அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தயாரிப்பாளரைக் காப்பாற்றுபவராக இயக்குநர் செயல்படவேண்டும்! - ஆர். கண்ணன்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   02 , 2019  14:53:31 IST


Andhimazhai Image
நான் இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் கன்னத்தில் முத்தமிட்டால் படத்திலிருந்து ஆயுத எழுத்து வரை ஏழு வருடங்கள் வேலை செய்துள்ளேன்.
 
அங்கே கற்றுக்கொண்ட விசயங்களைத்தான் இன்னும் நான் பின்பற்றி வருகிறேன். அவர் முப்பது முதல் நாற்பது நாட்களுக்குள் மொத்தப் படத்தையும் முடித்து விடுவார். முப்பதே நாளில் ஓகே கண்மணியை ஷூட் பண்ணி முடித்தார். செக்கச் சிவந்த வானம் 30 முதல் 40 நாட்களுக்குள்ளேயே முடித்தார்கள். காரணம் கிரவுண்ட் ஒர்க் பர்ஃபெக்டாக இருக்கும். ஸ்கிரிப்ட்தான் முக்கியம். நேர்த்தியான ஸ்கிரிப்டை ஒரு வருடம் உட்கார்ந்து, நிறைய நேரம் எடுத்துக் கொண்டு மிகத் துல்லியமாகத் தயாரித்து விடுவார். என்ன பண்ணப் போறோம் என்பது அந்த ஸ்கிரிப்டில் தெளிவாக இருக்கும். ஸ்கிரிப்டில், சின்னச் சின்ன விசயங்கள், லொக்கேசன் பார்ப்பது, ஆர்ட் டைரக்டர் அமர்த்துவது, கேமராமேன், காஸ்ட்யூம் டிசைன் என ஒரு வருட வேலை இருக்கும். ஷூட்டிங் 30 நாள். இந்த ஒரு வருட வேலைக்குப் பெரிதாக செலவிருக்காது. ஷூட்டிங் தான் இருப்பதிலேயே அதிக செலவு வைப்பதாகும். லட்சக்கணக்கில் தினமும் செலவு செய்ய வேண்டியிருக்கும். எனவே அதனைக் குறைக்க வேண்டுமானால் துல்லியமாக பக்கா ஸ்கிரிப்ட் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
இதைச் செய்ய வேண்டுமானால் நிறைய கதைகளை நாம் கேட்க வேண்டும். அதில் உங்களைக் கவர்ந்த கதையைத் தேர்வு செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற கதைதானா அது என்பதைத் தெரிந்து கொள்ள, நிறைய நண்பர்களிடம் அக்கதையைச் சொல்லி விவாதிக்க வேண்டும். அந்தக் கதைக்கான ஸ்கிரிப்டுக்கு டைரக்டரோடு உட்கார்ந்து நிறைய மெனக்கெட வேண்டும். வசனம் உட்பட ஒவ்வொரு விசயத்திலும் நாம் ஈடுபாடு கொள்ள வேண்டும்.
 
நான் தயாரிப்பாளருக்குப் பிடித்த டைரக்டராக இருக்கக் காரணம், எல்லாப் படங்களையும் நான் 30 அல்லது 35 நாட்களில்தான் எடுத்திருக்கிறேன். இவன் தந்திரன் படத்துக்கு 27 நாள்தான் எடுத்தேன். ஒரு வீடு தேவையாக இருந்தது. ஒரிஜினல் வீடாக இருந்தால் அதிக செலவாகி இருக்கும். எனவே பிலிம் சிட்டியில் செட் போட்டோம். அங்கே வாடகை ஐயாயிரம் ரூபாய்தான். ஆர்ட் டைரக்டரிடம் சொல்லி ரிஷப்ஷன் ஏரியாவை வீடு மாதிரி செட் பண்ணிவிட்டோம். கதைப்படி அந்த வீடு தியேட்டருக்கு முன்னாடி இருக்கும். அந்தப் பிம்பத்தை வரவைக்க சீனிவாசா தியேட்டர் வாசலில் எடுத்துக் கொண்டோம். அந்தப் படத்தில் எத்தனை முறை உள்ளே வருகின்றனர்; வெளியே போகின்றனர் என்பவை போன்ற காட்சிகளை எல்லாம் ஒன்றரை நாளிலேயே எடுத்து விட்டேன். இன்டீரியரை, பிலிம் சிட்டியில் எடுத்து விட்டேன். ஒரிஜினல் வீட்டில் எடுத்தால் குறைந்தது 25 நாட்களாவது ஆகும். செட் போட்டதால் 10 நாட்களிலேயே எடுக்க முடிந்தது.
 
ஒரு டைரக்டர் மிகவும் புத்திசாலியாக இருக்க வேண்டும். அவர் தயாரிப்பாளரைக் காப்பாற்ற வேண்டும்.
 
நாம் திட்டமிட்ட வேலை திடீர் என நடக்காமல் போகும்.  உதாரணமாக திட்டமிட்ட நாளில் மழை வந்துவிட்டால் வேலையை கேன்சல் செய்யாமல் அன்று இன்டிரியரில் ஷூட்டிங்கை வைத்து விட வேண்டும்.
 
சில சமயங்களில் 9 மணி முதல் மாலை 6 வரை உள்ள முதல் கால்ஷீட் முடிந்தும் கூடுதலாக இரண்டு மணி நேர இரண்டாவது கால்ஷீட்டில் போக வேண்டியிருக்கும். அந்த இரண்டாவது கால்ஷீட்டில் நிறைய டெக்னிசியன்களின் தேவை இருக்காது. காலையிலிருந்து இருக்கும் 140 பேரும் இரண்டாவது கால்ஷீட்டுக்கு தேவைப்பட மாட்டார்கள். இதை புரடக்சன் மேனேஜரிடம் சொல்லி ஆட்களைக் குறைத்து விடலாம்.
 
எல்லா விசயத்திலும் தயாரிப்பாளர் கவனமாக இருக்க வேண்டும். காஸ்ட்யூம் பில் வந்தால் கூட சரிபார்க்காமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
 
ஒரு படத்தில் வீட்டின் மேற்கூரை வைக்க செட் போட வேண்டியிருந்தது. ஆர்ட் டைரக்டர் ஒன்றரை லட்சம் ஆகும் என்றார். பேரம் பேசி ஒரு லட்சமாக்கினோம். ஒன்பது நாள் அதில் சூட்டிங் இருந்தது. கணக்குப் பார்த்தால் ஒரு நாளைக்கு பத்தாயிரம் வாடகை மாதிரி வரும். இதனால் ஒத்துக் கொண்டேன். அதே நேரத்தில் செம்மொழிப் பூங்காவில் ஒரு நாள் படமெடுக்க ஆர்ட் டைரக்டர் அறுபதாயிரம் செட் போடக் கேட்டார். ஒரு நாளைக்கு மட்டும் அறுபதாயிரம் என்பது அதிகம் என ஒத்துக்கொள்ளவில்லை. அதாவது நமக்குத் தேவையான விசயங்கள் தரமாகவும் அதே நேரத்தில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
 
பணத்தை வேஸ்ட் பண்ணாமல் படம் பண்ண வேண்டும் என்பது நான் மணி சாரிடம் கற்றது.
 
சனிக்கிழமை ஆனால் கட்டாயம் இரண்டு கால்சீட் போக வேண்டும். கேரவான், வண்டி எல்லாம் நாள் வாடகைதான். எனவே இரண்டு கால்ஷீட் போனால் நிச்சயம் பணம் மிச்சமாகும். மற்ற நாளில் இரண்டு கால்ஷீட் போனால் மறுநாள் லேட்டாக வருவார்கள். மறுநாள் லீவ் என்பதால் சனிக்கிழமை மட்டும்தான் இந்த யோசனை சாத்தியம்.
 
மொத்தத்தில் தயாரிப்பாளரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு நாம் படமெடுக்க வேண்டும். எதையும் வேஸ்ட் பண்ணக் கூடாது. எடுத்த படம் தியேட்டருக்கு வரவேண்டும் என்றால் தயாரிப்பாளருக்கு நாம் சப்போர்ட் பண்ண வேண்டும்.
 
நான் ஏன் டைரக்டராக இருந்து தயாரிப்பாளர் ஆனேன்? சூழ்நிலைதான் காரணம். என்னால் 35 நாளில் படத்தை முடிக்க முடியும். ஒரு டைரக்டர், ப்ரடியூசராக மாறும்போது, ஹீரோவிலிருந்து டெக்னீசியன் வரைக்கும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும் மனநிலை இருக்கிறது. அதையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
*இவ்வளவு வேகமாக நீங்கள் படமெடுக்கும்போது ஆர்ட்டிஸ்டை எப்படி ஏற்க வைக்கிறீர்கள்? இப்படி நாங்கள் சிக்கனமாகவும் வேகமாகவும் படம் பண்ணினாலும் தரத்தில் குறையாது என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
 
நாம் தெளிவாக இருந்தோம் என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது ஸ்கிரிப்டில் தெளிவாக இருந்து விட்டால் பிரச்சினையே இல்லை. கீழே உள்ளவர்கள் ‘சார்..அதில வந்து’ என ஸ்கிரிப்டில் ஆலோசனைகளை சொல்ல விடக்கூடாது. நமது முடிவுகளைத் தெளிவாக அடுத்தடுத்து நடைமுறைப்படுத்திப் போய்க்கொண்டே இருக்க வேண்டும். இதற்கு ஆர்ட் டைரக்டர், கேமரா மேன், டைரக்டர் எல்லாம் பர்ஃபெக்டாக அமைய வேண்டும்.
 
எப்படி முப்பது முப்பத்தைந்து நாளில் படத்தை முடிக்கிறீர்கள்?
 
முதலில் தினமும் காலை ஏழரை மணிக்கே வேலையை ஆரம்பித்து விட வேண்டும். டிபன் முடித்து விட்டுதான் ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தால் தொலைந்தோம். இதையெல்லாம் முடித்துவிட்டு ஷூட்டிங் போனீர்கள் என்றால் மணி பத்தாகி விடும். அடுத்து உடனே லஞ்ச் பிரேக் வந்துவிடும், இரண்டிலிருந்து மூன்று வரை லஞ்ச். அதன் பின் ஒரு மணி நேரம் வேலையே நடக்காது. அதனால் வேலையைக் கச்சிதமாக முடிக்க, காலை சீக்கிரமே ஆரம்பித்து விடுவதுதான் நல்லது. என்னுடைய படத்தில் ஹீரோயினுக்கு நாளைக்கு எடுக்க வேண்டிய சீனுக்கு இன்று மாலையே காஸ்ட்யூம் கொடுத்து விடுவேன். மறு நாள் காலை 5 மணிக்கு மேக்கப் ஆளை ஹீரோயின் ரூமுக்கே அனுப்பி ஹீரோயினை தயார்ப்படுத்தி ஏழு மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மேக்கப்போடு வரவைத்து விடுவேன். ஹீரோ 9 மணிக்குதான் வருவார். அவர் வரும் வரை அவர் இல்லாமல் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் 9 மணிக்கு முன்பே முடித்து விடுவேன்.
 
உங்கள் படங்கள் உடனுக்குடன் வியாபாரம் ஆகிவிடுகிறது. எப்படி செய்கிறீர்கள்?
 
முதலில் நாம் நம்பிக்கையை உருவாக்க வேண்டும்- இவர் எடுத்தால் சீக்கிரம் படத்தை முடித்துக் கொடுப்பார்-என்ற நம்பிக்கை நம் வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். சந்தானத்தை வைத்து ஒரு படம் பண்ணுகிறேன். பாதி முடிந்து விட்டது. அடுத்த பாதிக்கு அஜார்பைசான் நாட்டுக்குக் கிளம்புகிறேன். இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே இந்தி ரைட்ஸ் விற்று விட்டது. எப்.எம்.எஸ். விற்று விட்டது. தமிழ் நாடு தியேட்டர்ஸ்க்கு பேசிக் கொண்டிருக்கிறோம். இதற்கு முக்கிய அடிப்படை என்னவென்றால் – ஆர்ட்டிஸ்ட் வேல்யூ கொஞ்சமாவது இருந்தால்தான் வியாபாரம் ஆகும். புதுமுகங்களை மட்டுமே வைத்துப் படம் பண்ணினால் இது கொஞ்சம் கஷ்டம். அதர்வா, அனுபமா பரமேஸ்வரன், இமான் இவர்கள் எல்லாம் இருக்கும்போது படத்துக்கு ஒரு கலர் இருக்கும். அது போக நின்னுக்கோரி என்ற தெலுங்கு ஹிட் படத்தின் ரீமேக் இது. மவுனராகம் மாதிரியான ஸ்கிரிப்ட். படத்தில் எந்த விதத்திலாவது ஒரு மேஜிக்கை நாம் கொடுத்தாக வேண்டும். டிசைன் பண்ணுவதில் இருந்து இதைத் தொடங்க வேண்டும். படத்தின் பர்ஸ்ட் லுக் முதற்கொண்டு சின்னச் சின்ன விசயங்களில் கேர் எடுத்து செய்ய வேண்டும்.
 
புதுமுகங்களை வைத்துப் படமே பண்ண முடியாதா?
 
புதுமுகங்களை வைத்துப் பண்ணிய ‘காதல்’ படத்தில் ஸ்கிரிப்ட் பலமாக இருந்தது. மணிரத்னம் போன்ற பேர்வாங்கியவர்கள், எல்லாம் புதுமுகங்களை வைத்துப் பண்ணலாம். அதற்கும் வேல்யூ இருக்கிறது. ஷங்கர் சார் புதுமுகங்களை வைத்து காதல் படம் எடுக்க முடியும். ஏனென்றால் அதற்கு ஒரு பிராண்ட் வேல்யூ இருக்கிறது. ஆனால் புதிதாகப் படம் பண்ண வருபவர்கள் ஒரு ஆர்ட்டிஸ்டை வைத்துப் பண்ணினால் பாதுகாப்பு என்பது என் நம்பிக்கை.
 
மூன்று கோடி போட்டு மூன்று கோடி எடுக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தால்தான் ஷூட்டிங்குக்கே போகவேண்டும். எந்த வருமானமும் உத்தரவாதம் இல்லை என்றால் படம் பண்ணக் கூடாது.
 
சேட்டிலைட் சானலிலும் ஆர்ட்டிஸ்ட் படம் மட்டும்தான் வாங்குவார்கள். இருப்பதே மூன்று சேனல்கள்தான். டிஜிட்டலிலும் பெரிதாகக் காசு வந்திடாது. ஆக ஒரு பிராண்ட் வேல்யூ இல்லாமல் புதுமுகத்தை வைத்துப் பண்ண முடியாது. மிகச்சிறந்த ஸ்கிரிப்ட் வைத்திருந்தால் ஒரு பெரிய கம்பெனியை வைத்துப் படம் பண்ணலாம்.
 
செலவைக் குறைத்து படம் பண்ணினாலும் படம் பற்றி விளம்பரம் வரும் முன்பே விற்று விடும் சூத்திரம் என்ன?
 
இப்போது நாங்கள் சந்தானத்தை வைத்துப் பண்ணும் படத்தை எடுத்துக் கொள்வோம். அவருக்கு என ஒரு மார்க்கெட் வேல்யூ உள்ளது. எனவே அவரை வைத்துப் படம் ஆரம்பிக்கும்போதே இவ்வளவு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என வருகின்றனர். படம் முடித்த பின் விற்றால் இன்னும் அதிகம் விற்க வாய்ப்பு இருந்தாலும் இப்போதே விற்பதால் கைக்குக் கிடைக்கும் பணம், அது தரும் ஐம்பது லட்சம் வட்டி எல்லாம் ஒரு உத்திரவாதமான ஒன்று. எவ்வளவுக்கு எவ்வளவு வட்டியைக் குறைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு நல்லது.
 
இன்பிலிம் அட்வர்டைசிங் – ஒரு படத்தில் எனக்கு பைக் தேவைப்பட்டது. இன்பிலிம்-க்குப் போய்விட்டேன். ஒரு பைக்கை சும்மாவே கொடுத்துவிட்டார்கள். படத்தில் கதைப்படி பெண் பார்க்க வேண்டுமானால் “பாரத் மேட்ரிமோனியில் பதிவு செய்” என்று வசனம் வைத்தால் அந்தக் கம்பெனியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயை விளம்பர வருவாயாக வாங்கிவிட முடியும். (இதைத்தான் இன் பிலிம் என்கின்றனர். இதை வாங்கித் தரும் தரகர்கள் பத்து சதவீத கமிசன் பெற்றுக் கொள்கின்றனர்.) அந்த இரண்டு லட்ச ரூபாயை வைத்து நான்கு நாள் ஷூட்டிங் செலவை ஈடுகட்ட முடியும்.
 
அதேபோல் சின்னச் சின்ன பாத்திரங்களுக்கு ஆர்ட்டிஸ்ட்டைப் போடுங்கள். புதுமுகத்துக்குப் பதில் மயில்சாமியையோ, ராஜேந்திரனையோ போட்டு எடுங்கள். தயாரிப்பாளருக்கு வேண்டியவர், உறவினர் என்பதற்காக எல்லாம் ஒருவரை படத்தில் சேர்க்க வேண்டாம். படம் கெட்டுவிடும். ஹீரோயினுக்கு அப்பா என்றால் ஆர்ட்டிஸ்ட் சம்பளம், இருபதாயிரம், முப்பதாயிரம்தான். அவர் நேரத்தை மிச்சம் செய்வதுடன், கேரக்டருக்கு உயிர்தந்து விடுவார். என் படங்களில் பார்த்தால் படம் முழுக்க ஆர்ட்டிஸ்ட்டாக இருப்பார்கள். இப்படி இருப்பதால் விற்பதற்கு ஒரு வேல்யூ உருவாகி விடுகிறது.
 
இன்னொன்று, ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்து விட வேண்டும். சந்தானம் படத்தின் ஸ்கிரிப்ட் இரண்டு வருசமாக போய்க்கொண்டு இருந்தது. இப்போது அடுத்த படத்தின் வேலையை ஆரம்பித்து விட்டால், தற்போதைய படம் எடிட்டிங் எல்லாம் முடித்த உடன் அடுத்த படத்தின் ஷூட்டிங் வேலையை உடனே தொடங்கிவிட முடியும்.
 
ஒரு படத்தில் தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் இருக்கும்போது எப்படி உங்களை உணர்வீர்கள்? காசை மிச்சம் செய்பவராகவா? தரத்தில் காம்ப்ரமைஸ் செய்யாத டைரக்டராகவா?
 
ஒரு படத்தின் தரத்தைப் பார்த்துதான் வியாபாரம் நடக்கிறது. படத்தை வாங்க வரும் ஜாம்பவான்களை ஏமாற்றிவிட முடியாது. அதே நேரத்தில் ஆர்ட்டிஸ்ட் – குப்பையான இடத்தில் நிற்கவைத்தால் நடித்துவிட மாட்டார்கள். அதர்வாவுக்கு ஒன்றரைக் கோடி கொடுக்கிறோம் என்றால் அவருக்கும் ஒரு கேரியர் இருக்கிறது. அவரும் கண்ட இடத்தில் நின்று நடித்து விட மாட்டார். எனவே இங்கே எல்லாம் குவாலிட்டியைக் குறைக்க முடியாது. எங்கே செலவைக் குறைக்கலாம் என்றால் காலை 7 முதல் மறுநாள் காலை 2 வரை ஷூட் பண்ணினீர்கள் என்றால் செலவைக் குறைக்கலாம். தரமும் குறைந்து விடாது.
 
ஒரு டைரக்டர் தயரிப்பாளராகும்போது இன்னும் கூடுதல் பொறுப்பாகிறது. ஐம்பது நாளில் எடுக்க வேண்டியதை அவரே முப்பத்தைந்து நாளில் எடுப்பார். தயாரிப்பாளர் வேறொருவராக இருக்கும்போது ஆர்ட்டிஸ்ட் 9 மணிக்குத்தான் வருவேன் என்று சொல்வாரானால் ஏற்றுக் கொண்டு யூனிட் காத்துக் கொண்டிருக்கும். ஆனால் டைரக்டரே தயாரிப்பவராகவும் இருந்தால், அவர், ஆர்ட்டிஸ்ட்டிடம் “இது என்னோட சொந்த தயாரிப்பு. ஏழு மணிக்கு வந்திடுங்க” எனப் பொறுப்பெடுத்து சொல்வார். ஆர்ட்டிஸ்ட்டும் அதைப் புரிந்து நடப்பார்.  இது படத்தின் செலவை கணிசமாகக் குறைக்கிறது.
 
கண்டேன் காதலை படத்தை நாற்பது நாளிலேயே முடித்தோம். அதில் ரயில் காட்சிகளை விசாகப்பட்டினம், விருதுநகர், விருத்தாசலம் என பல ஸ்டேஷன்களில் 12 நாட்கள் எடுப்பதாக பட்ஜெட் போட்டிருந்தனர். ஆனால் அதை மாற்றி செங்கல்பட்டு ஸ்டேசனில் மட்டும் ஊர் பேரை மாற்றி மாற்றி ஷூட் பண்ணி, இரண்டரை நாளிலேயே படத்தை முடித்தோம். இனி கண்ணன் சார் படத்தில் நடிக்க மாட்டேன் என்றார் தமன்னா. ‘என் மகளை இரண்டரை நாள் சித்திரவதை செய்திட்டீங்க’ என்றார் அவரின் தந்தை. ரயிலைப் பொறுத்தவரை பீக் ஹவர்ஸ் தவிர மூன்று மணி நேர இடைவேளையைதான் படம் பிடிக்கத் தருவார்கள். அதைப் பயன்படுத்த நாங்கள் செங்கல்பட்டிலேயே ரூம் போட்டுத் தங்கி ஸ்டேசனில் நின்று கொண்டிருந்த ரயிலையே வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் மாற்றி மாற்றி எடுத்து வேலையை முடித்தோம்.
 
சில இடங்களில் செலவைப் பொறுத்து காம்ப்ரமைஸ் பண்ண முடியாது. பூமராங் படம் நதி நீர் இணைப்பைப் பற்றியது, அதில் ஆயிரம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வைத்து, இருப்பதிலேயே காஸ்ட்லி கோரியோகிராபரான பிருந்தா மாஸ்டரை வைத்து பண்ணினோம். படத்தின் குவாலிட்டிக்கு முக்கியமாக இது தேவைப்பட்டது. அதை எல்லாம் நீங்கள் ஒதுக்கவே முடியாது. ஸ்கிரிப்ட் என்ன டிமாண்ட் பண்ணுகிறதோ அதை ஒரு டைரக்டராக செய்துதான் ஆக வேண்டும்.
 
(தனஞ்ஜெயன்: கதையில் ட்ரெயின் சீன் இருந்தால் அதைப் படமாக்குவது சவாலான விஷயம். காஞ்சிபுரத்தில் மட்டும்தான் அனுமதிக்கின்றனர். அதுவும் ஐந்து மணி நேரம் மட்டுமே ஒரு நாளைக்கு அனுமதிப்பார்கள். அதற்குக் கட்டணம் மட்டும் 14 லட்சம். மெட்ரோவில் எடுக்கக் கட்டணம் 25 லட்ச ரூபாய்.)
 
கண்ணன்: தயாரிப்பாளராகவும் டைரக்டராகவும் இருப்பதால் ஒவ்வொரு செலவையும் நான் தான் பார்க்கவேண்டும், கையெழுத்துப் போடவேண்டும் என்பதில்லை. அதற்கு ஒரு கேஷியரும் ஒரு புரடக்சன் மேனேஜரும் வைத்துக் கொள்கிறோம். இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிந்த பிறகு இரவில் இரண்டு மணி நேரம் செலவழித்து ஒவ்வொரு செலவையும் பரிசீலிக்க வேண்டும். செலவு ஏன் கூடியுள்ளது என்பதை எல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கவேண்டும். அதை முடித்தபின் அடுத்த நாள் ஷூட்டிங்குக்கான டைரக்டராக மாறிட வேண்டும். ஒவ்வொரு விசயத்திலும் கவனம் வைக்க வேண்டும். உதாரணமாக கண்டினியூட்டி. இது இல்லாமல் ஒரு ஷூட்டிங்கே நின்றுபோய் விடக் கூடும்.
 
என்னுடைய முதல் படத்துக்கு தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார்தான். அவர் ஒவ்வொரு நாளும் கூடவே இருந்தது மிகவும் உதவியாக இருந்தது. ஒரு யாகம் வளர்க்கும் காட்சியை எடுக்க பத்து செங்கல்கள் தேவைப்பட்டது. செங்கல் ஒன்றுக்கு வாடகை மட்டும் பத்து ரூபாய் என்றார்கள். தியாகராஜன் சார், அதை கட் பண்ணிவிட்டு வீட்டு மாடியில் கிடந்த பழைய செங்கல்களை எடுத்து வரச் சொல்லி அதை வைத்துப் படமெடுக்கச் சொன்னார். தேவையில்லாமல் நூறு ரூபாய் ஏன் செலவழிக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து செய்வார் அவர். இதெல்லாம் எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது.
 
அந்தப் படத்துக்கு ஒரு வீடு செட் போட வேண்டியிருந்தது. தியாகராஜன் சார், இதற்கு எட்டு லட்சம் ஆகும் என ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வாடகையில் வியாசர்பாடியில் ஒரு தனி வீடு பிடித்து வீடு காட்சிகளை முடித்து விட்டோம். வெளிப்புறத்தை வேறொரு அபார்ட்மெண்டை எடுத்து விட்டு, வியாசர்பாடி வீட்டுக்குள், படத்தை முடித்து அபார்ட்மெண்டில் நடப்பது போல் காண்பித்து விட்டேன். என் கதைப்படி அபார்ட்மெண்டில் காட்சி வருகிறது. தயாரிப்பாளர் பணம் தராதபோதும் அதை மாற்றுவழியில் காட்சியாக மாற்றிவிட்டேன். ஸ்கிரிப்டையும் மீறக் கூடாது. தயாரிப்பாளரையும் பேலன்ஸ் பண்ண வேண்டும். முடிந்த அளவுக்கு அவரோடு மோதாமல் நாம் தரத்தைக் கொண்டு வந்து விட்டால் நல்லது. நல்ல ஹிட் கொடுத்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஓரளவு சுதந்திரம் கிடைத்து விடும்.
 
படத்தை இன்னும் சிக்கனமாக எடுப்பது பற்றி.
 
ஏற்கெனவே சூட்டிங் நடந்த வீட்டுக்குப் போகக் கூடாது. முதலில் அதனைக் குறைந்த வாடகைக்குத் தருபவரிடம் எதையாவது சொல்லி ஏற்றி விடுகின்றனர். இரண்டாம் முறை போய் நின்றால் லட்சக்கணக்கில் வாடகை கேட்கின்றனர். முன்பெல்லாம் ஒரு வீட்டை எடுத்தால் இருபத்து நான்கு மணி நேரமும் படம் பிடிக்கலாம். இப்போது எட்டுமணி நேர வாடகை என்றெல்லாம் கேட்கின்றனர். எனவே இதுவரை ஷூட்டிங் நடக்காத வீட்டைத்தேடி நாம் போக வேண்டும்.
 
ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய வண்டிகள் நிற்கக் கூடாது. தேவையானதை மட்டும் கொண்டு செல்ல வேண்டும். எல்லா ஆர்ட்டிஸ்ட்க்கும் கேரவான் தரமுடியாது என்பதை முதலிலேயே சொல்லி ஒத்துக்கொள்ள வைக்க வேண்டும்.
 
ஷூட்டிங் கிளம்பும்போது ஸ்பாட்டுக்குப் போகும் வரை ஒவ்வொரு விசயத்தையும் ‘ரெடியாச்சா? கிளம்பியாச்சா?’ என போன் போட்டு விரட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
எல்லாம் முடித்த பின் போஸ்ட் புரடக்சனில், தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. ஸ்கிரிப்டுக்கு எப்படி கவனம் எடுத்துக் கொள்கிறோமோ, ஷூட்டிங்கில் தரத்தில் எப்படி காம்ப்ரமைஸ் ஆவதில்லையோ அதே அளவு டப்பிங், கலரிங், எடிட்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மிக்சிங், சவுண்ட் எபக்ட்ஸ் என போஸ்ட் புரோடக்சனுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அதற்கு நிறைய டைம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மாதம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
 
-கற்பகவிநாயகம்
 
(BOFTA  திரைப்படக் கல்லூரி நடத்திய திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் தயாரிப்பாளருமான இயக்குநருமான கண்ணன் நிகழ்த்திய உரையிலிருந்து)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...