வடியாத வெள்ளம்- ஹெலிகாப்டர்தான் வழி- மைய அரசுக்கு கடிதம்!

வடியாத வெள்ளம்- ஹெலிகாப்டர்தான் வழி- மைய அரசுக்கு கடிதம்!

Published on

தென்கோடி தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பெய்த கடும்மழையால் ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ளம் வடிந்துவிட்ட நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் மொத்த ஊர்களுமே நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் ஹெலிகாப்டரில் மட்டும்தான் மீட்பில் ஈடுபட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக ஹெலிகாப்டர்களை வழங்க பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத்சிங்குக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

“ தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத அளவில் மழை பெய்துவருகிறது. சில இடங்களில் 1871-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழை பெய்துள்ளது. அதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அலுவலர்கள், மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அங்கு அணி திரட்டியுள்ளோம். பிற மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட நிவராணப் பொருட்கள் இணைப்புச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காரணத்தால் மக்களுக்கு விநியோகிக்க முடியவில்லை எனவே, அவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் மட்டுமே விநியோகிக்க இயலும்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெகாப்டர்கள் மற்றம் கடலோரக் காவல் படையின் 2 ஹெகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெருமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதால், அதிகபட்ச அளவில் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்கவேண்டும்.” என்று அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com