அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 EMI செலுத்த 6 மாத கால அவகாசம் தேவை: முதலமைச்சர் கடிதம் 0 தமிழகத்தில் 30,000-த்தைக் கடந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு 0 ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பிக்க கோரிய அறிவிப்பு வாபஸ் 0 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 0 ட்யூன் - அசத்தும் அறிவியல் குறும்படம் 0 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழைய முடியாது: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் 0 மருத்துவ பணியாளர்களுக்கு 3 மாத ஊக்கத்தொகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 0 ஆக்ஜிசன் பற்றாக்குறையால் 26 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு 0  கொரோனா நிவாரண நிதி வழங்குக: முதலமைச்சர் 0 சபாநாயகராக பொறுப்பேற்றார் அப்பாவு 0 முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கு தனித்தனி துறைகள் ஒதுக்கீடு 0 புதுவையில் பாஜகவா?- திமுக தலையிடவேண்டும்! 0 முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்: எம்.எல்.ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார் மு.க. ஸ்டாலின்! 0 ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் கொரோனா பாதிப்பு: தஸ்லிமா நஸ்ரின் 0 அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் 20 நாட்களில் 18 பேராசிரியர்கள் மரணம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

இரட்டையர் சிறப்பிதழ்: சுபா நேர்காணல்: சினிமாவுக்கு எழுதுவோம்! ஆனால் இயக்கம் வேண்டாம்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   16 , 2015  14:49:16 IST


Andhimazhai Image
எழுத்தாளர் சுரேஷ் (சுபா) இல்லத்தில் இருந்த படிகளில் ஏறி  முதல் மாடிக்குச் சென்றபோது, ஈகிள்ஸ் ஐ அலுவலகத்தில் தலைவர் ராமதாசை சந்திக்கப்போவதுபோல் தோன்றியது. எதிர்வீட்டில் இருந்து வந்த பாலகிருஷ்ணனும் (சுபா) என் பின்னாலேயே படி ஏறினார். வைஜயந்தி தென்படுகிறாரா என்று பார்த்தவண்ணம் ஓர் அறையில் நுழைந்தோம். சிரித்தபடி எதிரில் சுரேஷும் பாலாவும் அமர்ந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் திறந்திருந்த ஜன்னல் வழியாக பறக்கும் ரயில் ஓடுவதைப் பார்க்க முடிந்தது.
 
 1979 -ல் தினமணி கதிரில் முதல் கதை வெளியானதில் இருந்து இன்றுவரை இணைந்தே சளைக்காமல் எழுதிக்கொண்டிருக்கும் இந்த இரட்டை எழுத்தாளர்களிடம் கொஞ்சம்கூட பெருமிதமோ கர்வமோ தென்படவில்லை. மிகவும் எளிமையாக, ஒருவரை ஒருவர் டேய் போட்டே அழைத்துக் கொள்ளும் இந்த நண்பர்களிடம் ஒன்றரை மணி நேரம் காதுகொடுத்ததில் புரிந்துகொண்ட முக்கியமான ஒன்று: கருத்து வேறுபாடே இல்லாத நண்பர்கள் இவர்கள் என்பது.
சென்னை மாநிலக்கல்லூரியில் இயற்பியல் படித்தபோது தமிழில் ஒரே மதிப்பெண் எடுத்ததில் உருவானது இவர்களின் நட்பு. எழுத்தின் மீதிருந்த ஆர்வம் நட்பை மேலும் உறுதிப்படுத்தியது.
 
கல்கியில் அறிவிக்கப்பட்ட ஒரு போட்டிக்கு இருவரும் ஆளுக்கொரு கதை எழுதினார்கள். அதை தனித்தனிப் பெயரில் அனுப்புவதற்குப் பதில் சுபா என்ற பெயரில் இரண்டு கதைகளாக அனுப்பினார்கள். அதில் ஒரு கதை பரிசு பெற்றது. அதுதான் ஆரம்பம். பின்னர் இருவரும் வங்கிகளில் வேலைக்குச் சேர்ந்தார்கள். பாலா பெருந்துறையிலும் சுரேஷ் சென்னையிலும் பணிபுரிந்தனர். ஆனாலும் ஒருவருக்கொருவர் நீண்ட கடிதங்களை எழுதிக்கொண்டனர். அக்கடிதங்களில் கதைக்கருக்களை விவாதித்தனர். பின்னர் 20 கதைகளை எழுதி, நாளொன்றுக்கு ஒரு கதையாக 
சாவி பத்திரிகைக்கு அனுப்பினர். 19 கதைகள் வரிசையாகத் திரும்பிவந்தன. ஒரு கதை வரவில்லை. தபால்காரரிடம் விசாரித்து அது திரும்ப வரவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டனர். திரும்பி வந்ததில் ஒரு கதையை திருத்தி எழுதி தினமணி கதிருக்கு அனுப்பினர்.
 
ஒருநாள் காலையில் சென்னை அலுவலகத்துக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தார் சுரேஷ். பக்கத்தில் அமர்ந்திருந்தவர் தினமணிக்கதிரை வாசித்துக் கொண்டிருந்தார். அவர் திருப்பிய ஒரு பக்கத்தில் சுபா என்ற  பெயரில் இவர்கள் எழுதிய சிறுகதை அச்சாகியிருந்தது. சுரேஷ் உற்சாகத்தில் பேருந்திலிருந்து குதித்துவிடும் நிலையை அடைந்தார். பேருந்து நிற்கும்வரைக் காத்திருந்தார். இறங்கி ஒரு தினமணிக்கதிரை வாங்கிக்கொண்டு தந்தி அலுவலகம் நுழைந்து பெருந்துறையில் இருக்கும் நண்பர் பாலாவுக்கு ‘வாழ்த்துகள்’ என்று தந்தி அனுப்பி, காற்றில் மிதப்பவர் போல் நடந்து அலுவலகம் அடைந்தார். அன்று மதியம் சுரேஷின் அப்பா வங்கிக்குப் போன் செய்தார்: ‘பெருந்துறையில் இருந்து பாலா வாழ்த்துகள் என்று ஒரு தந்தி அனுப்பியிருக்கிறார். என்ன விசேஷம்?’ என்று கேட்டிருக்கிறார். ஆமாம் காலையில் எதேச்சையாக தினமணி கதிரை பெருந்துறையில் பாலாவும் பார்த்து நண்பனுக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்!
இவர்கள் சாவிக்கு அனுப்பியதில் திரும்பிவராத அந்த ஒரு கதை அதற்கு அடுத்தவாரம் பிரசுரம் ஆனது. பின்னர் பல கதைகள் சாவியில் வந்தன. ஒருநாள் அந்த அலுலகத்தில் இருந்து கடிதம் ஒன்று வந்தது:  அம்மணி உங்கள் புகைப்படத்தை அனுப்பி வையுங்கள்! சாவி அலுவலகத்தில் சுபா என்பது ஒரு பெண் என்று கருதி இருக்கிறார்கள். ஒரு நாள் இருவரும் சாவிக்கு முன்னால் போய் நின்றார்கள். கருகருவென மீசையுடன் நின்ற இரு இளைஞர்களைக் கண்டதும் சாவி ஆச்சரிய மானார். விரைவிலேயே  ஒரு நாவல் எழுதுவதற்கான அனுமதியையும் வாங்கிவிட்டனர். திருப்பதி மலையில் ஓரிரவு நடந்து ஏறுகையில் முதல் நாவலுக்கான கதையை பேசி முடிவுசெய்தனர். ஒரு அத்தியாயம் சுரேஷ் எழுதி பாலாவுக்கு அனுப்புவார். அடுத்த அத்தியாயம் பாலா எழுதுவார். ஒவ்வொருவரும் மற்றவர் எழுதிய அத்தியாயத்தில் திருத்தங்கள் சொல்வர்.
 
இவர்களின் முதல் நாவல் ‘மயானப் பிரசவங்கள்’ சாவி குழுமத்தில் அப்போது வெளியான சுஜாதா இதழில் வெளியானது. எழுத்தாளர் சிவசங்கரியிடம் இருந்து அந்நாவலுக்கு ஒரு பாராட்டுக்கடிதம் வந்தது பெரும் வியப்பு! அதை அடுத்து அனைத்து பத்திரிகைகளிலும் எழுதினார்கள். 
அது கிரைம்நாவல்களின் காலம். ஈகிள்ஸ் ஐ துப்பறியும் நிறுவனத்தை வைத்து கிரைம் தொடர்களும் எழுதினர். எஸ்.பி.ராமு இவர்களுக்காக தொடர்ந்து சூப்பர் நாவல் வெளியிட்டார். நரேந்திரன்,  வைஜெயந்தி, ஜான் சுந்தர், பால்ராஜ்,செல்வா- முருகேசன், ஷெர்லாக் கமலேஷ்குமார், போன்றவர்களைக் கொண்ட பல கதைகளை எழுதி பரபரப்பானார்கள். இதற்கிடையில் கல்கி பத்திரிகையில் ஜெயமன்மதன் என்ற பெயரில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் சினிமா விமர்சனமும் எழுதினர். ( இது என்ன சார் கிளுகிளுப்பான பேரா இருக்குதே? ஜெய வருஷம் பாலா பிறந்தார். சுரேஷ் பிறந்தது மன்மத வருஷம். இரண்டு சேர்த்து ஜெயமன்மதன்!) அப்போது பல உலகத் திரைப்பட விழாக்களுக்குச் செல்ல வாய்ப்பு கிட்டியது. வாரம் ஒரு மாவட்டம் என்ற பெயரில் பல்வேறு மாவட்டப் பிரச்னைகளை எழுதும் வாய்ப்பு வந்தது. ஆனந்த விகடனில் காஷ்யபன் என்ற பெயரில் ஆன்மிகத் தொடர்கள், சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கிலத்தில் சொன்ன  ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரின் தமிழ் வடிவம் என சுபாவின் கொடி உயரப் பறந்தது. அத்துடன் இவர்களின் வாசகர்களாகவும் நண்பர்களாகவும் இருக்கும் ராணுவ அதிகாரிகள் சொன்ன நிஜ சம்பவங்களை வைத்து எழுதிய கதைகள் இவர்கள் மனசுக்கு மிகவும் நெருக்கமானவையாக இருக்கின்றன.
 
சினிமா?
‘பாக்யராஜ் சார் முந்தானை முடிச்சு படத்துக்குப் பின்னர் எங்களை கதை விவாதத்துக்கு அழைத்திருந்தார். திடீரென அழைத்ததால் பத்துநாள் வங்கிக்கு விடுமுறை எடுத்துப் போயிருந்தோம். பத்து நாள் ஆனதும் மெதுவாக அவரிடம் கையைப் பிசைந்துகொண்டு போகவேண்டும் என்றோம். எங்கே என்றார் அவர். நாங்க இருவரும் வங்கியில் வேலை செய்றோம். லீவு முடிஞ்சுடுச்சு என்றோம். அவருக்கு நாங்க வங்கியில் வேலை செய்றோம்னு தெரியாது. எங்க இருவரையும் அவருடைய உதவி இயக்குநராக நினைச்சிருந்தார். ஆனால் எங்களால் பார்க்கிற வேலையை விட்டுட்டு  சினிமாவுக்கு முழுமையாக வரக்கூடிய பொருளாதாரப் பின்னணி அப்போது இல்லை” என்கிறார்கள் சுபா.
 
ஆனால் சினிமா இவர்களை  விடுவதாக இல்லை. 96-ல் சுந்தர். சி இவர்களைத் தொடர்புகொண்டு கதை கேட்டார். பின்னர் அவர் இயக்கிய நாம் இருவர் நமக்கு இருவர், ரெண்டு ஆகிய படங்களுக்கு பணி புரிந்தனர்.
இந்நிலையில் சூப்பர் நாவலுக்கு அட்டைப்படங்கள் எடுத்த புகைப்படக் கலைஞர் கேவி ஆனந்த் மிகப்பெரிய திரைப்பட ஒளிப்பதிவாளராகியிருந்தார். அவர் இயக்குநர் ஆனபோது சுபாவை கதைக்காக அணுகினார். அதற்காக விகடனில் வெளியான ‘நிஜமாவே என்னை லவ் பண்றியா?’ என்ற ஓர் இரண்டுவாரக் கதையை தெரிவு செய்து அதற்கு திரைக்கதை வடிவம் கொடுத்து முடித்தபோது அந்த மாதம் சூப்பர் நாவலில் வந்த ‘புதைத் தாலும் வருவேன்’ என்ற ஒரு கதையை கேவிஆனந்த் படித்தார். அதையே முதலில் படமாக எடுக்க விரும்பினார். அதுதான் கனாக்கண்டேன் என்ற பெயரில் வெளியானது. அதில் கதை, திரைக்கதை, வசனம் என்று சுபா பெயர் வெளியானது. அதன்பின்னர் அயன், கோ, மாற்றான், அனேகன் என்று அவருடன் பயணம் தொடர்கிறது. இடையில் ஷங்கரின் ஐ, ஜெயேந்திராவுடன் 180 விஷ்ணுவர்த்தனின் ஆரம்பம் மற்றும் தற்போதைய யட்சன் என்று பல படங்களுக்கு சுபா கதை திரைக்கதை வசனங்கள் எழுதியிருக்கிறார்கள். வங்கி வேலையிலிருந்து ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வு பெற்று இருவரும் முழு நேர எழுத்தாளர்கள் ஆகிவிட்டனர். 
இப்போது சினிமாவுக்கு எழுதுவதால் பொருளாதார ரீதியில் எப்படி இருக்கிறது?
 
“இந்த வீடு நாங்கள் பத்திரிகையில் எழுதி சம்பாதித் ததில் கட்டியதுதான். நரேந்திரன், வைஜயந்தி, ஜான்சுந்தர் போன்ற எங்கள் பாத்திரங்கள் கட்டியதுதான். அடிப்படையில் நாங்கள் கதை சொல்லிகள். சினிமா என்பது நாங்கள் கதை சொல்லக்கூடிய இன்னொரு மீடியம் அவ்வளவுதான். பத்திரிகை தரும் வருமானம் வேறு. சினிமா தரும் வருமானம் வேறு.. சினிமாவில் எழுதும் எழுத்தாளன் அதன் பட்ஜெட்டில் ஒரு சதவீதம் அவனுக்குக் கொடுக்கப்பட்டால்கூட எவ்வளவோ பெருமைப்பட்டுக்கொள்வான். ஆனால் அதுகூட கிடைப்பதில்லை.  சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படங்களில்கூட முழு சன்மானம் பெறாத பல கசப்பான அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. கேட்காமலேயே பைசா பாக்கியில்லாமல் வழங்கும் ஏவிஎம், ஏஜிஎஸ் போன்ற நல்ல தயாரிப்பாளர்களும் இங்குண்டு. ”
“சினிமா இயக்கும் ஆர்வம் உண்டா?”
“இல்லவே இல்லை.  படம் இயக்க எப்போது ஆசை வரும் என்றால் நாங்கள் சினிமாவுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதும் கதையை இயக்குநர்கள் வேலைக்கு ஆகாது என்று விலக்கித் தள்ளினால் இதை எப்படியும் படமாக எடுக்கிறோம் பார் என்று வெறிவந்திருக்கும். ஆனால் எங்கள் கதைகளை இயக்குநர்கள் ஏற்றுக்கொண்டுதானே இருக்கிறார்கள்?  எங்களுடைய பலம் எதுவோ அதைத்தான் நாங்கள் செய்யவிரும்புகிறோம்”
“சுரேஷும் பாலாவும் சந்தித்திருக்காவிட்டால்?
 
”இரண்டு எழுத்தாளர்கள் தனித்தனியாக உருவாகியிருக்கலாம். இருவரில் ஒருவருமே எழுத்தாளராக உருவாகாமலும் போயிருக்கலாம்! ஒருவர் சோர்வடையும்போது இன்னொருவர் ஊக்கியாகச் செயல்பட்டுக்கொள்கிறோம். அத்துடன் எழுத்தில் ஒருவருடைய பார்வை அனுபவம் மட்டுமல்லாமல் இரண்டுபேருடைய தனித்தனியான பார்வையும் அனுபவமும் சேர்வது மேலும் செறிவாக்குகிறது” என்று புன்னகைக்கும் சுபா சொன்ன இன்னொரு விஷயம், “இரண்டு எழுத்தாளர்கள் பணிபுரிகையில் இருவரும் முழுமையான உழைப்பைத் தருவோம். ஆனால் சம்பளம் ஒரு எழுத்தாளருக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும். எங்கள் நட்புக்குள் பணம் ஒரு பிரச்னையாக வந்ததில்லை என்பதால் இதை நாங்கள் பொருட்படுத்தவில்லை!”
 
நாம் விடைபெற்றபோது ஜன்னல் வழியாக இன்னொரு பறக்கும் ரயில் தடதடத்ததைக் கண்டோம்.
                                                                                                                                                                  -மதிமலர்
 
(அந்திமழை 2015 ஏப்ரல் இதழில் வெளியான கட்டுரை)
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...