அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அய்யப்பன் மகாராஜன் எழுதும் தொடர்கதை - கனா மீது வருபவன் - 28

Posted : புதன்கிழமை,   நவம்பர்   26 , 2014  12:58:17 IST

தன் முழு பலத்தையும் கூட்டிக்கொண்டுத் தெருவை நோக்கி ஓடினாள் தாஜ். நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக பயமும் அவளுடன் கூடவேத் துரத்திக் கொண்டு வந்தது. ஓட்டத்தை நிறுத்தாமல் தெருவை விட்டே தூரமாக எங்காவது ஓடிவிடலாம் போலவும் தோன்றியது அவளுக்கு. பாதுகாக்க யாராவது ஓடிவந்து நிற்கமாட்டார்களா என வேண்டியது மனம். சுடலைக் கோயிலைத் தாண்டியபிறகு, அவள் தெருவிற்கு வந்து சேர்ந்த அதே நேரம் அவளது வாப்பா உதுமான் தனது தம்பி காதருடன் தெருவிற்குள் நுழைந்து வந்து கொண்டிருந்தார். தாஜ் சிலைத்துப் போய் நின்று விட்டாள். முடுக்கிலிருந்து வந்த அவளைக் கண்டதும் உதுமானுக்கு முதலில் எதுவும் புரியவில்லை. உடல் நீரால் மெழுகப்பட்டிருப்பது போல இருந்ததைக் கவனித்தார்.

 

“இதுக்குள்ள எங்கப் போயிட்டு வாரப் புள்ள......?ஒனக்கு மழையிலக் கெடந்து ஆடாட்டா சோறு கெடக்காதா..? எத்தரத் தடவச் சொன்னாலும் கேக்கியா..?”

 

உதுமான் சற்று கோபத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார். தாஜிற்குப் பேச வாய் வரவில்லை. தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

 

“பின்ன எதுக்கு நிக்கே...? போ ..போயி தலையத் தொவத்து..” என்று உதுமான் மேலும் அதட்ட காதர் அவளது மருளும் கண்களுக்குள் பதுங்கும் எதையோக் காண விரும்புவதைப் போலத் தேடினார். அவள் அதற்கு மேல் நிற்காமல் சட்டெனத் தெருவின் குறுக்கேக் கடந்து முடுக்கினுள் நுழைந்து தன் வீட்டினை நோக்கி ஓடினாள்.

 

“புள்ளைக்கு என்னச் சொல்லிக் குடுத்து வளத்துதியோ...வூட்டுக்கு வாரவங்கள வாங்கன்னு கூப்புடச் சொல்லி வளத்தணும்.! ம்...என்னத்த வளத்தியோ..என் வூட்டுக்கு வந்தியே......எம்புள்ளையோ கூப்புட்டதேப் பாத்தியா..? அதாக்கும்...!”

 

“சொல்லிக் குடுக்காமயா வளக்கோம்....?இப்ப உள்ள புள்ளியோ சொல்லு பேச்சு கேக்கது இல்ல. நெஞ்சுக்குத்தான் வேலை வக்குதுவோ. நம்ம நெஞ்சுக் கெடந்து அடிக்கது அதுவளுக்கு தெரியுதா?” என்று கூறவும், தாஜ் வந்த முடுக்கினுள்ளே பார்த்த காதர்,

 

“உள்ள என்ன இருக்கு வீடுவளா?” என்று கேட்டார்.

 

“ஆங்..மொனை வரைக்கும் கொஞ்சம் வீடுவோ இருக்கு. அதுக்குப் பொறத்தால களம் கெடக்கு. ஏன் நீ வாங்கப்போறியா?”

 

“சும்மக் கேட்டேன். களம்னா வெத்துக் களமா?”

 

“நாம் போயி பாத்ததுக் கெடையாது. வெத்துக்களந் தான்னு நெனைக்கேன். ஆனா உள்ள ஒரு கோயிலு இருக்கு”

 

“கோயிலு இங்கெல்லா இருக்கு?” சுடலைக் கோயிலைக் காட்டி காதர் கேட்க,

 

“அங்கயும் ஒண்ணு இருக்கு. துடிமாடனாம். செக்கடி மாடன்னு பேரு சொல்லுதாவோ”

 

“அந்தக் கோயிலுக்குப் போறதுக்கும், வாரதுக்கும் வழி இது தானோ?”

 

“ஆங். ஆனா வழி அவ்வளவு செரியில்லைன்னு நெனைக்கேன்”

 

கேட்டுக்கொண்டே காதர் முடுக்கினுள் நுழைந்தார்.

 

“நீ அங்க எதுக்குப் போறே?” திகைப்புற்ற உதுமான் கேட்க

 

”வா நீ..ஒரு பார்வை பாத்துட்டு வருவோம்”

 

“எதுக்கு? செரி, அப்டீன்னா பொறவுப் போயிக்கிடலாம் இப்ப வீட்டுக்குப் போயி சாயா கீயா ஏதாவது குடிக்கலாம் வா”

 

அவர் திரும்ப முனைய,

 

“இல்ல. எடம் எப்படி இருக்குன்னு பாக்கணும்னு தோணுது. நீ கூட வா..” சொல்லிவிட்டு காதர் தீர்மானமாக நடக்கத் துவங்க வேறு வழியில்லாமல் உதுமானும் அவரைப் பின்தொடர்ந்தார். சுடலை கோயிலைத் தாண்டி பின்புறக் களம் வரும் வரைக்கும் இருந்த தெருவின் அம்சம் களம் துவங்கியதும் தனது வேறு முகத்தைக் காண்பித்தது. காதருக்குத் தன்னை அழைத்து வந்த இரை போன்ற ஒரு இலக்கு அங்கு இருப்பதாக மனம் அடித்துக் கூறியது.

 

“நீ சொன்ன  மாடங்கோயிலு எந்தப் பக்கம்?”

 

“நா எங்க பாத்திருக்கேன்..? உள்ள தான் இருக்குன்னு தெரியும். அவ்வளவு தான். நீ என்ன சாமிக்கு மஞ்ஞண குடுக்கப்போறியா?” உதுமான் சற்றுக் கிண்டலாகவே கேட்டார்.

 

“கொடயக் குடுக்க ஆளுல்லா இருக்கு. நா வேற குடுக்கணுமா?’’ காதர் கேட்டுக்கொண்டே ஊடுருவிக் கிடந்த வெளிச்சத்தினை மிதித்துக் கொண்டு நடந்தார்.

 

உதுமானுக்கும் இப்படியொரு அடர்ந்த பகுதியிருப்பதைக் காண்பது என்பது இதுவே முதல் தடவையாக இருக்க, அதை மனதிற்குள் சிலாகித்துக் கொள்ளவும் செய்தார்.

 

நனைந்த சருகுத் தொப்பலின் மீது கால்களை வைத்தபோது செருப்பினையும் மீறி தண்ணீர் பிதுங்கி வந்து கால்களை ஈரப்படுத்தியது. சற்று தூரம் நடந்ததும் தேவையில்லாது செல்கிறோமோ என்ற நினைப்பு வந்து உதுமான், “திரும்பிருவோமா?” என்றுக் கேட்டார்.

 

“ரெண்டு எட்டுக் கூடப் பாத்துட்டுப் போலாம்” என்று காதர் வேகமாக எடுத்து வைத்த முதல் எட்டில் கால் கூறிய கல் மீது இடித்தது. உதுமான் சற்றுப் பின்வாங்கினார்.

 

“வேண்டாம். போலாம்.......ன்னா” என்றார் காதரிடம்.

 

காதர் அவரைப்பார்த்து , “நீ உள்ள வந்தது இல்லல்லா. அங்கப்பாரு..” என்றார். உதுமான் பார்த்தபோது வெகுதூரத்தில் நெடுமரமாக நின்றுகொண்டிருந்த செக்கடிமாடன் அவர் பார்வைக்கு புலப்பட்டார்.

 

“நாஞ்சொன்னம்லா செக்கடிமாடன்னு.....அதுதான்..” உதுமான் கூறியபோது காதர் செக்கடிமாடனைப் பார்த்தார். மஞ்ஞணை வழிய சிகப்பு ஈரமுகத்துடன் தெரிந்த செக்கடிமாடனைக் கண்ட காதர் ஒரு கணம் பீடத்தை உற்றுப்பார்த்தார். பார்வை விலக மறுத்தது.

 

பிறகு உதுமானிடம் “அது இருக்கட்டும், நீ அங்கப் பாதியா?” என்று மீண்டும் ஒரு இடத்தைக் காட்டிக் கேட்க, அப்போது தான் காதர் காட்டிய இடம் பீடமல்ல என்பதை உணர்ந்தார் உதுமான். காதர் சொன்ன இடத்தைப் பார்த்த உதுமான் திகைத்துப் போனார். நிற்க இயலாமல் தள்ளாடியபடி தலையில் கைவைத்துக் கொண்டு ரவி அப்போதுதான் எழுந்து நின்றான். பிறகு மெதுவாக முன்னோக்கி நடந்துவர முயற்சி செய்துகொண்டிருக்க,

 

“இதாரு காக்கா..?” என்று கேட்டார் காதர்.

 

“நாஞ் சொன்னமுல்லா.. தாஜிக்கிட்ட லெட்டருக் குடுத்தவன் இவன்தான்..”

 

இவர்கள் எதிரில் நிற்பதைக் கண்ட ரவி நேராக அவர்களை நோக்கியே வந்தான். காதர் தன் வேட்டியை மடித்துக் கொள்ள, உதுமான் கைகளை முறுக்கி உள்ளுக்குள் உலை கொதிக்க நின்றுகொண்டிருந்தார்.

 

நேராக வந்த ரவி நெருங்கியதும் உதுமானை ஒரு முரட்டுப்பார்வையைக் கொண்டு பார்த்துவிட்டு சரேலென விலகினான். உடேன காதர் “லே..” என்று கூப்ப்பிடார். அவன் கண்டுகொள்ளாமல் தலையைப் பிடித்தபடியே சென்று கொண்டிருந்தான்.

 

“லே..நில்லுலே..” என்று அதட்டினார் காதர். அவன் மேலும் வேகமாகச் செல்லப் போக காதரும் வேகம் கொண்டு திரும்பினார். கால் முன்பு இடித்த அதே கல்லில் இந்த முறை மேலும் வேகமாக இடித்தது. உதுமான் காதரைப் பிடித்துக் கொண்டார். உதுமானின் உடல் நடுங்குவதை காதரால் உணர முடிந்தது. காலை உதறிய காதர் அடியைப் பொருட்படுத்தாது தெருவை நோக்கி நடந்தார். சற்று இடம் குழப்பினாலும் கூட இருவரும் ஒன்றாக தெருவிற்கு வந்து சேர்ந்தார்கள். எனினும் ரவியைக் காணவில்லை. காதருக்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவர் உதுமானைப் பார்த்தார். உதுமானுக்குத் துக்ககரமாக இருந்தது. ஆத்திரம் தலைக்கேற இருவரும் வீடு நோக்கிச் சென்றார்கள்.

 

வழக்கமாகத் தான் படிக்க உட்காரும் மூலையின் ஓரமாக சாய்ந்து கிடந்தாள் தாஜ். அவள் விரும்புகிற ஒரு திசையில் பயணிக்க விரும்பாத மனம் துயரம் நிற்கிற திசையை நோக்கி நகரக் கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடியிருந்த அவள் மனதுடன் போராடிக்கொண்டிருந்தாள். காதரும் உதுமானும் வீட்டிற்குள் வந்தபோது கூட அவள் அதை உணரவில்லை. ஆயிஷாவின் குரலின் பரபரப்பு தொடர்ந்து கேட்டபிறகு தான் அவள் கண்விழித்தாள்.

 

காதர் தனக்கு இடப்பட்ட இருக்கையைப் புறக்கணித்துவிட்டு தாஜின் எதிரே வந்து உட்கார்ந்தார். அவரது இருப்பு வேறு விதமான விபரத்தை அவளுக்கு அறிவுறுத்துவது போல இருந்தது. சம்பந்தமில்லாது கண்கள் சொருக, பார்வை அடைப்பட்டது போல இருந்தது. தலை கனத்து பாரமாக இருந்தது. காதர் தனக்குள் உருவாகியிருந்தக் கேள்விகளை அவளிடத்தில் கேட்கத் துவங்கினார். கேள்விகள் ஒவ்வொன்றும் விசாரணைக்கு உட்படுத்துவது போல அவளை நெருக்கின. அதன் வழிமுறையை விரும்பாத தாஜ் சலித்துப் போன ஒருகட்டத்தில் பதில் சொல்ல வெறுப்புற்று வெறுமையை தேர்ந்தெடுத்தாள்.

 

யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படியொரு சம்பவம். ஆயிஷா தன் வாழ்நாளில் நடக்குமென்று  நினைத்துக் கூட பார்த்ததும் இல்லை. ஒரு கையால் தாஜின் செவியினை இழுத்தக் காதர் மறுகையினால் ஓங்கி அறைந்தார். அறைந்தார் என்றால் நிறுத்தாது கேள்விகள் கேட்டுக் கேட்டு பலமுறை அறைந்தார். தாஜ் பலத்த தாக்குதலை அடைந்தவளாக அதிர்ச்சியில் நிலைகுலைந்தே போனாள். நடப்பதை உணர்ந்தும் உணராமலும் குழம்பித் திணறினாள். அழக்கூடாத முடியாத அவதியை அடைந்த அவளது நாக்கு துடிதுடித்து உள்ளே இழுத்துக் கொண்டது. தொண்டை விக்கியது. கண்கள் சீறி நிலைக்குத்த பார்வை ஒருதிசையில் நின்று கொண்டது. சில வினாடிகளுக்குப் பிறகு ஒரு வினோதமான ஒலியெழுப்பல் அவளிடம் நிகழ ஒரு கண் விழி மட்டும் சோடா குப்பியின் உள்ளே உருளும் கோலியைப் போல உருண்டு வந்து புருவ மத்தியின் கீழே நாசி எலும்பில்  ஒட்டிக்கொண்டு மாறுகண் போல நடுங்கியது. உதடுகள் பிரிந்து வாய் கீழிறங்கித் தொங்கியது. சலைவா வடிந்தது.

 

உதுமானோ ஆயிஷாவோ இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாம் காதரின் கையிலிருந்தது. காதருக்கும் கூட ஒன்றும் புரியவில்லை. எனினும் தனது ஆத்திரத்தை மட்டுப்படுத்த இப்போது காதர் நிலைமையை சீராக்குவதாக நினைத்து மேலும் அறைந்தார். ஆனால் அதன்பிறகு விழுந்த அடிகள் எதற்கும் தாஜின் உடல் எதிர்வினையைக்  காட்டவில்லை. மகள் இறந்துபோய்விடுவாள் என்ற பயத்தில் ஆயிஷா அவள் குறுக்கே வந்து தடுத்தாள். காதருக்கு ஆத்திரம் மட்டுப்பட மறுத்தது. சத்தம் கேட்டு வீட்டின் முன் யாராவது விசாரிக்க வருவதாக உணர உதுமான் ஓடிப்போய்க் கதவினை அறைந்து சாத்தினார்.

 

காதரின் முன்பு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. தனக்குள் குற்றஉணர்வு ஏற்பட்டுவிடாது தடுக்க முனைந்த அவர் உதுமானைத் திட்டினர். தன்னைக் குற்றவாளியாக்கும் செயலை நிகழ்த்திவிட்டதாக குற்றம் சாட்டினார். அதன்பிறகும்  நிலைமை சரிவரவில்லை. ஆயிஷாவின் வளர்ப்பினை குறை கூறும்படி உதுமானை நிர்ப்பந்தித்தார். உதுமானும் சுயமற்றுப் போயிருந்தார். ஆயிஷா தலையிலடித்துக் கொண்டு அழுதாள்.

 

“தாஜீ..கண்ணு தாஜீ..எங்கண்ணு தாஜீ....”

அவள் எழுப்பிப் பார்த்தாள். விழிகள் அச்சம் தரும்படி நிலைத்தே நின்றன. தண்ணீரைக் கொண்டு வந்து முகத்தில் தெளித்தாள். முகம் அசையும் என்று அவர்கள் காத்திருந்தது வீணாகப் போய்க்கொண்டிருந்தது. வாயில் தண்ணீரைப் புகட்டிப் பார்த்தாள் . உள்ளே செல்லாது நின்ற நீர் வழிந்தது.

 

“எல்லாம் நடிப்பு காக்கா.. எனக்குத் தெரியாதா?” காதர் சொல்லிப் பார்த்தார். கோபம் கொண்டு ஒருதடவை அசைந்துவிட மாட்டாளா என்று. ஆயிஷா கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடினாள்.

 

(கனா தொடரும்)

 

 

(அய்யப்பன் மகாராஜன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இப்போது சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் தீவிரமாக இயங்கிவரும் இவர்  தன் இளமைக் கால நினைவுகளில் இருந்து மீட்டு எழுதும் கதைத் தொடர் இது. செவ்வாய்தோறும் இது வெளியாகும்.  உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு எழுதுங்கள்)

 

 

 

 

கனா மீது வருபவன் -25

கனா மீது வருபவன் -26

கனா மீது வருபவன் -27

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...