளம் மூலமாக பெரிசா வியாபாரம் நடக்குதுன்னு சொல்லமுடியாது. வெளியூரில இருக்கவங்களுக்கு சென்னையில் இருக்கும் யாராவது வந்து பார்த்து புடவையை செல்போன்ல படம் பிடிச்சு வாட்ஸ் அப்பில் அனுப்பறாங்க. அதை அவங்க தேர்வு பண்ணதும் நாங்க அனுப்பி வைக்கிறோம். இப்படித்தான் பெரும்பாலும் நடக்குது.”

 

நல்லி குப்புசாமி செட்டியார் ஓர் இளைஞராக 1956-ல் கடைக்கு வந்தபோது ஆண்டுக்கு 15 லட்சரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துகொண்டிருந்தது. இன்றைக்கு வர்த்தகம் 750 கோடி ரூபாய்! இதற்கான உழைப்பு திட்டமிடல் ஆகியவற்றுடன் கலை, இசை, எழுத்து ஆர்வம், பொதுச்சேவை என்று இவர் பல துறைகளிலும் கிளைவிரித்திருக்கிறார். நல்லி கடைக்கு மேல் இருக்கும் அவரது நூலகத்தில் 50,000க்கும் மேற்பட்ட நூல்கள் இருப்பதை இங்கே சொல்லியே ஆகவேண்டும்! 

-மதிமலர்

(அந்திமழை ஜூன் 2014 இதழில் வெளியான கட்டுரை)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...