அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஓட்டை சைக்கிள்! ஒரு ரூபாய் சம்பளம்!! ஏவி ரமணனுடன் ஒரு சந்திப்பு!!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   22 , 2014  12:39:47 IST

 
இசையோடு வாழ்கிறார் பாடகர் ஏவி ரமணன். சென்னையில் மியூசியானோ என்ற மெல்லிசைக் குழுவைத்  தொடங்கி 40 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திவரும் அவரை அந்திமழைக்காக சந்தித்தோம். அற்புதமான சந்திப்பாக அது அமைந்தது.
“நான் பாடவந்து 44 ஆண்டுகள் ஆகிவிட்டன.” என்று புன்னகைத்தவாறு பேசத் தொடங்கினார். “ஆரம்பத்தில் மயிலை சண்முகம் குழுவில் பாடிக்கொண்டிருந்தேன். அதன் பின்னர் காமேஷ் ராஜாமணியின் குழுவில் பாடினேன். காமேஷ் ராஜாமணி குழுவினர் நாடகங்களுக்கு இசை அமைப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து மெல்லிசைக் குழு ஒன்றைத் தொடங்கினோம். ஒல்லியா ஒரு பையன் பாடுவானே. அவன் வருவானாப்பா என்று கேட்டுதான் கச்சேரி புக் செய்வார்கள். ஒரே நாளில் இரண்டு மூன்று கல்யாணங்களும் அமைந்துவிடும். அதன் பின்னர் இரவில் கோயில் நிகழ்ச்சிகூட ஒப்புக்கொண்டுவிடுவார்கள். என்னிடம் அப்போது ஒரு ஓட்டை சைக்கிள்தான் இருந்தது. சென்னையில் தி.நகரில் ஒரு நிகழ்ச்சி மாலையில்  என்றால் இரவில் பதினோருமணிக்கு வட 
சென்னையில் எங்கோ ஒரு மூலையில் எதோவொரு கோவிலில் இரவு நிகழ்ச்சி இருக்கும். இதை முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க சைக்கிளை மிதித்துகொண்டு அங்கே போய்ச்சேருவேன். 71 இறுதியில்தான் ஸ்கூட்டர் வாங்கினேன். 
 
பல இடங்களில் மேடை இருக்குமா என்றால் அது ஒருபெரிய காமெடி. உதாரணத்துக்கு ஒன்று 
சொல்கிறேன். வட சென்னையில் ஒரு கோவிலில் நிகழ்ச்சி. அங்கு பாடப்போயிருந்தேன். குறுகலான 
சாலையில் பாடவேண்டும் என்றார்கள். அதெல்லாம் சரி. எங்கே மேடை என்றேன். பொறுங்க சார் வரும் என்றனர். என்னது வருமா? என்று கேட்டு அமைதியாகிவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து சாலையில் ஒரு பக்கமிருந்து பின்னோக்கி ஒரு மாட்டுவண்டி வந்தது. எதிர்த்திசையிலிருந்து இன்னொரு மாட்டுவண்டியும் பின்னோக்கி வந்து சேர்ந்தது. இரண்டையும் இணைத்து நிறுத்தி இதுதான் மேடை என்றார்கள். அப்புறமென்ன? சாலையில் இந்த நீளத்தில் இரண்டாயிரம் பேர், அந்தப் பக்கம் இரண்டாயிரம் பேர் கூடியிருக்க அன்றிரவு பாடினேன். ரொம்ப நாள் நிகழ்ச்சிகளில் பாட ஒரு ரூபாய்தான் கிடைத் தது. பின்னர் இரண்டு ரூபாயாகி, அது 5 ரூபாய் ஆனது.”
ரமணன்தான் தென்னிந்தியாவிலேயே முதல்முதலில் மேடையில் மைக்கை கையில் பிடித்துக்கொண்டு பாடிய முதல் மேடைப் பாடகர். எழுபதுகளில் அவர் பாட வந்தபோது  மேடையில் கீழே அமர்ந்துதான் பாடுவது வழக்கம். ரமணனும் அப்படித்தான் ஆரம்பத்தில் பாடினார். வட இந்தியாவில் கிஷோர்குமார், உஷா உதூப் போன்றவர்கள் நின்றுகொண்டே மைக்கை கையில் வைத்துப் பாடத் தொடங்கியிருந்த அந்த சமயத்தில் ரமணனும் மைக்கைக் கையில் பிடித்தார். “அப்போ மைக் விலை 90 ரூபாய் இருக்கும். மைக்கை கையில் எடுத்துப் பாட எனக்கு ஆசை. ஆனால் மைக் செட்காரர்கள் அதைத் தொடக்கூடாது, 90 ரூபா விலை தெரியுமா? ’ என்று எகிறுவார்கள். மெதுவா ஒருவரைக் கெஞ்சிக் கூத்தாடி கையில் மைக் பிடித்து பயிற்சி எடுத்து ஒருநாள் பாடியே விட்டேன்.. பிறகு என்னைப் பார்த்து மெல்ல மற்ற குழுக்களில் பாட ஆரம்பித்தார்கள்”
மேடையில் அப்போது இந்திப்பாடல்களும் அதிகமாக பாடப்படும். இந்தி எதிர்ப்புப் போரில் ரமணன் பள்ளியில் படிக்கும்போது கைதானவர். ஆனாலும் மேடையில் இந்திப்பாடல்களை மிகச் 
சிறப்பாகப் பாடுவார். 78க்கு முன்புவரை சென்னையில் பல தியேட்டர்களில் காலை நேரங்களில் இசைக் கச்சேரிகள்தான் நடக்கும். பயங்கரமான கூட்டம் வரும். ரமணன் மெல்லிசை மேடைகளில் நாயகனாக இருந்தார். “இரண்டரை ஆண்டுகள் காமேஷ் ராஜாமணி குழுவில் இருந்தேன். பின்னர் 1973-ல் நானே தனியாக பட்டதாரி கலைஞர்களுடன் சேர்ந்து மியூசியானோ இசைக்குழு ஆரம்பித்துவிட்டேன். என்னுடன் மேடையில் பாட நிரந்தரமான பெண் பாடகிகள் யாரும் கிடைக்கவில்லை. ஒவ்வொருவராக மாறிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் சந்தித்தவர்தான் உமா. அவருடன் மேடைகளில் மூன்றாண்டுகள் பாடிய நிலையில் 1976-ல் அவர் என் வாழ்க்கைத் துணை ஆனார். 76-ல் கமல்ஹாசனின் மன்மதலீலை படத்தில் நேற்று ஒரு மேனகை, இன்றொரு ஊர்வசி பாடலைப் பாடச் சென்றேன். அதில் இடம் பெற வேண்டிய இந்தி வரிகளை நீயே போட்டுக்கோ என்று உரிமையுடன் சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டார் கவிஞர் கண்ணதாசன். நானே தான் அவற்றை நிரப்பிப் பாடினேன்” உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே போகிறார் ரமணன்.
மேடைக்கச்சேரிகளில் கிடைத்த புகழ் சினிமா வாய்ப்புகளையும் தந்தது. நீரோட்டம், சம்சாரம் என்பது வீணை, காதல், காதல், காதல் போன்ற படங்களில் நடித்தார். பல படங்களிலும் பின்னணி பாடினார். உமா ரமணனும் பல வாய்ப்புகளைப் பெற்று மிகச்சிறந்த பின்னணிப் பாடகர் தம்பதியாக பெயர்பெற்றனர்.
1975-ல் தினமணிக்கதிரின் அட்டையில் தன் படம் வந்ததும் ஒரு  காபி விளம்பரத்துக்காக நாடுமுழுக்க தன் படம் பொறித்த பேனர்கள் வைக்கப்பட்டதும் ரமணனின் சந்தோஷமான நினைவுகளில் நிறைந்திருக்கின்றன. மீசை வைத்த இளைஞராக மைக்குடன் படங்களில் புன்னகைக்கிறார் ரமணன்.
 
“இந்த சமயத்தில் என்னைப் பெரிதாக எப்படி மார்க்கெட் பண்ணிக்கிறது என்று நான் யோசிக்கவில்லை. நான் பாட்டுக்கு ரயில்ல ஏறிட்டேன். டிக்கெட் எடுக்கணும்னு தெரியலை. வழியில் டிக்கெட் பரிசோதகர் பிடிச்சு இறக்கி விடுகிறார். மீண்டும் ஏறுறேன்... திருப்பி எறக்கிவிடுறார்.. இப்படியே போய்க்கொண்டிருக்கிறேன்” தத்துவார்த்தமாகப் பேசுவது ரமணனின் இன்னொரு முகம்.
“ஆனா எது நடந்ததோ இல்லையோ என்னுடைய மேடை நிகழ்ச்சிகள் மட்டும் நிற்கலை. போனவாரம் கூட என்னுடைய நிகழ்ச்சியைக் கேட்டுட்டு இதுவரைக்கும் இப்படியொரு நிகழ்ச்சியை நான் கேட்டதே இல்லை. என்ன அழகா பண்றீங்கன்னும் ஒருத்தர் பாராட்டிட்டுப் போறார். என் நெஞ்சு நிறைந்திருக்கிறது. எத்தனையோ பெரிய தலைவர்கள், பெரும் கலைஞர்கள் என் நிகழ்ச்சியை அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். ஒருமுறை முதல்வர் எம்ஜிஆர் என் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவர் எப்போது வந்தாலும் முழுமையாக இருந்து கேட்டுவிட்டுத்தான் போவார். அன்று இடையிலேயே போகவேண்டியதாயிற்று. எனவே மேடைக்கு வந்து என்னிடம் ஒரு துண்டு சீட்டில் எனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதால் இடையிலேயே செல்கிறேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார். இது எவ்ளோ பெரிய கௌரவம் தெரியுமா? அவர் மரணமடைவதற்கு இருபது நாள் முன்பு கூட என் நிகழ்ச்சி நடந்த மண்டபத்துக்கு வந்தவர் என்னை அழைத்து மறுநாள் வீட்டுக்கு வந்து பார் என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் இல்லத்தில் குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வை என்னால் மறக்கவே இயலாது.” என நெகிழ்கிறார்.
 
இதுவரை 6000 நிகழ்ச்சிகளுக்கு மேல் செய்திருக்கிறார். ரமணனும் உமாவும்தான் பாடுவார்கள். சுமார் 20-25 பாடல்கள் பாடுவார் ரமணன். நிகழ்ச்சி முடியும்வரைக்கும் மிகுந்த உற்சா கமாக கொஞ்சம்கூட தொய்வில்லாமல் பாடுவது அவரது இயல்பு. சென்னையில் நாரதகான சபா, வாணிமகால் போன்ற அரங்குகள் மெல்லிசைக் கச்சேரிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பது ரமணின் இப்போதைய வருத்தம். “இத்தனைக்கும்  நாரதகான சபா கட்டும்போது 500 ரூபாய் நானும் கூட நிதி வழங்கியிருக்கிறேன்.” என்கிறார். சன் தொலைக்காட்சியில் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாகப் பங்கேற்றிருந்தார். “சில காரணங்களால் ஒரு நாள் திடீரென வேண்டாம் என்று விலகிவிட்டேன். அந்நிறுவனத்தின் எம்.டி. மனது வைத்திருந்தால் இன்றைக்கெல்லாம் 20 ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சி தொடர்ந்திருக்கும்”
 
“பொதுவா என் நிகழ்ச்சியில சுமார்  35 பாடகர்களின் பாடல்களைப் பாடுவேன். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று நளினமாகப் பாடிவிட்டு, ‘ஆஹ்ஹ்ஹ்ஹேங் வந்திருச்சி ஆசையில் ஓடிவந்தேன்’ என்று பாடவேண்டும். அதாவது ஒரு மயில் தோகை விரிக்கிறமாதிரி பல மொழிப் பாடல்கள். தெலுங்கில் கண்டசாலாவின் பாடல்கள்..  ‘அந்தமே ஆனந்தம்.. ஆனந்தமே ஜீவித மகரந்தம்..’ அவருடைய மாஸ்டர் பீஸ் அது.. பாடுவேன். பஞ்சாபி, பெங்காலி, கன்னட பாடல்கள் என்று பெரும் கலவையாக இருக்கும். சந்திரபாபு பாட்டு..‘ஏ பம்பரக்கண்ணாலே’ பாட்டை எடுத்துவிடுவேன். ‘சம்பளத் தேதி ஒண்ணுல இருந்து இருவது வரைக்கும் சம்பளம் வந்தா கொண்டாட்டம்.. கொண்டாட்டம்..’ அப்படின்னும் என் எஸ் கே பாட்டு. ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்.. தங்கம்..’ இப்படி ஒரு கிளாசிக் பாடல்.. இப்ப வந்திருக்கும் பாடல்களான ‘பாக்காதே.. பாக்காதே..’,‘கூடை மேல கூடை வெச்சு கூடலூரு போறவளே..’ ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்..’- இதுமாதிரி பாடல்களையும் பாடுவேன்.” ஒவ்வொரு பாடலையும் உருகிப் பாடிக் காண்பிக்கிறார். நாங்கள் அமர்ந்திருந்த அறை இசையால் நிரம்புகிறது.
 
“திருமண நிகழ்ச்சிகளில் சாப்பிடப் போகிறவர்கள் சாப்பிட்டு திரும்பிவந்து என்  பாடல்களைக் கேட்கிறார்களா என்று கவனிப்பேன். இப்போது கட்டாயம் வந்துவிடுகிறார்கள். என்றைக்காவது நாற்காலிகள் காலியாக இருக்கும் காலம் வந்தால் அன்று நான் ஓய்வு பெற்றுவிடுவேன்.” முடிக்கிறார் ரமணன்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...