அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஊரடங்கு நடவடிக்கை- வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்குக் கோரிக்கை

Posted : வெள்ளிக்கிழமை,   மே   08 , 2020  20:11:36 IST

ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் 43 நாட்களில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த  மையத்தின் சார்பில் மனநல மருத்துவர் சி. அரவிந்தன், பேரா.அ.மார்க்ஸ், பேரா.ப.சிவகுமார், வழக்கறிஞர் அஜிதா, சுஜாதா மோடி, பரிமளா, செந்தில், (இளந்தமிழகம்) ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
 
நாடு தழுவிய ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் பாதிப்பில்லாத பகுதிகளில் படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்திப் பொருளியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது என்று மத்திய மாநில அரசுகள் முடிவுசெய்துள்ளன. அதே நேரத்தில், கொரோனா நோய்த் தொற்று எண்ணிக்கை தமிழகத்திலும் நாட்டின் இன்ன பிற பகுதிகளிலும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பின்வரும் சில பரிந்துரைகளை முன்வைக்கிறோம்.
 
·   கடுமையான ஊரடங்கு அமல்படுத்தபட்ட போதும் ,   தீவிரமான,விரிவான கொரோனா பரிசோதனைகள், தொடர்பு அறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை அளித்தல், மருத்துவக் கட்டமைப்பைத் தயார்படுத்தல், மாநில அரசுகளுக்குப் போதிய நிதியுதவிகளை வழங்கி  மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்திசைவை உறுதிசெய்தல் போன்றவற்றை  மத்திய அரசு போதிய அளவுக்கான வீச்சுடனும் தீவிரத்துடன் செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் 43 நாட்களில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
· சிவப்பு, ஆரஞ்சு, பச்சை போன்ற வகைப்படுத்தலுக்கான தெளிவான, உறுதியான,  வெளிப்படையான தொற்று நோயியல் சார்ந்த வரையறைகள் வழங்கப்படாதது மட்டுமின்றி அதன் அடிப்படையில் நோய்க் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைப் பரிந்துரைகளும் தரப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
 
· அனைத்திந்திய அளவில் மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று வகைப்படுத்தி உள்ளது மத்திய அரசு. மருத்துவக் கட்டமைப்புத் தயாரிப்பு மற்றும் நோய்த் தொற்று எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு மதிப்பிடுவதற்கு அடிப்படை அலகாக மாநிலங்கள் மற்றும் ஒன்றிய புலங்களே (யூனியன் பிரதேசங்கள்) இருக்க முடியும். அப்போதுதான் உண்மையான நிலைமைகளை மதிப்பிட முடியும். எடுத்துக்காட்டாக, மொத்தமுள்ள 36 மாநில மற்றும் ஒன்றியப் புலங்களில், 5 மாநிலங்களில் ஒரு நோய்த் தொற்றுக்கூட இல்லாத நிலையிலும் அவ்விடங்களும் ஊரடங்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, ஒவ்வொரு மாநிலங்களின் மருத்துவக் கட்டமைப்புரீதியான தயாரிப்பு நிலையும்(Health System Preparedness) வேறுபடுகின்றன. எனவே, மாநிலங்கள் மற்றும் ஒன்றிய புலங்கள் அளவில் முடிவெடுப்பதற்கான வழிகாட்டுதல்களைத்தான் மத்திய அரசு வழங்க வேண்டுமே ஒழிய மாவட்ட அளவிலான கட்டளைகளை இடுவது பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு உதவாது.
 
· நோய்க் கண்காணிப்பு பொறியமைவைப் (Disease Surveilance Mechanism) பலப்படுத்தி அதில் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் நாடு, மாநில மற்றும் உள்ளூர் அளவிலான நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா அல்லாத நோய்களினால் ஏற்படும் இறப்புகள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்தும் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 
·  மருத்துவக் கட்டமைப்பு முறிந்துவிடாதபடியும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினரின்( Vulnerable sections) சாவு எண்ணிக்கையைக் குறைக்கும் வகையிலும் நோய்த்தொற்று எண்ணிக்கை மற்றும் நோய்ப் பரவும் வேகம் ஆகியவற்றை மதிப்பிட்டு ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும். நோய் தொற்று ஜீரோ என்பது ஊரடங்கில் இருந்து வெளியேறுவதற்கான வரையறையாக இருக்க முடியாது. இது தேவையற்றதும் சாத்தியமற்றதுமாகும். இது, நோய்த் தொற்றைக் குறைத்துக்காட்ட வழிவகுத்துவிடும்.
 
·  பெருந்தொற்று பரவுவதை தடுப்பதற்கு கூட்டம் கூடுவதை தடுப்பதைத்தான் உலகெங்கும் உள்ள நாடுகள் கடைபிடித்து வருகின்றன. பொதுவாக மக்களுடைய நடமாட்டத்தையே கட்டுப்படுத்துவது என்ற அணுகுமுறையை மேற்கொள்ளவில்லை. ஆனால்,  மத்திய உள்துறை அமைச்சகம் விதித்துள்ள கெடுபிடிகளில் மாலை 7 மணிக்கு மேல் நாடு முழுவதும் நடமாட்டத்திற்கு தடை போடுவது உள்ளிட்ட பலவும் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உதவப் போவதில்லை, நலவாழ்வு என்ற நோக்குநிலையில் இருந்து எவ்வித பொருளும் அற்றவை, இவை காவல்துறைக்கு கூடுதல் சுமையும் மக்களுக்கு தேவையற்ற தொல்லையும் ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
 
·  திரையரங்குகள், வணிக வளாகங்கள், மதுக்கூடங்கள் ஆகியவற்றை நோய்த் தொற்றுக்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் அனைத்தும் மூடிவைத்துள்ளன. அதே நேரத்தில், பள்ளி, கல்லூரி, பொதுப் போக்குவரத்து, தொழில் நடவடிக்கைகள் ஆகியவற்றை அனுமதிப்பதன் மூலம் நோய்ப் பரவலில் எத்தகைய தாக்கம் ( risk factor) இருக்கும் என்பதை மதிப்பிட்டு பிற நாடுகள் முடிவெடுக்கின்றன. சில நாடுகள் தொடக்கப் பள்ளிகள், போக்குவரத்து, 50% செயல்படும் உணவகங்கள்வரை செயல்பட அனுமதித்துள்ளன. பல்வேறு துறைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதால் நம் நாட்டில் எத்தகைய தாக்கம் ஏற்படும் என்பதை மதிப்பிட வேண்டும். அவ்வகையில்,  இன்றியமையாப் பொருட்களுக்கு தடையில்லாதபடி மாநில, மாவட்டங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தை அனுமதித்தல், சிறுகுறு தொழில்களை உரிய பாதுகாப்புடன் செயல்பட அனுமதித்தல் ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறோம்.
 
· போதிய பரிசோதனைகள் செய்யப்படாத நிலையில் ஆரோக்கிய சேது போன்ற செயலியால் பயனில்லை. மேலும் ஆரோக்கிய சேது செயலியை அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் கட்டாயமாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதை கட்டாயமாக்குவது தமது அந்தரங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாகும். ஆரோக்கியசேது செயலியைக் கட்டாயமாக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
 
· நலவாழ்வு அமைச்சகம் பரிந்துரைத்திருப்பதற்கு இணங்க கொரோனா நோய்த் தொற்றியவர்களை மிக மெல்லிய( very mild), மெல்லிய ( mild), மிதமான( moderate), தீவிர ( severe) என்று வகைப்படுத்தி அதற்கேற்றாற்போல் வீட்டுக் கண்காணிப்பு, கொவிட் பராமரிப்பு மையங்கள் ( covid care centres ), கொவிட் நலவாழ்வு மையங்கள் ( covid health centres),  தனியான கொவிட் மருத்துவமனைகள் ( dedicated covid hospitals)  ஆகிய வெவ்வேறு இடங்களில் சிகிச்சை அளிக்க வேண்டும். தற்சமயம் நோயாளிகள் வகைப்படுத்தப் பட்டாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் இடங்கள் வகைப்படுத்தப்படவில்லை. கொரோனா வார்டுகள் நிரம்பி வழிந்தால்தான் கொவிட் பராமரிப்பு மையங்களைப் பயன்படுத்துகிறது தமிழக அரசு. மாறாக, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நோயாளிகளை வகைப்படுத்தி அதற்குரிய தனி இடங்களில் பராமரிக்க வேண்டும். நிறுவனமயப்பட்ட தனிமைப்படுத்துதலுக்கே(Institutional Isolation) அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டிலிருந்தே பராமரித்துக் கொள்வது என்பது விதிவிலக்கான தெரிவாக மட்டுமே இருக்க முடியும்.
 
· மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகள், திருமண மண்டபங்களை கொவிட் பராமரிப்பு மையங்களாக ( Covid Care centre ) பயன்படுத்திக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. அங்கே தனிப்படுக்கைகள் மட்டுமின்றி சுகாதாரமான கழிப்பறைகள் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும். மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்கள், தனியார் விடுதிகள் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் எடுத்து கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற கொவிட் பராமரிப்பு மையங்களின் பட்டியலை மாவட்ட வாரியாக அரசு வெளியிட வேண்டும்.
 
·  தற்சமயம் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கு முன்னுரிமைக் கொடுத்து கொரோனா அல்லாத வேறு நோய்களுக்காக மருத்துவமனை வருவோரை சேர்ப்பதில்லை ( admission). இந்த அணுகுமுறையை உடனடியாக கைவிட்டு, வழக்கமான நோய்த் தீர்வுக்காக மருத்துவமனை வரக்கூடியவர்களுக்கான சிகிச்சை இடையூறின்றி தொடர வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு என்று புதிய மருத்துவமனைகள் கட்டுவதை உடனடியாக தொடங்க வேண்டும்.
 
·   முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்களுக்கு தட்டுப்பாடில்லை என்று தமிழக அரசு ஊடகங்களிட சொல்லி வந்தாலும் இந்நாள்வரை வெவ்வேறு மருத்துவமனைகளில் இருந்தும் கொரோனா சிகிச்சையின் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கு போதிய மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்துக் கொண்டிருக்கிறது. மாதக் கணக்கில் தொடரப் போக்கும் இச்சிக்கலை எதிர்கொள்வதில் முதுகெலும்பாக இருந்துக் கொண்டிருக்கும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது, பாதுகாப்பு உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.
 
· கைகழுவுதல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை எல்லோரும் கடைப்பிடிப்பதற்கு அடித்தட்டு மக்களுக்கு தண்ணீர் வசதியை உறுதி செய்ய வேண்டும், கட்டணமின்றி துணியாலான முகக் கவசம், சோப் ஆகியவற்றை அரசு  வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
         
 
·  கொரோனா நோய்த் தொற்று அடித்தட்டு மக்களிடம் பரவத் தொடங்கும்பொழுது  கொத்துகொத்தாக மக்கள் பாதிக்கப்படுவர்.  இதை உலக நாடுகளிலும் மும்பை தாராவியிலும் கண்டு வருகிறோம். சென்னையிலும் மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம், பெரும்பாக்கம் ஆகிய குடிசைப் பகுதிகளில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மக்கள் அடர்த்தியாக வாழும் குடிசைப் பகுதிகளில் பெருந்தொற்று பரவாமல்  தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் தேவை. சென்னையின் அடித்தட்டு மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய கண்ணகி நகர், செம்மஞ்சேரி, தாம்பரம், கூவம், பக்கிங்காங் கரைகளில் உள்ள குடிசைப் பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா நோய் அறிகுறிக்கான முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆய்வுக்குப் பின் அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்றுக்கான RT-PCR பரிசோதனை செய்ய வேண்டும்.
 
· பச்சை, ஆரஞ்சு என்ற வரையறுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் நோய்ப் பரவலைக் கண்டறிவதற்காக சிற்சில பகுதிகளில் RT-PCR கொரொனா பரிசோதனைகளை random ஆக செய்ய வேண்டும். Senitel testing என்ற பெயரில் கேரள அரசு இதை செய்து வருகிறது.
 
· தமிழக அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் சொந்த ஊர் செல்வதற்கு துணைநிற்க வேண்டும் . மாறாக அவர்களைக் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
 
· வறுமையும் பட்டினியும் ஊட்டச்சத்துக் குறைபாடும்  உளவியல் நெருக்கடியும் நோய்க்கான நாற்றங்கால்களாகும். பல்வேறு பொருளியல் அறிஞர்களும் கட்சிகளும் வலியுறுத்துவதற்கு இணங்க வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் என்று அடையாளங் காணப்பட்டுள்ள 13 கோடி குடும்பங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு தலா 6000 ரூ கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். கொரோனா பேரிடருக்கு எதிரானப் போராட்டத்தில் பட்டினிச் சாவுகள் இன்றி மக்களின் பங்கேற்புடன் வெற்றிப்பெறுவதற்கு இது இன்றியமையாததாகும். நிரம்பி வழியும் தானியக் கிடங்கில் இருக்கும் உணவு தானியங்களைக் குறைந்தபட்சம் அடுத்த மூன்று மாதங்கள் தேவையுள்ள அனைவருக்கும் வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
 
·  மத்திய அரசு மாநிலங்களுக்கு போதிய நிதி கொடுக்கவில்லை என்பது உண்மையே. ஆயினும் கேரள அரசு மாநில மக்களைத் தாங்கிப் பிடிக்கும் வகையில் தனது வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து சுமார் 20,000 கோடி ரூபாயை கொரோனா துயர்தணிப்புக்கு என்று ஒதுக்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டு தமிழக அரசும் கொரோனா துயர்தணிப்புக்கு கூடுதலான நிதியை ஒதுக்க முன்வர வேண்டும்.
 
· பேரிடர் துயர்தணிப்புப் பணிகளில் முன்வரிசையில் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும். திட்ட செலவினங்களில் முன்னுரிமை இல்லாதவற்றைக் குறைத்து இந்நெருக்கடி நிலைமையை சமாளிக்க வேண்டும். மாறாக மக்களின் மீதே சுமையை ஏற்றி வைக்கக் கூடாது.
 
·  சம்பள வெட்டு, ஆட்குறைப்பு போன்றவற்றை தனியார் நிறுவனங்கள் செய்யக்கூடாது என்று மத்திய அரசு சொல்லியிருப்பினும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பல  அரசின் ஆணையைக் கடைபிடிக்கவில்லை. தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை அரசு கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
 
·         சென்னையில் மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்வதை தடுத்த கீழ்ப்பாக்கம் பகுதியினர் 11 பேர் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தைப் போட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது. கொரோனா நோய்த்தொற்று குறித்து அளவுக்கதிகமாக பீதியேற்படுத்தியதில் அரசுக்கும் பொறுப்பிருக்கிறது என்பதை ஏற்று இவர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
 
·  நாடு தழுவிய மருத்துவப் பேரிடர் என்று அறிவித்துவிட்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரானப் போராட்டக்காரர்கள், அரசை விமர்சிக்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசின் தவறுகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் மீது வழக்கு தொடுக்கிறது, கைது செய்கிறது மத்திய அரசு. பேரிடரின் போது அனைத்துத்தரப்பு மக்கள் பிரிவினருடனும் கைகோர்த்து செயல்பட வேண்டியது அரசின் கடமையாகும். மாறாக, மக்கள் மீதான ஒடுக்குமுறை இயந்திரமாக அரசு செயல்படுவது மக்களுக்கு அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி பேரிடர் தணிப்பு முயற்சிகள் அனைத்தையும் தோல்வி அடையச் செய்யும் என்பதை எச்சரிப்பதுடன் மேலே குறிப்பிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் உடனடியாகத் திரும்பப்பெறக் கோருகிறோம்.
 
· பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு அறிமுகம், ஆற்றுநீர் மேலாண்மை ஆணையங்களை மத்திய அரசின் நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வருவது, பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கொடுப்பது என நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் செயல்படாத நிலையில், மாறுபட்ட கருத்துடையோர் விவாதிப்பதற்கு வாய்ப்பில்லாதவொரு பேரிடர் காலத்தில் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்,  மருத்துவப் பேரிடரை அரசு தவறான வழியில் பயன்படுத்திக் கொள்கிறது என்பதே ஆகும். எனவே,  மேலே குறிப்பிட்ட விசயங்கள் உள்ளிட்ட கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தவற்றில் கொரோனா பேரிடர் கால நெருக்கடி முடிவுக்கு வரும்வரை  அரசு முடிவெடுப்பதை பிற்போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
-இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...