அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தமிழ்நாட்டில் கேட்ட அத்தனை பேச்சுக்களிலும் பராசக்தி வசனத்தின் பாதிப்பு இருந்ததைக் கண்டேன்!

Posted : வெள்ளிக்கிழமை,   மார்ச்   11 , 2016  12:58:29 IST

 “வணக்கம் எப்படி இருக்கீங்க..” ஸ்கைப் உரையாடலின் போது திரையில் தோன்றி தமிழில் கேட்டு சிரிக்கிறார் பெர்னார்ட் பேட். அமெரிக்க மானுடவியல் பேராசிரியர். திராவிட மேடைகளின் அழகியல் பற்றி ஆங்கிலத்தில் ஆய்வு நூல் எழுதியவர். தமிழ் சொற்பொழிவுகளின் வரலாறு பற்றி ஆங்கில நூல் ஒன்றை எழுதிவருபவர். மதுரையில் ஆண்டுக்கணக்காக தங்கி தமிழ்மேடைகள் பற்றி ஆய்வு செய்தவர். அந்திமழைக்காக நான் அவரை அழைத்தபோது சென்னையில் மணி மாலை நாலரை. அமெரிக்காவில் அவர் இருந்த நியுஹேவனில் காலை ஏழு. ஆர்வத்துடன் பேசினார்.

 
தமிழ்நாட்டு மேடைகளில் நீங்கள் கவனித்த விஷயங்கள் என்ன?
இங்கே திராவிடப் பேச்சாளர்கள் மேடைகளில் செந்தமிழில் பேசுவார்கள். பேச்சுத் தமிழில் அல்ல, அதையும் கிராமப்புறத்தில் உள்ள, பெரும்பாலும் கல்வி அறிவு இல்லாதவர்களிடம் செந்தமிழில் பேசுவதற்கு என்ன காரணம்? நாட்டு விடுதலைக்கு சற்று முன்பாகவும் அதன்பின்னும் அண்ணாதுரை, மு.கருணாநிதி,ஈவிகே சம்பத் போன்றவர்கள் இப்படி செந்தமிழில் பேசும் பழக்கத்தைத் தொடங்கினார்கள். இதற்கெல்லாம் காரணம் திராவிட தேசியவாதம்தான். அதற்கான இயக்கமும் சித்தாந்த பலமும் இருந்தன. நமது தமிழ் பழைமையானது; கலாச்சாரம் பழைமையானது என்பதை மக்கள் முன் வைக்க செந்தமிழில்தான் பேச வேண்டியிருந்தது. பழைமையை மக்கள் முன்பு அவர்கள் மறு அறிமுகம் செய்தார்கள். பொன்னாடை, ஊர்வலங்கள், மாலைகள் எல்லாம் அதை நினைவு படுத்துவதற்காகவே. உலகம் முழுக்க எடுத்துக்கொண்டால் தேசியவாதிகள் அனைவருமே இப்படித்தான் நடந்துகொண்டார்கள். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் வாஷிங்டனின் கட்டட அமைப்புகளை எப்படிக் கட்டினார்கள்? ரோம் போல, கிரேக்கம் போல. இதைத்தான் நவீன செவ்வியல்வாதம் என்கிறோம். தமிழக மேடைகளில் நான் கண்டது திராவிட செவ்வியல்வாதம்!
 
 
உங்களுக்குப் பிடித்த தமிழ்ப்பேச்சாளர் யார்?
தொண்ணூறுகளில் பேசியவர்களை எனக்குத்தெரியும். இப்போது யார் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அப்போது எனக்குப் பிடித்தவராக இருந்தவர் தீப்பொறி ஆறுமுகம். சுயமாகவும் சுவாரசியமாகவும் பேசுவார். இப்போது தொல்.திருமாவளவன் நன்றாகப் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். நான் கேட்டதில்லை.
 
 
தமிழில் பட்டிமன்றங்கள் கேட்டிருக்கிறீர்களா? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ஓ.. அவை சுவாரசியமான இலக்கிய விவாதங்கள். இலக்கியம் பற்றி பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேளையில் பொழுதுபோக்காகவும், நல்வழி காட்டுபவை ஆகவும் அமைபவை. நண்பர் ஞானசம்பந்தன், என் ஆசிரியர் சாலமன் பாப்பையா போன்றவர்கள் இதில் மிகப் புகழ்பெற்றவர்கள். இதுபோன்ற இலக்கிய விவாதங்கள் அமெரிக்காவில் பல்கலைக் கழகங்களில் நடக்கும். ஆனால் பொதுக்கூட்டமாக, பொதுமக்களை நோக்கி நடப்பதெல்லாம் தமிழில் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன்.
 
 
தமிழில் மேடைப்பேச்சின் வரலாறு பற்றி ஓர் ஆய்வாளர் என்கிற முறையில் சுருக்கமாகச்
சொல்லுங்கள்...
தமிழ் இலக்கியத்தில் மேடைப்பேச்சு என்ற ஒன்று பெரும்பாலும் இடம் பெற்றது இல்லை. ஒரு மன்னன் ஒரு கிராமத்துக்குப் போய் தமிழர்களே, விவசாயிகளே என்று அழைத்து அவர்களிடம் உரையாற்றியதைப் பார்க்க முடியாது. தன் வீரர்களிடம் மன்னன் உரையாற்றியதைப் பார்க்கமுடியாது. இதுபோன்ற காட்சி மனோன்மணியம் என்ற நூலில்தான் இடம் பெறுகிறது. ஆய்வாளர் தொ.பரமசிவன் இது பற்றிச் சொல்லியிருக்கிறார். மனோன்மணியம் 1892-ல் இயற்றப்பட்ட காப்பியம். ஆகவே தமிழுக்கு மேடைப்பேச்சு என்பது நவீனத்துவத்துடன் அறிமுகமான ஒன்று. 18-ஆம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலர், வள்ளலார் ஆகியோர் பொது இடங்களில் பேசத் தொடங்கினர். தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் மேடைப்பேச்சு என்பது 1905-ல் சுதேசி இயக்கத்துடன்தான் அரசியல் தளத்தில் ஆரம்பித்தது. சுப்ரமணிய ஐயர், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி, வ.உ.சி போன்றோர் பேசினார்கள். இது 1908-ல் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் மீண்டும் 1914-15-ல் வரதராஜலு நாயுடு, திருவிக போன்றவர்களால் மேடைப் பேச்சு மீண்டும் ஆரம்பமானது. தொழிலாளர் இயக்கம், மதறாஸ் பிரசிடென்சி அசோசியேஷன் போன்றவை மூலமாக இது வளர்ந்தது. இதன் வளர்ச்சிதான் ஒரு பேச்சு சமுதாயத்தைக் கட்டமைத்தது. மேடைப்பேச்சாளர்கள் உருவானார்கள். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தமிழ்நாட்டுக் கிராமத்துக்குப் போய் நீ யாரென்று கேட்டால் தன் சாதியைச் சொல்வார்கள் அல்லது விவசாயி என்பார்கள். ஆனால் அவர்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி, தங்களை ஒரு சமூகமாக கற்பனை செய்துகொள்ளும் உணர்வைத் தந்தது ஒரு பக்கம் பதிப்புலகில் ஏற்பட்ட வளர்ச்சி. இன்னொருபுறம் இந்த மேடைப்பேச்சுகள்தான்.
பிற நாடுகள் மற்றும் கலாச்சாரங்களில் மேடைப்பேச்சுகள் எப்படி இருக்கின்றன?
எல்லாம் மேடைப்பேச்சுதான். ஆனால் ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்ப மாற்றங்கள் இருக்கும். உதாரணத்துக்கு செல்போன்  எல்லாம்  ஒன்றுதான். ஆனால் ஒவ்வொன்றிலும் மாறுதல்கள் இருக்கும். பயன்படுத்தும் முறையும் மாறும். நான் 2008-ல் தமிழ்நாடு வந்திருந்தேன். அப்போது செல்போன் நிறைய உபயோகிக்க வேண்டி வந்தது. குறுஞ்செய்தி அனுப்ப, மிஸ்டு கால் கொடுக்க. இங்கே அமெரிக்காவில் மிஸ்டுகால் கொடுப்பதென்றால் புரியாது. தமிழ்நாட்டில் என் நண்பர் ஒருவர், அவரது மனைவியின் தம்பியைப் பற்றிச் சொல்வார்: அவன் மிஸ்டு கால் மன்னன்.... (சிரிக்கிறார்)... மிஸ்டுகால் மன்னன்! இந்த தமிழ் வார்த்தை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
 
 
அமெரிக்காவில் ஒபாமா பெரிய பேச்சாளர் என்கிறார்களே..
ஆமாம். மிக சரளமாக அவர் பேசுகிறார். அவர் அதிபர் பதவிக்கே தன் பேச்சுத் திறமை மூலமாக வந்தார் என்று சொல்லலாம். நேற்றுகூட அவர் ஒரு கொலைவழக்கில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டது பற்றிப் பேசினார். எந்த தயாரிப்பும் இல்லாமல் உள்ளத்தில் உள்ளதைப் பேசினார். மிகவும் முக்கியமான பேச்சு அது.
 
 
நீங்கள் கேட்டதில் நினைவில் வைத்திருக்கும் முக்கியமான தமிழ்பேச்சு எது?
1993-ல் மதுரையில் என்று நினைக்கிறேன். வைகோவின் பேச்சைக் கேட்டேன். நான் காற்றால் அடித்துச் செல்லப்பட்டதைப் போல் உணர்ந்தேன். அது ஒரு
சக்தி வாய்ந்த பேச்சு. அந்த குரலுக்கு ஒரு வலிமை இருந்தது. வைகோவின் ஆவேசமான, வலிமையான பேச்சு என்னை ஆக்கிரமித்துக் கொண்டது.
 
 
தமிழின் முக்கியமான பேச்சுகள் என்று எவற்றைச் 
சொல்வீர்கள்?
பராசக்தியில் நீதிமன்றத்தில் சிவாஜி கணேசன் பேசும் பேச்சுத்தான் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். அதைத்தான் எத்தனை பேச்சாளர்கள், இளைஞர்கள் மனப்பாடம் செய்து பேசிப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள்... அது மிக மிக சிறப்பான ஒன்று. அத்துடன் அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் தமிழ்நாட்டில் கேட்ட அத்தனை பேச்சுக்களிலும் பராசக்தி வசனத்தின் பாதிப்பு இருந்ததைக் கண்டேன். சாதாரண தமிழில் பேசிய பெரியாரின் பேச்சு, அடுக்குத்தமிழில் பேசிய அண்ணாதுரையின் பேச்சு ஆகியவற்றையும் முக்கியமானவை என்று சொல்வேன்.அண்ணாத்துரை மேடைப்பேச்சை இன்னொரு தளத்துக்குக் கொண்டுபோனவர்.
 
-அசோகன்
 
(2013 ஆக்ஸ்ட் அந்திமழை பேச்சாளர் சிறப்பிதழில் வெளியானது)


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...