அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் இரண்டாவது நாளாக 30,000-த்தைக் கடந்த கொரோனா பாதிப்பு 0  ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை 0 சட்டமன்ற பிரதிநிதிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் நிறைவேற்றம் 0 குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருள்கள்- தமிழக அரசு அறிவிப்பு 0 சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் 0 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ரஜினிகாந்த்! 0 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பத்ம பிரியா விலகல் 0 8 வாரங்கள் வரை ஊரடங்கு தேவை - ஐசிஎம்ஆர் 0 தமிழகத்தில் நாளை ரம்ஜான்: தலைமை காஜி 0 கடலூர் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து: 4 பேர் பலி 0 அரபிக்கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு 0  நாடு முழுவதும் கொரோனாவுக்கு 4,120 பேர் உயிரிழப்பு 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

அப்பா பைத்தியம்! - சேகுவேரா

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2021  16:25:15 IST


Andhimazhai Image71423..

இந்த எண்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதில் நினைக்க என்ன இருக்கிறது என்றும் உங்களுக்கு தோன்றலாம், உங்கள் கையடக்க கணிப்பானில் (calculator) அந்த எண்களை அழுத்தி, தலைகீழாக திருப்பிப் பார்த்தால் எங்கப்பா பேரு வரும்... ‘EZHIL'' என்று.

ஒருவேளை நீங்களும் செய்து பார்த்து ‘‘அட ஆமா'' என்று உணர்ந்திருந்தால், விரல் சூப்பிக்கொண்டே, கண்கள் செருக்கால் பிரகாசிக்க , ஏதோ பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்திக்காட்டிய தோரணையில் சேகுவேரா எனும் அச்சிறுவனைக் காணலாம், இதோ இப்போதும் கூட நீங்கள் அதை செய்துபார்த்துவிட்டதாக கருதிக்கொண்டும், இதுவரை இந்த உப்புப்பெறாத தந்திரத்தில் சிக்குண்ட அந்த பதினேழு கோடிப்பேரில் உங்கள் எண்ணிக்கையை சேர்த்துக்கொண்டும் தட்டச்சிக்கொண்டிருக்கிறான் அவன்.

ஆம் அவன் ஒரு அப்பா பைத்தியம், எந்தளவிற்கு என்றால் சிறுபிராயத்தில் கீழே விழும் சமயத்தில் அப்பா என்று கத்திக்கொண்டு விழ, அவன் அம்மா ‘‘அங்கங்க கொழந்தைக விழுந்தா, அடிபட்டா, அம்மான்னு கூப்பிடும்... இந்த அசுதியக்கொழந்த எப்பப்பாரும் லொப்பா... லொப்பான்னுட்டு...'' என்று வசைபாடலுடன் நிற்க வைத்ததில் தொடங்கி, இன்றும் கொட்டாவியின் ஊடாக அனிச்சையாக வரும் ‘‘க்க்ஹஅப்பாஆஆஆவ்'' விற்கு மனைவியின் கனல் கண் முறைப்பில் ரோமங்கள் பொசுங்கினாலும் அசராத அளவிற்கு அப்பா பைத்தியம்.

வீடுமுழுக்க I love ezhil... I love ezhil  என்று எழுதுவதில் தொடங்கி, கங்காருக்குட்டி போல தொற்றிக்கொண்டு அவர் செல்லுமிடமெல்லாம் செல்வது, அவர் அருகாமை இருப்பதன் மீதான விருப்பம், வெறியாக மாறி அவர் கழிவறைக்கு சென்றாலும் உடன் சென்று ‘‘நீ பாட்டுக்கு இரு பா... நான் இங்கயே நிக்கிறேன்'' என்பது வரைக்கும் சென்றதில் வியப்பேதும் இல்லை.
அப்பாவுக்கு பெண் பார்க்க அவன், பாட்டியையும் கூட்டிக்கொண்டு ஊர் ஊராய் சுற்றியதில் துவங்கி, அவன் விடலைப்பருவத்தின் காதலை கூட அந்த பெண்ணிடம் ‘‘எங்கப்பா மேல ‘உண்மையா', உன்னை லவ் பண்றேன்'' (சத்தியம் என்பது மதம் தொடர்பான சொல்லாடல் என்று அவனிடம் சொல்லப்பட்டதால் ‘‘உண்மை'' என்று தான் சொல்வான் அவன்  அவ்வளவு கொள்கைக்‘குண்டு') என்பது வரையிலும் சொல்லிக்கொண்டே போகலாம்தான் ஆனால் ஒரே பக்கத்தில் முடிக்கச்சொன்ன ஆசிரியரின் கத்தரி கலக்கமூட்டத்தான் செய்கிறது அவனை சரி ... இதற்குமேல் தன்னிலையில் எழுதுவதே முறையென நினைக்கிறேன்.

பெரும்பாலும் நம் எவரொருவருக்கும் பொருந்திவிடக்கூடிய ‘‘என் முதல் நாயகன்'', ‘‘எனக்கு எல்லாமும் கற்றுத்தந்தவர்'', ‘‘தன்னை இழந்து, என்னை வளர்த்தவர்'' என அநேகமானவை எனக்கும் உண்டு பிரிதொருசமயம் பேச, ஆனால் அப்பா பற்றி உங்களிடம் சொல்லியே ஆகவேண்டிய விடயங்கள்...


எந்நிலை வரினும் ஏற்றுக்கொண்ட கொள்கையிலும், கருத்தியலிலும் சமரசமின்மை சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியை குறைப்பதும், அதன் தொடர் முயற்சியும் இவையிரண்டும் தான் என் நனவிலி மனதினுள்ளும் இருக்கும் அப்பாவின் அடையாளங்கள்,  தர்மபுரியில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் தீயிட்டு படுகொலை செய்யப்பட்ட பின், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் இறங்கிய சமயம் அது, எழுத்தாளர், செயற்பாட்டாளர் என்கிற அவரின் அடையாளங்களை தாண்டியும், எவரொருவரோடும் இயல்பாய் பழகும் அவரை சந்திக்க பல்கலைக்கழக நண்பர்கள் வருவதுண்டு, இதை கவனித்த உளவுத்துறை போராட்டத்தை பின்னிருந்து தூண்டிவிடுவதாக குறிப்பெழுதுகிறது, அதன் விளைவாய் வருகிறது பணியிட மாறுதல் எனும் நெருக்கடி உண்மையில் அவர் அதை அதிகாரத்தின் உயர்பீடங்களில் உள்ள நண்பர்களைக்கொண்டோ, வேறு ஏதோ ஒரு வகையிலோ தவிர்த்திருக்கலாம் தான், ஆனால் அறம் மிக்க அந்த மானுடன் போராட்டத்தின் தார்மீக நியாயத்தின் பாற்பட்டும், தனக்கு தொடர்பில்லை என்று சொல்வதைக் கூட மாணவிகள் தீக்கிரையாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு எழுந்த போராட்டத்தை அவமதிப்பதாகிவிடும் என்று அந்த பணியிட மாறுதலை ஏற்றார், அன்று.

உண்மையில் இத்தகைய மாண்பினையும், சக மனிதர்கள் மீதான அக்கறையையும் கொண்ட ஒருவர் எவரின் அப்பாவாகவேனும் இருந்தால்தான் என்ன?, கை குலுக்கி, கட்டியணைக்க வேறென்ன வேண்டும் ஒருவருக்கு?

‘டே... தம்பி... எக்காலத்துலயும் சொந்த சாதின்னு நினைச்சிட்டு இருக்குற அந்த கருமாந்தரத்துல மட்டும் கல்யாணம் பண்ணிறவே கூடாதுடா...' என்பதை பால்குடி மறந்த சில தினங்களில் இருந்து மகனிடம் இப்படி சொல்லிக்கொண்டே இருக்கும் தகப்பனை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு குறைவென்றே கருதுகிறேன், அதைத்தாண்டி ஆறாம் வகுப்பு வரை மருதமலையிலும், பன்னாரியிலும் உசுரக்கொடுத்த சாமிக்கு மசுரக்கொடுத்துவிட்டு வரும் மகனிடம் அப்பனின் அதிகாரங்களை சுமத்தாத ஜனநாயகவாதியாகவும் இருப்பார். நானாக அந்தக் கற்பிதங்களில் இருந்து வெளியில் வரும் வரை தன் கருத்தை நக்கலாக முன்வைத்து, பாதை தெரியாமல் திரிந்த எனக்கும் அவர் காட்டிய திசை ஈரோட்டிற்கு இட்டுச்சென்றது.

அவர் மனித புனிதர், மனிதருள் மாணிக்கம் என்றெல்லாம் சொல்ல வரவில்லை, நம் எல்லோரைப் போலவும் நிறைகளும், குறைகளும் ஒருங்கே பெற்றவர்தான் என்றாலும், குறைகளை யார் சுட்டிக்காட்டினாலும் அதை திருத்திக்கொள்ளும் பக்குவமும் அவருக்கு எளிமையாக கைவந்திருக்கிறது, சொத்து, மூலமுதல், சுவிஸ் பேங்க் அக்கவுண்ட் என எதுவுமற்று, அதையே தன் சாதனையாக கருதும் அப்பாவுக்கு நண்பர்களும், அவர் வாசகர்களுமே எல்லாமுமாக இருந்திருக்கிறார்கள் இன்றளவும், அவரின் நெடுநாள் வாசகர்களாகிய உங்களை எழுத்தின் வழி சந்திக்க வைத்த அந்திமழை இதழுக்கு நான் நன்றியன்.

நான் பெருங்காதலோடு நேசிக்கும் என் நண்பன், அப்பன், மகன் என எல்லாமுமான எழிற்கோவாகிய பாமரன் என்கிற பாம்ஸை, நீங்கள் கூடுதலாக நேசிக்க இந்த பதிவும் உதவுமாயின், அதைவிட மகிழ்வென்ன தோழர்களே!

(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...