செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க புழல் சிறைக்கு விரைந்த அமலாத்துறை!

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, புழல் சிறைக்கு விரைந்துள்ளனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். அதில், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் அல்ல என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், செந்தில் பாலாஜியை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று அவசர மனு அளித்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை இன்று முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தார்.

இன்று புழல் சிறையில் இருந்து காணொலி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில், வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி செந்தில் அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.

இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினர் புழல் சிறைக்கு சென்றுள்ளனர். அவரை காவலில் எடுத்த பின்னர், கும்மிடிப்பூண்டி அல்லது சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com