வருத்தம் தெரிவித்தும் துன்புறுத்தும் வடிவேலு! – சிங்கமுத்து ஆதங்கம்

Singa Muthu - Vadivelu
சிங்கமுத்து - வடிவேலு
Published on

வருத்தம் தெரிவித்தும் நடிகர் வடிவேலு துன்புறுத்துவதாக நடிகர் சிங்கமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல்களுக்கு அளித்த பேட்டியில், தன்னை பற்றி அவதூறாக பேசியதற்காக 5 கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, நடிகர் சிங்கமுத்துக்கு உத்தரவிடவும், தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வடிவேலுவுக்கு எதிராக அவதூறாக தெரிவித்த வார்த்தை எது என்பதை அவர் தனது மனுவில் குறிப்பிடவில்லை எனவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தனது சொந்த அனுபவத்தையும் திரைத்துறையை சேர்ந்தவர்களின் கருத்துக்களையும் மட்டுமே அந்த பேட்டியில் தெரிவித்ததாக சிங்கமுத்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வடிவேலு தரப்பில் தனக்கு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீசுக்கு அளித்த பதிலில், வருத்தம் தெரிவித்த போதும் கூட, தன்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று பதில் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் இருந்துள்ளதாகவும், அதன் காரணமாக அவர் பணம் புகழ் சம்பாதித்தார் எனவும் பதில் மனுவில் சிங்கமுத்து குறிப்பிட்டுள்ளார். தனது பேட்டியை முழுமையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றும் தற்போது அந்த பேட்டி யூடியூப்-பில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்

அவரைப் பற்றி பேச தடை கேட்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதால், நடிகர் வடிவேலுவின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி டிக்காராமன், அக்டோபர் 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com