அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை- கனா மீது வருபவன் - 22

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   30 , 2014  11:44:58 IST

 

ரவி தெருவிற்குள் மீண்டும் நுழைந்த நேரம் தெரு மூச்சடங்கிக் கிடந்தது. தெரு நாய்கள் வீட்டு திண்ணைகளின் பக்கம் ஓய்வதில் சுகம் கண்டு மடங்கிக் கிடந்தன. ரவி இருளை உரசிக்கொண்டு தங்கையாவின் வீட்டின் முன்னே வந்து நின்றான். தங்கையா இடைமறிப்பது போல இரு விலாக்களிலும் கைகளைத் தாங்கக் கொடுத்து குத்தவைத்த நிலையில் உட்கார்ந்தபடி கதவின் மீது சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். கால்கள் விரிந்து கிடக்க, குழறல் சத்தத்துடன் மூச்சு உள்ளே போய் வெளியே வந்து கொண்டிருந்தது. கொசுக்களின் தொந்தரவினை தவிர்க்க கால்களை அசைத்துக் கொள்ள நேர்கையில் தங்கையாவின் மத்திய பிரதேசம் வேட்டியில் தாழ்ந்து ஏறியது.

 

ரவி அதன் ஓதமுகத்திற்கு நேராக வந்து நின்று சீறுவது போல பார்த்தான். குரூரச் சிந்தனையின் தூண்டுதலால் தங்கையாவின் மர்மஸ்தானத்தில் தாக்குதலை நிகழ்த்த மனம் உந்திய ஒரு தருணத்தில் தங்கையா நெஞ்சுக்கூட்டின் வேதனை அழுத்த சற்று நிமிர வேண்டி அசைந்தார். அலுப்பாகவும் எழுந்திருக்க விருப்பமில்லாத சாயலுடனும் தற்செயல் போல் விழித்த அவர் அசதியை வேண்டி மீண்டும் இமைகளை மூடப்போகையில், பார்வையின் இடைவெளியூடாக எதிர்வந்து நின்ற உருவத்தினைக் கண்டு வியப்புற்று தூக்கம் தொலைத்து நிமிர்ந்தார். சற்று விருத்தியாக அவனைப் பார்த்தார்.

 

“வீட்டுக்குப் போலியா?”

சாமியாட சத்தம் போட்டு வந்ததில் தங்கையாவிற்கு குரல் கமறியிருந்தது.

 

“ஆமா... புள்ளைக்கிக் கெடக்க ஒரு வீடு வேணுமுன்னு நாலுமாடியில ஒரு பங்களாவக் கெட்டி வச்சிட்டுல்லா வள்ளி போயிச் சேந்தா..! தள்ளையா அவ...? “ என்று பொருமலாகக் கேட்டான் ரவி.

“சும்ம அவளக் குத்தஞ்சொல்லாதே. அவ என்னாக் கஷ்டபட்டான்னு ஒனக்குத் தெரியுமா? என்னச் செய்ய..? விதியத் தேடிக்கிட்டுப் போய்ட்டா... ஏன்? அவ ஒத்திக்கு வீடு எடுத்து வச்சிக்கிட்டுத் தானேப் போனா? அந்தப் பைசாலாம் எங்கப் போச்சி? நீ தானே வாங்கி ஏப்பம் போட்டே... பொறவு என்னா....? ஒம்புத்திக் கெட்டக் கேட்டுக்கு அவளக் கொறச் சொல்லாதே...? வயசுக்கு மீறி பேசக்கூடாது கேட்டியா?” என்றார் தங்கையா.

 

அவன் அலட்சியமாகச் சிரித்தான், அவன் பார்வையின் ஓரத்தில் குரூரத்தின் அர்த்தம் படிந்திருந்தது. “ஒமக்கு வள்ளிய மட்டும் ஒரு சொல்லுச் சொன்னா பொறுக்காதே! அத்துக்கிட்டு வருமே? அவன்னா ஒமக்கு தனிப் பிரியம். அப்படித்தான வோய்?”

 

தாக்குதலுக்கு உட்பட்ட அவர் சற்று நிமிர்ந்தார். சட்டெனப் பேச்சும் வரவில்லை. ஆடி முடித்தக் களைப்பு வேறு உடல் மீது அமர்ந்து கொண்டு அழுத்தியது. இந்த நேரத்தில் இவனை சமாளிப்பது பற்றி யோசிக்கக் கூட இடம் கொடுக்காது தூக்கம் வேறு அதன் பக்கமாக இழுத்தது. தன் இயல்பினைத் தவற விடாமல் அவர் தன்மையாக அவனிடம் கூறினார்.

“அவ ஒனக்கு பெத்தத் தாயாக்கும்னா!. கண்டபடி பேசது வேண்டாம். அது நல்லால்லக் கேட்டியா. சொல்லது எங்கடம. பொறவு ஒன் இஷ்டம்” மேற்கொண்டு சொல்வதற்கு எதுவும் தோன்றவில்லை அவருக்கு. மவுனம் தான் அசட்டையாக கடந்தது. சற்றுநேரம் அவன் அவரையே முறைத்துக் கொண்டிருந்தான்.

 

“பீடி வச்சிருக்கேரா?”

“எனக்குப் பழக்கம் இல்லேலா...?”

“பழக்கம் இல்லேனா என்னா? பழக்கம் இருக்கவன் கேக்கும்போது குடுக்கதுக்கு வாங்கி வச்சிக்கிடலாம்லா..”

“தல மறந்து எண்ணெத் தேக்காதப்போ... பாத்துக்கோ..” என்றவர் அவன் அதைக் கேட்டுத் தலையாட்டுவதையேப் பார்த்து விட்டு

“மணியாச்சு..சாப்பிட்டியா?” என்று கேட்க

“ம்...? ஒம்ம சாமியாட்டத்த பாத்தம்ல வோய்.....அதுல வயிறு நெறஞ்சிட்டு..பாரும்...”

என்று வயிற்றைத் தட்டியபடி அவன் அவரருகே நெருங்கி உட்கார முனைந்தான். உட்கார இடமில்லாததை உணர்ந்து அவர் விலகி அவனுக்கும் இருக்கச் சற்று இடம் கொடுத்தார். அவன் அவரை இடித்துக் கொண்டே நடையில் பொத்தென்று உட்கார்ந்தான். அவருக்குச் சற்றுத் திணறலாக இருந்தது. எழுந்திருக்கப் போனவரைப் பிடித்து அமர்த்திக் கொண்டான்.

 

“செரி..,பைசாத் தாரேன்..நாடார்கடை தொறந்திருக்கான்னு பாத்து ஏதும் வாங்கித் திங்கியா..?” என்றுக் கேட்டார்.

“நீரு தாரப் பைசாவுக்கு நாடாரு கடையில என்னத்தெக் கெடக்கும்? புடுக்குத் தான் கெடைக்கும்!..” அவர் அமைதியாகிவிட்டார். பெருச்சாளி ஒன்று கண்டக்டர் வீட்டு மடையிலிருந்து வெளியே குதித்து வந்த பொழுதிற்குள்ளாகவே குறுக்காக ஓடி மறுமடைக்குள் குடைந்து கொண்டு சென்றது.

 

“செரி, நா படுக்கப் போட்டா..? ஒறக்கம் கண்ணைச் சிக்குது...” அவர் மீண்டும் எழுந்திருக்கப் போனார். அவன் தடுத்துவிட்டு அவரிடம்,

“இருமாம் ஓய். நா ஒம்மக்கிட்ட ஒரு காரியம் கேக்கணும்..’’ அவர் மேற்கொண்டு நீளும் பேச்சினைத் துண்டிக்க இயலாமல் தவித்தபடி அவனைப் பார்த்தார்.

‘’நீரு கள்ளச் சாமி தானே ஆடுதேரு?’’

அவர் பதில் சொல்ல இயலாமல் அவனைக் கூர்ந்துப் பார்த்தார். அவன் விடுவதாக இல்லாமல், ‘’அடுத்தத் தடவ ரெண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து ஆடுவோமா?” என்று கேட்டான்.

தங்கையாவுக்கு ஏற்கனவே இருந்த பலகீனத்தில் இந்தத் தாக்குதல் தாங்க முடியாததாக இருந்தது. அவர் தன் முகத்தினை ஒருதடவைக் காய்ப்புக் காய்த்தத் தன் கைகளால் துடைத்துக் கொண்டார். எத்தனையோ யோசித்தது போல, “செரி.நீ போ” என்று அழுத்திக் கூறினார்.

“சொல்லிட்டுப் போவுமாம் வோய். நா எஞ்சந்தேகத்தத்தானேக் கேக்கேன்..ஏன் ஓடுதீரு?”

“நான் படுக்கெட்டு..”

“இரும் ஓய்... சொல்லிட்டுத்தான் போயிப் படுமே”

“எனக்குத் தெரியல்ல”

“ஒமக்கு ஆடத் தெரியிது..ஆனாக் கேட்டாச் சொல்ல மாட்டீரு..ன்னா?”

“அத நீ சொடலக் கிட்டப் போயிக் கேளு..’

“சொடலையா வந்து ஆடுதாரு...அவருக்கிட்டப் நாம்போயிக் கேக்க..? நீருல்லாவோய் ஆடுதேரு.. விட்டு அடிக்காதேயும் பதிலச் சொல்லும் ?”

“நா சொடலைக்கு ஆடுதேன். ஒரு வேளை நா ஆடது கள்ளச் சாமின்னா அதுக்கானக் கூலியச் சொடல எனக்குக் குடுப்பான். நீ இதுல எடைபடாதே..சொன்னாக் கேளு. உபத்திரவத்த இழுத்துவுடாம வீடு போய்ச் சேரு”

“அதுசெரி!. அப்ப சொடல குடுத்தக் கூலியினால தான் ஒமக்கு ஓதம் தொங்குதுங்கேரு..”

அவர் அவன் கையைத் தட்டி விட்டு எழுந்தார்.

உடம்புக்குள் தீ குப்பென பாய்ந்து ஓடியது.

“அப்ப நீரு கள்ளச்சாமின்னு ஒத்துக்கிட்டேரு..நில்லுமாம் ஒய்.! ஏன் ஓடுதேரு?”

“கேளுன்னுதான் சொல்லிட்டம்லா.. அன்னா நெலப்பிடிச்சி நிக்காருல்லா..அவருக்கிட்டப்போயி நின்னுக் கேளு. ஒரு தராதரம் இல்லாத கேள்வியெல்லாம் கேக்கவிட்டு வேடிக்கையாப் பாக்கெ?” அவர்  சுடலை இருக்கும் இடம் பார்த்து சினந்துக் கூறினார்.

“எதுக்கு ஓய் இப்டி ஊர ஏமாத்துதேரு? ஒமக்கு இதுல என்னக் கெடக்குது?”

‘’என்ன வேணும்னாலும் நெனச்சிக்கயேன். போ “ என்றார்.

“ஓ...இப்படி ஆடி ஆடித்தானே வள்ளிய வளைச்சிப் போட்டேரு. அவ சம்பாதிச்சப் பைசா எல்லாத்தையும் அமுக்கினீரு?”

தங்கையாவுக்கு இடவலம் பார்க்காது வலி சுண்டி எடுத்தது.

“இப்ப நா ரோட்டுலக் கெடக்கணும்..நீரு மட்டும் சொகுசா வீட்டுக்குள்ளப் பொண்டாட்டிப் பக்கத்துல சொதுங்கிக் கெடப்பீரு. அப்படித்தானே? வாரும் ஓய் ரோட்டுக்கு எங்கூடப் படுக்கதுக்கு..”

அவன் அவர் கையைப் பிடித்து இழுத்தபடி தெருவில் இறங்கினான். அவர் நிலை தடுமாறி சுற்றினார். தலை கிறங்கியது. தெருக் கடைசியில் எரிந்து கொண்டிருந்த அம்மன் விளக்கு சுற்றலில் வந்து போனது. பயந்து சட்டென மின்கம்பத்தைப் பிடித்துக் கொண்டார்.

அவனதுக் கையினைத் தட்டிவிட்டு, “வேண்டாம். தெய்வத்துக்கு ஏக்க நடந்துக்கோ. பாவத்த இழுக்காதே. நாஞ்சொல்லுதேன் மொதல்ல இங்கேருந்துபோ’’

“நீரு ஆருவோய் சொல்லதுக்கு? என்னப் பாவத்தக் கண்டுட்டேரு..நீரு கள்ளச்சாமியா ஓவ் ஓவ்னு கத்துதேரே அது பாவம் இல்லியா? ஊருலேருந்து பொழைக்க வந்தவள மடக்கிப் போட்டுக்கிட்டேரே... நா இன்னைக்கி அனாதையா பொலம்பிக்கிட்டுத் திரியிதேனே அதுலாம் பாவம் இல்லியா? வாரும் ஓய் ரோட்டுக்கு...” என்று அவரை மேலும் இழுக்கப் போகையில் தான் ஆபத்தில் சிக்கிக்கொண்டோமே என்று அதிகமாக அச்சம் கொண்டார் தங்கையா.

 

தெருவிற்குள் யாரோ வருவது தெரிந்தது . ரவி கண்டுகொள்ளாது அவரைப் பிடிக்கப் போக வந்தவன் ரவியின் இடுப்பைப் பிடித்துக் கொண்டான். தங்கையா அசைவில் அவனை யாரெனக் கண்டு கொண்டார். அவருக்குச் சற்று நிம்மதி வந்தது.

 

“நீ எதுக்குலே அந்த மனுஷங்கிட்ட போயி சண்டை போடுதே..வீட்டுக்கு வா நீ” என்று மதன் அவனை அந்த இடத்திலிருந்து கடத்த முயற்சித்தான்.

“நா ஒண்ணும் ஒன்னய மாதிரிக் கோச்சப்பய இல்லக் கேட்டியா? இவன விட்டு வக்கது செரியில்ல. அடிச்சிப் பூத்திரணும்..விடு என்னை..” என்று ரவி திமிறிக் கொண்டு தங்கையாவிடம் சென்றான். மதன் தன் பலம் கொண்ட மட்டும் அவனை சிரமப் பட்டு இழுத்து, “ஒண்ணுந் திங்காட்டாலும் இவனுக்கு எங்க இருந்து தான் இவ்ளோ பெலம் வருதோ..” என்று புலம்பிக் கொண்டே போக, தெருவிற்கு லேசாக உயிர் வந்தது. கதவுகள் திறந்தன.

 

சாலையில் கத்திச் சத்தமிட்டபடி போன ரவியையும் அவனை இழுத்துக் கொண்டு போன மதனையும் ஜீப்பில் வந்த போலீஸ் தூக்கிப் போட்டுக் கொண்டு போனது. இரவில் மாட்டிக் கொண்டதால் பலவிதமான முறைகளில் இருவரிடமும் போலீஸ் நடத்திய தாக்குதல்களை வாங்க ஆரம்பித்த பிறகு ரவியின் உடம்பு அடிகளை ஏற்றுக்கொண்டது. மதனின் உடம்பு தாங்க முடியாமல் வங்கு வந்து வீங்க, அது நீரிவிட்டது. தங்கையா தானறிந்த வகையில் ஆட்களின் கைகால்களைப் பிடித்து இருவரையும் வெளியேக் கொண்டு வந்தார். அதன்பிறகு மதன் சர்கார் மருத்துவமனையில் சில நாட்கள் தொடர் சிகிச்சை எடுத்துவிட்டு அடிக்கடிக் காலை உதறி நடந்தபடி ஒரு நாள் தங்கையாவைக் காண தெருவிற்கு வந்தான். இரவு வெகு நேரமாகியும் தங்கையா வராதுபோக இருளின் மத்தியில் தங்கையா வீட்டு நடையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சென்றவன் தான் வாங்கிய அடிகளை மனதில் வைத்துக் கொண்டு தீவிரமாக படிப்பில் கவனத்தை செலுத்தினான். ரவி தன்னை கதாநாயகனாகக் கருதிக் கொண்டு திரிந்தான்.  அதன் பலனை தாஜ் அனுபவிக்க வேண்டி வந்தது.

 

(கனா தொடரும்)

 

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக் கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர் இது. செவ்வாய்தோறும் இது வெளியாகும்.  உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்)

 

 

கனா மீது வருபவன் - 15

கனா மீது வருபவன் - 16

கனா மீது வருபவன் - 17

கனா மீது வருபவன் - 18

கனா மீது வருபவன் - 19

கனா மீது வருபவன் - 20

கனா மீது வருபவன் -21

 

 

 

 

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...