அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து. அவரது எதிரணியான ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது ஊழல் வழக்கு பாய்ந்துள்ளது.
ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வான இவர், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டுவரை வீட்டுவசதித் துறையை கவனித்துக்கொண்டார். அப்போது, சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சர் நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்ககம் கட்ட திட்ட அனுமதி கோரி 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. ஆனால், 2016ஆம் ஆண்டுதான் அனுமதி வழங்கப்பட்டது.
அந்த அனுமதியைத் தருவதற்காக அமைச்சராக இருந்த வைத்திலிங்கத்துக்கு 27.90 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்தப் பணம் 'பாரத் கோல் கெமிக்கல்' எனும் நிறுவனம் மூலம் வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முகபிரபு, உறவினர் பன்னீர்செல்வம் ஆகியோர் இயக்குநர்களாக இருந்த முத்தம்மாள் எஸ்டேட் என்ற நிறுவனத்துக்கு கடனாக வழங்கப்பட்டதாகக் காட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு, கண்காணிப்பு காவல்துறைப் பிரிவினர், வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சர் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, அவரின் உறவினர் பன்னீர்செல்வம், முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராஸ்டெரக்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், பாரத் நிறுவனம் உட்பட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதிந்துள்ளனர்.
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியில் முக்கியஸ்தராக இருக்கும் வேலுமணி மீது மூன்று ஆண்டுகளாக புகார்கள் கூறப்பட்டபோதும், சட்டப்பேரவைத் தேர்தல் ஜரூர் தொடங்கியுள்ளநிலையிலேயே வழக்கு பதியப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர் அணியில் இருக்கும் வைத்தி கடந்த ஒரு வாரமாக அ.தி.மு.க. ஒன்றுசேரும் என அடிக்கடி கூறிவரும் நிலையில், அவர் மீதான வழக்குப்பதிவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அரசுத் தரப்பில் ஊழல் வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், அரசியலாக தி.மு.க. இந்த விவகாரங்களைப் பிரச்சாரத்தில் கையில் எடுக்கும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.