‘மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோக்களை பகிர வேண்டாம்’ என்று ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களுக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, ‘இந்தியாவில் செயல்படும் சமூக வலைத்தளங்கள் இந்திய சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்’ மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.
மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ நேற்று மாலை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரின் மெய்டே மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே மோதல்கள் வெடித்த மறுநாள், மே 4 அன்று காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பி பைனோம் என்ற கிராமத்திற்கு அருகே இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது. இதன் வீடியோ காட்சிகள் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன.
இது தொடர்பான வீடியோக்கள் ட்வீட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், அந்த வீடியோக்களை நீக்குமாறு ட்விட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பாஜகவை சேர்ந்த அமைச்சர் ஸ்மிரிதி இரானி, குஷ்பூ போன்றவர்களும் சமூக ஊடகத்தில் இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி இருக்கும் நிலையில் இரு அவைகளிலும் மணிப்பூர் பிரச்னை பெரும் அமளியைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.