அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

நேருவுக்குப் பின் 50 ஆண்டுகள்- வெங்கடேஷ் ஆத்ரேயா

Posted : திங்கட்கிழமை,   மார்ச்   31 , 2014  16:10:24 IST

நவீன இந்தியாவின் முக்கியமான சிற்பிகளில் ஒருவர் ஜவஹர்லால் நேரு என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. சுதந்தர இந்தியாவின் கொள்கைகளை இரண்டாம் உலகப்போரை ஒட்டி அப்போது நிகழ்ந்திருந்த மூன்று முக்கியமான நிகழ்வுகள் தீர்மானித்திருந்தன:
 
1) 19ஆம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளை காலனி ஆதிக்கம் செய்து, சுரண்டிக் கொழுத்திருந்த பலம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் ,  முதல், இரண்டாம் உலகப்போர்களில் வென்றாலும் தோற்றிருந்தாலும் பலம் இழந்திருந்தன. இடையில் 1930களில் வந்த மிகப்பெரிய பொருளாதார மந்தநிலையும் இதில் பங்குவகிக்கிறது. 
 
2) சோவியத் ஒன்றியம் வலுப்பெற்றது.  1945க்கு முன் ஒரே ஒரு சோசலிச நாடாக  இருந்த சோவியத் ஒன்றியத்துடன் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பின்னர் மக்கள் சீனமும்  வட  வியட் நாம் உள்ளிட்ட வேறு சில நாடுகளும் சோசலிசப்பாதைக்கு வந்தன. ஒரு வலுவான சோசலிச முகாம் உருவானது. இதையொட்டி பல நாடுகளைச் சேர்ந்த விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன.
 
3) உலக அளவில் காலனி ஆதிக்கம் தகர்க்கப்பட்டு பல நாடுகள் உருவாகின. ஏகாதிபத்தியங்கள் பலவீனம் அடைந்தன.
 
ஆகவே இதைக் கண்ட நேரு சுதந்திர இந்தியாவை  சுயசார்பு உள்ள நாடாக வளர்த்தெடுக்க விரும்பினார். உலகின் இரு முகாம்களிலும் சேராமல் அணிசேரா நாடாக உருவாக்க விரும்பி கொள்கைகளை உருவாக்கினார். 
 
1917-ல் ரஷ்யபுரட்சிக்குப் பின்னால் 1947 வரையில் நடந்த நிகழ்ச்சிகளை அவர் கூர்ந்து கவனித்தவர். 1917-ல் ரஷ்யபுரட்சிக்குப் பின்னால் மேலைநாடுகள் ரஷ்யாவை அழிக்கவே விரும்பின. அதற்கு தொழில்நுட்ப, பொருளாதார உதவிகள் மறுக்கப்பட்டன.  ஆனால் 20களில் சோவியத் ஒன்றியம் வலுப்பெற்றது. பல மத்திய ஆசியக் குடியரசுகள்  அதில் இணைந்தன. அந்த குடியரசுகளில் அப்போது இருந்த எழுத்தறிவு சதவீதம் 2% மட்டுமே. இது 20 - 30 ஆண்டுகளில் 100 சதவீதமாக உயர்ந்த சாதனை நிகழ்ந்தது. கல்வி, ஆரோக்கியம், தொழில் துறை ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இந்த விஷயங்களை நினைத்து, இவற்றை இழந்ததை நினைத்து  இன்று அக்குடியரசு  மக்கள் ஏக்கம் அடைகி றார்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். 1928ல் தான் முதல் உலகப்போருக்கு முந்தைய நிலையை  சோவியத் ஒன்றியம் மீட்டது.ஆனால் அதன்பின் பன்னிரண்டே ஆண்டுகளில் -1940இல் - உலகின் தொழில்வளத்தில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை எட்டியது. இரண்டாம் உலகப்போரையும் சந்தித்தது.   இந்த சாதனைகள் வேறெந்த நாட்டையும் காலனி ஆதிக்கம் செய்து சுரண்டி நிகழ்த்தப்பட்டவை அல்ல.
இதையெல்லாம், நேருவும் அவரைப்போன்ற இந்தியத் தலைவர்களும் கவனித்துக் கவரப்பட்டனர். நாட்டின் வளர்ச்சியில் அரசு முக்கியப் பங்காற்றவேண்டும்.தனியார் துறை முதலீடு செய்யத் தயங்கும் துறைகளில் அரசு முதலீடு செய்யவேண்டும் என்பதே அவரது கொள்கையாக இருந்தது. போக்குவரத்து, மின்சாரம், நிதி கட்டமைப்பு, ஆரோக்கியம் போன்ற துறைகளில் அரசு முதலீடுகள் செய்யப்பட்டன. இந்த பொதுத்துறை முதலீடுகள் தனியார் துறை வளர்ச்சிக்கும் உதவின. 1960களில் டாடாவே, “நாங்கள் இன்று வளர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு பொதுத்துறை முதலீடுகளே காரணம்” என்று கூறியதைக் கவனிக்க வேண்டும்.
 
நாட்டின் வளர்ச்சியில் அரசின் பங்கை உறுதிப்படுத்தியது, நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அறிவியல் கண்ணோட்டத்திலும், மதச்சார்பற்ற அரசியலிலும் கவனம் செலுத்தியதே எதிர்கால இந்தியாவுக்கான நேருவின் மிக முக்கியப் பங்களிப்பாகும்.
 
அத்துடன் அவர் உலகின் இரு முகாம்களுக்கிடையிலான போட்டியையும் இந்திய நாட்டுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொண்டார்.  எஃகு ஆலை அமைக்க பிரிட்டனின் உதவியைக் கோரியபோது மறுக்கப்பட்டது. உடனே அவர் சோவியத் யூனியனின் உதவியை நாடினார். அவர்கள் பிலாயில் ஆலை  அமைத்துக் கொடுத்து உதவினார்கள். இதை அடுத்து மேலை நாடுகள் ஓடிவந்து வேறு இடங்களில் ஆலைகளை அமைக்க உதவினார்கள். 1947 முதல் 64 வரையிலான அவரது ஆட்சியின் காலகட்டத்தில் 3 ஐந்தாண்டுத் திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.
1900 த்திலிருந்து 1947 வரையில் இந்திய மொத்த உற்பத் தியின் வளர்ச்சி ஆண்டுக்கு  1சதவீதமாக இருந்தது. அது நேருவின் காலகட்டத்தில் ஆண்டுக்கு 4 சதவீதமாக உயர்ந்திருந்தது. 1947-ல் வேளாண்மைத்துறையின் வளர்ச்சி 0.4 சதவீதமாக இருந்தது நேருவின் காலத்தில் 2.6 சதவீதமாக வளர்ந்தது. தொழில்துறை ஆண்டுக்கு 6.8 சதவீத வளர்ச்சியைப் பெற்றது. இத்திட்டங்களும் நேருவுக்குப் பின்னால் நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது சரியாக செயல்படுத்தப்படவில்லை. 1966இலிருந்து மூன்றாண்டுகளுக்கு இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்திராகாந்தியின் காலகட்டத்தில், 70களின் மத்தியில் தொடங்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் பின்னுக்குத் தள்ளப் பட்டு இந்திராவின் 20 அம்சத் திட்டம் முன்னிறுத்தப்பட்டது. பின்னர் சஞ்சய் காந்தியின் ஐந்து அம்சத்திட்டம். அதன் பின்னர் ஜனதா ஆட்சியில் ஆண்டு தோறும் திட்டமிடவேண்டும் என்றார்கள்.
 
இந்த ஐந்தாண்டுத்திட்டங்களைப் பொருத்தவரையில் உற்பத்தியில் அரசின் பங்கை மட்டுமே திட்டமிட முடிந்தது. தனியாரின் பங்கை தீர்மானிக்கமுடியவில்லை.இந்தியா விடுதலை பெற்றபோது இங்கே சர்க்கரை,  சிமெண்ட், ரயில்வே, இவை சார்ந்த சிறுதொழில்கள் மட்டுமே இருந்தன. இவையல்லாது ரசாயனம், நவீனஆலைகள், மின்சாரம், பாசனத்துறை
கட்டமைப்புகள், எரிபொருள் போன்றவற்றில் பெரும் முதலீடுகள் சுதந்தரத்துக்குப் பின்னால் அரசால் செய்யப்பட்டன.
 
நேரு சோஷலிஸ்ட், இந்தியா சோஷலிச பாதையைப் பின்பற்றியது என்பார்கள். அப்படியெல்லாம் இல்லை. இந்தியாவை நவீன முதலாளித்துவ நாடாக வளர வித்திட்டவர் அவர். அரசு முதலீடுகள் முதலாளித்துவ வளர்ச்சியை உருவாக்கவே பயன்படுத்தப்பட்டன. இந்தியா முதலாளித்துவ நாடாகவே வளர்ந்தது. இன்றுவரை நாட்டின் மொத்த உற்பத்தியில் அரசின் பங்கு 25 முதல் 28 சதவீதம் மட்டுமே. மீதியெல்லாம் தனியார் துறை பங்களிப்புதான். ஆனால் இந்த 25 முதல் 28 சதவீதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. நேருவுக்கு பின்னால் இந்த பாதையில் முரண்பாடுகள் கூர்மை அடைந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னால் நாட்டு வளங்களை முழுக்க தாங்களே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்த முதலாளிகள் அதற்கான தொழில்நுட்பத்துக்காக, கடன்களுக்காக வெளிநாடுகளை மெல்ல நாட ஆரம்பித்தார்கள். அந்நிய முதலீட்டை எதிர்த்தவர்கள் இன்று அதையே நாட ஆரம்பித்தார்கள். இன்று அந்நிய மூல தனம்   பங்குசந்தையில்  முதலீடு செய்யப்படுகிறது. அல்லது இந்திய சந்தையை மட்டும் குறிவைத்து முதலீடு செய்யப் படுகிறது.
 
நேருவால் என்ன செய்யமுடியவில்லை?
 
நிலச் சீர்திருத்தங்களை சரியாக செய்யமுடியவில்லை. கிராமப்புற நில ஏகபோகத்தை உடைக்க முடியவில்லை. விடுதலைப்போராட்டத்தின் போது உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்றார்கள். விவசாயிகள் திரளாக விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டனர். ஆனால் விடுதலைக்குப் பின்னர் துணி சலவை செய்பவனுக்கு துணி சொந்தமாகிவிட முடியுமா என்று கேட்கத்தொடங்கிவிட்டனர்.
 
நேருவுக்கு பிந்தைய காலகட்டத்தில் அவரது கொள்கைகள் எண்பதுகள் வரை நீடித்தன. 1991க்குப் பின்னால் நரசிம்மராவ், தேசிய ஜனநாயகக் கூட்டணி,ஐ.மு.கூ-1, ஐமுகூ-2 ஆகிய அரசுகள் அவரது நிலைப்பாட்டிலிருந்து முழுவதும் விலகிவிட்டன. நேரு உருவாக்க விரும்பிய நவீன மதசார்பற்ற, சுயசார்புள்ள இந்தியா இன்று மேலைநாடுகளைச் சார்ந்திருக்கும் நாடாக மாற்றப்பட்டு விட்டது. உலக வர்த்தக அமைப்புக்குத் தலையாட்டிக் கொண்டிருக்கிறோம்.
 
 
விவசாயத்திற்கு நேரு பெரும் அளவில் பங்காற்றவில்லை என்று சிலர் சொல்வதை நான் மறுக்கிறேன். அவர் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஆற்றிய தன்  முதல் உரையிலேயே, “மற்ற எல்லா துறைகளும் காத்திருக்கலாம். விவசாயத்தைத் தவிர’ என்று குறிப்பிடுகிறார். விடுதலைக்கு முன்னால் 0.4 சதவீதமாக இருந்த விவசாய வளர்ச்சி நேருவின் காலத்தில் 2.64%  என்ற நிலையை எட்டியதை முன்பே குறிப்பிட்டேன். பல்நோக்கு பாசனத்திட்டங்கள், பெரும் அணைகள், கால்வாய்கள் அமைக்கப்பட்டு  சாகுபடிப்பரப்பு விரிவாக்கப்பட்டது அவர் காலத்தில் என்பது முக்கியமானது.
 
(வெங்கடேஷ் ஆத்ரேயா மூத்த பொருளாதார அறிஞர். நமது செய்தியாளரிடம் கூறியதில் இருந்து எழுதப்பட்ட கட்டுரை.)
 
(அந்திமழை மார்ச் 2014 )


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...