அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை - முதலமைச்சர் ஸ்டாலின் 0 அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று 0 முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தின வாழ்த்து 0 ஒரே வாரத்தில் 12 சித்தா மையங்கள் தொடங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 0 நேற்று ஒருநாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை! 0 ’குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு 0 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் 0 ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்குக: முதலமைச்சர் பிரதமரிடம் வலியுறுத்தல் 0 சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 241 பேர் உயிரிழப்பு! 0 தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 11ம் தேதி கூடுகிறது! 0 ரெம்டெசிவிர் ஐந்து மாவட்டங்களுக்கு விநியோகம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் 0 நாளை முதல் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி 0 திருநங்கையர்களுக்கும் இலவசப் பயணம் குறித்து பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மண்ணை விவாதப் பொருளாக்கும் அசுரன்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   05 , 2019  13:28:29 IST


Andhimazhai Image

பாலுமகேந்திராவின் திரைப்பள்ளியில் பாடம் பயின்ற இயக்குநர் வெற்றி மாறன் நடந்து வந்த பாதை உண்மையிலேயே தடம் பதிப்பதாக அமைந்துவிட்டது.  இப்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிற எல்லோரையும் கவர்ந்திழுக்கும் திரைக்கதையைக் கொண்ட ‘அசுரன்’ வெற்றிமாறனின் ஐந்தாவது படைப்பு.  பொல்லாதவன் (2007) ஆடுகளம் (2011) விசாரணை (2015) வட சென்னை (2018) அசுரன் (2019) ஆகிய ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள இவர், தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பேசபடுபவராக மாறியிருக்கிறார்.  இவர் எடுத்துக் கொண்ட கதையும், கதைக்களமும், கதைமாந்தர்களும் விளிம்புநிலை எதார்த்தத்தை அதன் வலியோடும் வேதனையோடும் நம் கண்களுக்கு முன்னால் காட்சிப்படுத்துகின்றன.  இவருடைய படங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு முக்கியமான காரணம் யாரும் பேசாத, கண்டு கொள்ளாத வாழ்வின் எதார்த்தங்களை திரைக்காவியமாக மாற்றிக் காட்டும் வித்தையைக் கற்றுக் கொண்டதுதான்.  எடுத்துக் கொண்ட பேசுபொருளுக்கு நேர்மையான வகையில் தேடலையும், ஆய்வகக் கண்ணோட்டத்தையும், தகவுகள், தகவல்கள் சேகரிப்பதையும், கடின உழைப்பையும் ஆயுதமாகப் பயன்படுத்துகிறவர். 

 

மேலும், ஆழமான இலக்கியத்தை உள்வாங்கி அதை திரை ஓவியமாக வடித்துக் காட்டும் ஆற்றல் கொண்டவர்.  வெற்றிமாறன் இயக்கியுள்ள ஐந்து படங்களும் ‘இனவரைவியல் சினிமா என்று கூட வரையறுத்துக் கூறலாம்.  ஏனென்றால், இவரது படங்கள் ஒரு குறிபிட்ட எல்லைக்குள் வாழ்கின்ற ஒரு குறிப்பிட்ட இன மக்களைக் குறித்த வாழ்வியல் அனுபவத்தை நுணுக்கமாக ஆய்வு செய்து அங்குள்ள மக்களின் மொழி, பழக்க வழக்கங்கள் பண்பாடு, சடங்குகள், சம்பிரதாயங்கள், சமூகம், அரசியல், மதம், வழிபாடு, வாழ்வு இறைவன் பற்றிய கண்ணோட்டம் அனைத்தையும் இவைகளில் சினிமா அழுத்தமாக பதிவு செய்கிறது. சமூக தளத்திலும், பொருளாதாரதளத்திலும் பிறரை ஏமாற்றி முன்னேறிய உயர்த்தப்பட்ட சாதியினருக்கம், சாதியின் பெயரால் வரலாற்று ரீதியாக காலங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இடையே நடக்கும் நிலத்திற்கான, மாண்புக்கான போராட்டம்தான் ‘அசுரன்’ திரைப்படம்.

 

அசுரன்’ முன்னிறுத்தும் திரைக்கதை:

 

காணி நிலம் வேண்டும் அதை எந்நாளும் யாரும் அபகரிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் விரும்புவான்.  ஏனென்றால், நிலம் என்பது ஒருவருக்கு முகம் தருகிறது.  அதுதான் அவருடைய அடையாளம். என்றென்றைக்கும் அது முகவரியாக அமைகிறது.  எனவே, கிராமப்புறத்தில் நிலம் இழந்தவர் முகம் இழந்தவர் என்றே சொல்லலாம்.  “கையளவு நிலம் கூட இல்ல ; நீயெல்லாம் பேச வந்துட்ட” என்று பொது இடத்தில் கேலி செய்வதை நாம் காது கொடுத்து கேட்டிருக்கிறோம்.  தலித் குடும்பத்தில் பிறந்து வளரும் இளம் வயது தனுஷ்  பஞ்சமி நில மீட்புக்கான போரட்டத்தில் தன்னுடைய அண்ணனோடும், வழக்கறிஞரோடும், ஊர் மக்களோடும் சேர்ந்து போராடுகிறார்.  அதில் ஏற்பட்ட கலவரம், வன்முறை, கொலை நீதிமன்றம் என்று மறைந்த வாழ்க்கையை வாழ்ந்து பிறகு, எந்த வன்முறையும் வேண்டாம் என்று திருமணம் முடித்து வாழ்கிறார்.  அன்பான மனைவி மூன்று பிள்ளைகள், கொஞ்சம் நிலம், அதில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்.  மூர்க்கத்தனமாக செயல்படும் மூத்த மகனை பழிக்குப் பழி வாங்குவதில் அகோரமாக தலை வெட்டப்பட்டு இறந்துவிடுகிறான்.  அதற்கு பழிக்குப் பழியாக உயர்த்தப்பட்ட சாதியின் முக்கியப் புள்ளியை இளைய மகன் வெட்டி சாய்க்கிறான்.  அதன் பிறகு தன்னுடைய பிள்ளையைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆசையோடு காட்டிற்குள் நுழைகிறார்.  மனைவியும், இளைய மகளும் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை.  நிலத்துக்கான பிரச்சனை, மண்சார்ந்த சூழலில் பேசப்படுவது திரைக்கதைக்கு கிடைத்த முதல் பலம்.  மண்ணைக் காப்பாற்ற வேண்டும், பெத்த மக்களையும் காப்பற்ற வேண்டும் என்று அசுரன் மற்றும் அவரது மனைவி இருவரும் போராடுகின்றனர்.  வீடு, விவசாயம் செய்யும் நிலம், வாழ்வியல் சூழல், மறைந்திருக்க  உதவும் அடர்ந்த காடு எல்லாம் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்ல உதவும் முக்கிய காரணிகளாக அமைகின்றன.  பார்வையாளர்களை எளிதில் கவர்ந்துவிடக் கூடிய அம்சாமாகவும் இருக்கிறது.

 

நிலத்துக்காகப் போராடும் இரு குடும்பங்கள் இரண்டு சாதிகளாக இருக்கின்றன.  சாதி, பணம், சொத்துக்கள் என்ற செல்வாக்கோடு வாழும் உயர்த்தப்பட்ட சாதி ஒரு புறம்.  கொஞ்சம் நிலம், சிறு விவசாயம், விவசாயம் பலனளிக்கவில்லையென்றால் கூலி வேலை என்று வாழும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த அசுரன் குடும்பம் இன்னொருபுறம்.  இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிகழும் தொடர் சண்டைகளால் வன்முறை இயல்பாய் இரண்டு பக்கமும் வெளிப்படுகிறது.  உயர்த்தப்ட்ட சாதியைச் சேர்ந்த நரேன் சொத்துக்களையும், செல்வாக்கையும் விரிவுபடுத்துவதற்காக வன்முறையில் இறக்குகிறார்.  வன்முறையில் பாதிப்பு, இழப்பு, அவமானம் ஏற்பட்டால் தன்னுடைய சாதிய பொருளாதார பலத்தோடு வீட்டில் இருந்தே அதை எதிர் கொள்கிறார். 

 

ஆனால், கிராமத்தில் கொஞ்சம் நிலத்தோடும், தாழ்த்தப்பட்ட சாதி என்ற நிலையில் சமூகத் தளத்தில் அடிமைப்பட்ட உணர்வோடும் வாழும் சிவசாமி என்ற ‘அசுரன்’ வன்முறையில் ஈடுபடுவது நிலத்தையும், மாண்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே.  வன்முறை நிகழ்ந்தவுடன் அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.   இது நடைமுறை எதார்த்தமும் கூட.  ஏனென்றால் தலித்துக்கு என்பதால் உயிருக்கும் உடைமைக்கும் உத்திரவாதம் இல்லை.  எனவே, ஒரு குடும்பமே குலைந்துபோய் அகதிகளாய் அலைந்து திரிய வேண்டியிருக்கிறது.  இருக்க இடமின்றி, உணவின்றி, உடுத்த உடையின்றி வாழும் நிலையை அசுரன் படம் அழுத்தமாய் காட்டியுள்ளது.  கடைசியில் நீதிமன்றத்தில் சரணடையும் பட்சத்தில் கூட அகதிகளாய்தான் நிற்கின்றனர்.  இது, படத்திற்கு வெளியே இன்றைக்கும் எதார்த்தமாகத்தான் இருக்கிறது.  அசுரனின் மனைவி காட்டிற்குள் இருக்கும் உறவினர் வீட்டில் சில நேரம் தங்கி விட்டு, திக்கு தெரியாத திசையில் பயணிப்பவள் போல சின்னப் பிள்ளையை இழுத்துக் கொண்டு கோவில், பொது இடம் என்று அலையும் காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.  இறுதியில் நீதிமன்ற வளாகத்தில் தன்னுடைய மகளோடு மரத்திற்கு அடியில் பதட்டத்தோடு அமர்ந்திருக்கும் காட்சியில் பார்வையாளர்களும் அவர்களோடு உணர்வு ரீதியாகப் பயணிக்க முடிகிறது.

 

படத்தில் வெளிப்படும் குறியீட்டு மொழி:

 

படத்தில் பல குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலம், சாதி, வர்க்கம், அந்தஸ்து, ஊர் கட்டுப்பாடு, காலில் விழுதல், செருப்பு அணிதல் போன்ற அனைத்தும் அழுத்தமான செய்தியை விட்டுச் செல்கின்றன.  இந்தியாவில், தமிழகத்தில் நிலத்திற்கும் சாதிக்கும் காலங்காலகமாக நெருங்கிய தொடர்பு இருக்கிறது.  நிலம் அதிகமாக வைத்திருப்பவர்கள் உயர்த்தப்பட்ட சாதியில் இருந்தனர். உயர்த்தப்பட்ட சாதியில் இருப்போர் அதிகமாக நிலங்களை அபகரித்துக்கொண்டனர்.  தலித் மக்களை தங்களின் நிலங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய அனுமதித்தனர்.  அளவுக்கு அதிகமான கடன்களை தலித்துகளுக்குக் கொடுத்து அவர்களின் நிலங்களை கொடுத்த கடனுக்கு ஈடாக எடுத்துக் கொண்டனர்.  தலித் மக்களுக்கு என்றே பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை சட்டவிரோதமாக அபகரித்துக் கொண்டனர்.  தமிழகமெங்கும் சுமார் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இருக்கின்றன.  இந்த நில மீட்பு குறித்த விவாதத்தை படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

 

கிராமத்தில் சிறு சண்டையென்றாலும், சொத்து குறித்த வழக்கு என்றாலும் ஊர் பஞ்சாயத்தில் பேசி நியாயம் அநியாயம் பற்றி பேசுவது வழக்கம்.  இதில் ஆதிக்க சாதியினர் தங்களின் பணபலத்தாலும், சமூக அந்தஸ்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களை பன்முனை ஒடுக்குதலுக்கு உள்ளாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  ‘அசுரன’; படத்தில் பண்ணையாரின் மகனை       அடித்ததால் பஞ்சாயத்துக்குக் கட்டுப்பட்டு சிவசாமியை ஊரில் உள்ள எல்லா வீடுகளிலும் காலில் விழவைக்கின்றனர்.  இது பெரிய அவமானமிக்க செயல். அதன்மூலம் தாழ்த்தப்பட்ட சாதியினரை இழிவுபடுத்தி ஆதிக்க சாதியினர் மகிழ்ச்சியடைவதைப் படத்தில் பார்க்க முடிகிறது.  ஆனால், ஒரே ஒரு வீட்டில் மட்டும், சிவசாமி காலில் விழுவதை தடுத்து நிறுத்தியதோடு வெட்கத்திலும், அவமானத்திலும் கூனி குறுகி நிற்கும் சிவசாமியை தேற்றி, குடிப்பதற்கு தண்ணீரும் கொடுக்கிறார்.  அவர் கருப்பு சட்டை அணிந்திருப்பார்.  இந்தக் காட்சி ஏதோ போகிற வேகத்தில் எடுக்கப்பட்டதல்ல.  சாதிய வேற்றுமைகளையும் தீண்டாமையும் தலைவிரித்தாடியபோது பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கம்தான் சாதியத்தின் பெயரால் உருவான இழிவை போக்கி மனித மாண்பையும் சமத்துவத்தையும் நிலைநாட்டியது என்பதை பதிவு செய்யவே அந்தக் காட்சியை இயக்குநர் வெற்றிமாறன் வைத்திருக்கிறார் இது பாராட்டுதற்குரியது.

 

செருப்பு இந்தப்படம் முழுவதும் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது.  இன்றைக்கும் ஒரு தலித் தனக்குப் பிடித்த செருப்பை காலில் அணிந்து ஆதிக்க சாதியினர் இருக்கும் பகுதிகளில் துணிச்சலாக நடக்க முடியாது.  இந்தப் படத்தில் வரும் இளம் வயது சிவசாமி தன்னுடைய முறைப்பெண்ணுக்கு நல்ல செருப்பு வாங்கிக் கொடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறான்.  அவளும் மாமன் வாங்கிக் கொடுத்த செருப்பை அணிந்து சந்தோசமாகத் தெருவில் நடந்து பள்ளிக்குச் செல்கிறாள்.  இதைக் கொஞ்சமும் பொறுத்துக் கொள்ளாத பண்ணையார், வீட்டில் கணக்கராக வேலை செய்யும் ஆதிக்க சாதிக்காரன் தன்னுடைய கூட்டாளிகளோடு அந்தப் பெண்ணை அடித்து உதைக்கின்றனர்.  அவள் அணிந்த செருப்பை கழற்றி தலையில் வைத்தவாறு தெருவில் நடக்கச் சொல்கின்றனர். 

 

உடலில் வலியும், அவமானத்தால் மனதில் ஏற்பட்ட குமுறலோடும் அவள் கூனி குறுகிப்போய் விடுகிறாள்.  தாழ்த்தப்பட்ட சாதிப் பெண் என்பதால் கூடுதலான கொடூரத்தை அனுபவிக்கும் தலித் பெண்களின் நிலை இந்தியாவெங்கும் இதுபோலதான் இருக்கிறது.  கோபத்தில், ஆத்திரத்தில் கொதித்து எழுகிறான் சிவசாமி.  ஒருபுறம் முறைப்பெண்ணை அவமானப்படுத்திய ஆதிக்க சாதியினர் மீது கோபம்.  அவளை அவமானப்படுத்தியபோது பொது இடத்தில் நின்று வேடிக்கை பார்த்தபோது சனங்களின் மீதும் கோபம்.  இரண்டு கோவமும் சேர்ந்து ஆதிக்க சாதியினரைச் சேர்ந்தவர்களை ஒரு தலித் செருப்பால் அடிக்கும் காட்சி, மரத்தில் கட்டி  வைத்து எச்சரிக்கிற துணிச்சல் பாரட்டுதற்குரியது.  படம் பார்க்கிற ஒவ்வொருவரின் மனசாட்சியையும் தட்டியெழுப்பும் காட்சி அது.  அதே போல பண்ணையார் சினிமா கொட்டகையில் படம் பார்க்கும்போது, சிவசாமியின் மூத்த மகன் அவரை கழிவறையில் வைத்து செருப்பால் அடிக்கும் காட்சியும் துணிச்சல் மிக்க செயலாக நம்கண்முன்னே நிறுத்துகிறது.  இந்த இரண்டு இடங்களிலும் காலங்காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் தலித் சமூகம் அவமானத்தின் உச்சகட்டமாக ஆதிக்க சாதியின் மேல் நிகழ்த்தப்பட்ட செருப்படியாக அமைகிறது.  தலித் மக்கள் தங்களின் கோபத்தை வன்முறையை மாண்புக்கான, சமத்துவத்துக்கான ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த இடத்தில் புரிந்துகொள்ள முடிகிறது.

 

அதேவேளை சிவசாமியும், சிதம்பரமும் நீதி மன்றத்தில் சரணடைய வரும்போது சிதம்பரம் தனக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கித் தரச்சொல்லி அப்பாவிடம் கேட்பான்.  அப்போது அப்பா அதை வாங்கிக் கொடுப்பார்.  செருப்புப் போடக் கூட சுதந்திரமில்லாத சூழலில் நீதிமன்றத்திற்குள் நாளுபேருக்கு முன்னாடி இவன் போட்டு நடக்க வேண்டும் என்ற மகனின் ஆசையை அப்பா பூர்த்தி செய்கிறார்.  இதுவும் மாண்புக்கான, சமத்துவத்திற்குமான ஆசை அல்லது கனவு என்று புரிந்து கொள்ள முடிகிறது.

 

பஞ்சமி நில மீட்பின் சோக வரலாறு:

 

பஞ்சமி நில மீட்பு என்னும் வரலாற்று நிகழ்வை ஒரு பேசு பொருளாக்கிய அசுரன், அந்த வரலாற்றுக்குள் ஆழமாக செல்லவில்லை.  மேலோட்டமான செய்திகளைச் சொல்லிவிட்டுச் செல்கிறது.  ஒருவேளை ஒரு சினிமா என்ற வரையறைக்குள் இவ்வளவுதான் சொல்ல முடியுமோ என்னவோ! ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது பல குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர்.  பஞ்சமர்கள் என்றழைக்கப்பட்ட தலித் மக்கள் நிலமற்ற கூலிகளாய், பண்ணை அடிமைகளாய் வாழ்ந்து வந்தனர்.  அவர்கள் பன்றிகள் போல நடத்தப்படுகிறார்கள் என்று ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர்.  எனவே, பஞ்சமர்களை மாண்போடும், சமத்துவ உணர்வோடும் வாழ வைப்பதற்காக ஆங்கிலேயர்கள் 12 இலட்சம் ஏக்கர் நிலங்களை தானமாக எழுதி கொடுத்தனர். பஞ்சமர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலம் பஞ்சமி நிலம் என்றழைக்கப்பட்டது.  இது தலித் மக்களுக்கு மட்டுமே உரிய சொத்து.  வேற்று சாதியினர் இதை வாங்க முடியாது என்ற சட்டம் இருந்தது.

 

இந்த நிலம் பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலமாகவும் இருந்தது.  எனவே, கொத்தடிமைகளாக இருந்த பஞ்மர்கள் தங்களால் விவசாயம் செய்ய பொருளாதார வசதி இல்லாத நிலையில் இருந்தனர்.  பண்ணை அடிமைகளாக இருந்தபோது, அவசரத் தேவைகளுக்கு அதிகமான கடன்களை வாங்கியதால் அதை திருப்பி தரமுடியாமல் கடனுக்கு ஈடாக தங்களின் நிலங்களை கொடுத்தனர்.  பல நேரங்களில் பண்ணையாளர்கள் தலித் மக்களை மிரட்டியும் ஏமாற்றியும் நிலங்களை அபகரித்தனர்.  இப்படித்தான் தலித் மக்கள் பஞ்சமி நிலங்களை இழந்தனர்.  இழந்த நிலங்களை மீட்டபற்காக மக்கள் திரண்டு போராடும்போது அதை அடக்கி வந்த திராவிட கட்சிகள் பஞ்சமி நில மீட்டு குழுவை அமைத்ததே  தவிர, அதை மீட்டுக் கொடுத்ததாக வரலாறு இல்லை.  இந்தப் பின்னணியில் ‘வனிக சினிமா’ என்ற சுதந்திரத்திற்குள் மாட்டிக் கொண்ட தமிழ் சினிமா,  பஞ்சமி நில மீட்பைப் பற்றி பேசுவதற்கு தனுஷ் என்ற கதாநாயகன் பிம்பத்தைச் சார்ந்து நிற்கிறது. கதாநாயகனின் அசுர பலத்தாலும் அவதாரமெடுத்து வருகின்ற வீரத்தாலும் ஆதிக்க சாதியினரின் மேட்டிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற செய்தியை படம் நமக்கு உணர்த்துகிறது.  இது சாத்தியமா என்று தெரியவில்லை.

 

நிலத்திற்காகவும், தலித் குடும்பத்தின் தன்மானத்திற்காகவும் போராடும் சிவசாமி பலம் வாய்ந்த ஒரு கதாநாயகனாக (தனுஷ்) இருக்க வேண்டும் என்ற ஆசைக்கு தீனி போடுவதாக அசுரன் படம் அமைந்துவிட்டது. பஞ்சமி நில மீட்பு என்பது தனி மனிதனின், தனிக் குடும்பத்தின் அசுர பலத்தால் நடந்துவிடப்போவதல்ல.  ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் மூலம் வரும் எழுச்சி மட்டுமே பஞ்சமி நிலத்தை மீட்க முடியும். சாதிய கட்டுமானத்தால் அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் சமூகத்தைக் காப்பாற்ற ‘தனுஷ்’ என்ற கதாநாயகன் மீண்டும் வருவான் என்ற கையாலாகத்தன்மையை பார்வையாளர்கள் மத்தியில் விதைக்கிறது.  சண்டைக் காட்சிகளில் திடிரென்று தோன்றி தனுஷ் எதிரிகளை வெட்டி வீழ்த்தும்போதும் காயத்தைக் கவனிக்காமல் எழுந்து நின்று சண்டைபோடும்போதும் திரையரங்கில் பார்வையாளர்கள் கை தட்டுகிறார்கள். அங்கேதான் திரைக்கதையின் நோக்கம் தோல்வியடைந்துவிட்டது என்பது தெரிகிறது.  ‘அசுரன்’ படம் பார்த்து விட்டு தலித் மக்கள் அவமானப்பட்டது குறித்து யாருக்கும் கோபம் வந்ததாகத் கூறவில்லை.  அந்தக் குடும்பமே சிதைந்து அகதிகள்போல அலைகிறது என்று வருத்தப்படவில்லை. பஞ்சமி நிலங்களை மீட்க நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை.   தலித் மக்களின் துயர் துடைக்கவும். அவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லவும் தனுஷ் போல அவதார புருஷன் மீண்டும் மீண்டும் தோன்றுவார் என்ற எண்ணமே நிலைத்து நிற்கிறது.

 

ஒரு தலித்தின் கோபம் இயல்பாக இருக்க வேண்டும்.  அது மாண்புக்கான, விடுதலைக்கான கோபமாக இருக்க வேண்டும்.  தலித் கதாநாயகன் அவதாரம் எடுத்து சாகசம் புரிகின்ற மனிதனல்ல.  மாறாக, சாதியின் பெயரால் இழந்த நிலத்தையும், மாண்பையும் மீட்டெடுப்பதற்கான தொடர் போராட்டத்தில் இறங்குகிற இயல்பான மனிதன்.  அந்த வகையில் அசுரன் படத்தில் தனுஷ் என்ற கதாநாயக பிம்பம் இல்லாமல் ஒரு அறிமுக நடிகரை போட்டிருந்தால் இன்னும் கூடுதலான பங்களிப்பைச் செய்திருக்க முடியம். 

 

இந்தியாவில் புரையோடிப்போயிருக்கும் சாதியப் பிரச்சனையும், அதனடிப்படையிலான நில மீட்பு, மாண்பு, சமத்துவத்திற்கான தாகம் ஆகியவற்றை வெற்றிமாறன் படத்தில் பேசியிருக்கிறார்.  தமிழ் சினிமா, பார்வையாளர்களின் மழுங்கிப் போன சிந்தனைக்கு மீண்டும் தூபம் காட்டுகின்ற செயலை மீறி கடந்துபோக வேண்டிய காலம் வந்து விட்டது.  வணிக சினிமா, கதாநாயக பிம்பம், தீர்வு சொல்ல வேண்டும் என்ற முனைப்பையும் கடந்து தலித் மக்கள் சந்திக்கின்ற இழிவை, அது தரும் வலியை இயல்பாக சாதாரண மனிதர்கள் வழியாக காட்சிப்படுத்தினால் சினிமா என்ற சக்திவாய்ந்த ஊடகத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் என்பதில் ஐயமில்லை.

 

- அ.இருதயராஜ்,சே.ச

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...