ரூபாய் வீழ்ச்சியால் உண்டான பாதிப்பு தெரியுமா? - அண்ணாமலைக்கு அழகிரி கேள்வி!

கே எஸ் அழகிரி
கே எஸ் அழகிரி
Published on

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுவரும் செயற்கையான நடைபயணத்தில் அடிப்படை ஆதாரமில்லாமல் கருத்துகளைக் கூறுகிறார். அதைத் தெளிவுபடுத்து வேண்டியது அவசியமாகிறது.

நேற்றைய கூட்டத்தில் பேசும் போது, 2011 இல் 35-வது இடத்தில் வளர்ச்சிப் பாதையில் இருந்த இந்தியா, இன்று 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று கூறியிருக்கிறார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டாக்டர் மன்மோகன்சிங் தலைமையில் ஆட்சி அமைந்த போது 15 நாட்களுக்கு கூட அந்நிய செலாவணி இருப்பு இல்லாத திவாலன நிலையில் இருந்தது. அத்தகைய பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் புதிய பொருளாதார கொள்கை, வர்த்தக கொள்கையை அறிவித்து இந்தியாவை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 9 சதவிகித வளர்ச்சியை உருவாக்கி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சாதனை படைத்தது.

டாக்டர் மன்மோகன்சிங் என்ன பொருளாதார கொள்கையை கடைபிடித்தாரோ, அதைத் தான் அவருக்கு பிறகு வந்த ஆட்சியாளர்களும் இன்றும் கடைபிடிக்கிற நிர்ப்பந்தமான நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை அறிந்து கொள்ள அண்ணாமலைக்கு குறைந்தபட்ச பொருளாதார அறிவு இருந்திருந்தால் இத்தகைய கருத்துகளை கூறியிருக்க மாட்டார்.

இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை என்ன ? அவர் கூறுகிறபடி இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்கிறதா ? வளர்ச்சியில் சமநிலைத்தன்மை உள்ளதா ? இந்தியாவின் வளர்ச்சியை சில விரல் விட்டு எண்ணக்கூடிய தொழிலதிபர்கள் சொத்துகளை குவித்து வருகிறார்களா ? இதற்கெல்லாம் அண்ணாமலை பதில் கூறுவாரா ?

இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்தவரை 2022 இல் 7 சதவிகிதமாக இருந்தது, 2023 இல் 5.9 சதவிகிதமாக சரிந்திருக்கிறது. வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து 26.91 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை ஜூன் 21, 2023 நிலவரப்படி 2022 - 23 ஆம் நிதியாண்டில் 101 டாலராக உயர்ந்திருக்கிறது. மேக் இன் இந்தியாவைப் பற்றியும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால், சீனாவுடனான இறக்குமதி அதிகரித்து இந்தியாவின் ஏற்றுமதி பலமடங்கு குறைந்து வருகிறது.

இன்றைக்கு இந்திய பொருளாதாரத்திற்கு சீனாவின் இறக்குமதி அதிகளவில் தேவைப்படுகிறது. இத்தகைய அவலநிலையில் தான் இந்திய பொருளாதாரம் இருக்கிறது.

கடந்த கால தேர்தல் பரப்புரைகளில் இந்தியாவை 2024 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன், அதாவது 375 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார நாடாக உயர்த்திக் காட்டுவேன் என்று பலமுறை கூறியிருக்கிறார். தற்போது 2.6 டிரில்லியன் டாலர், அதாவது ரூபாய் 193 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு இந்தியாவின் வளர்ச்சி இரு மடங்காக உயர வேண்டும்.

ஆனால் கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் சராசரி வளர்ச்சி விகிதம் 5.75 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. ஆனால் மத்திய காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியில் சராசரி வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக இருந்ததை அண்ணாமலையால் மறுக்கமுடியுமா?

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பினால் இந்தியா வளர்ந்த நாடு என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சராசரி தனிநபர் வருமானத்தை வைத்துதான் முடிவு செய்யமுடியும். அந்த வகையில் ஒவ்வொரு தனிநபரின் வருமானம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 200 ரூபாய். 2022ஆம் ஆண்டில் 194 நாடுகளில் 149-வது இடத்தில் தான் இந்தியா உள்ளது.

அதேபோல, இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்தவரை குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து குவிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை அண்ணாமலை அறிவாரா ? 2021 இல் இந்திய சொத்து மதிப்பில் 41 சதவிகித சொத்துகள் 1 சதவிகிதத்தினரிடம் குவிந்துள்ளன. இதே நேரத்தில் 50 சதவிகித மக்களிடம் 3 சதவிகித சொத்துகள் தான் சேர்ந்துள்ளன என்று சர்வதேச நிறுவனமான ஆக்ஸ்பார்ம் கூறுகிறது.

இந்த நாட்டின் சொத்து வளங்கள் அம்பானி, அதானி உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்களிடம் குவிந்திருக்கிறது. 2022 போர்ப்ஸ் அறிக்கையின்படி அம்பானி சொத்து 400 சதவிகிதமும், அதானி சொத்து 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. இத்தகைய அசுர வளர்ச்சியினால் சாதாரண இந்தியருக்கு என்ன பயன் ?

மே 2014 இல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62 ஆக இருந்தது. 2023 இல் ரூபாய் 82.71 ஆக சரிந்து 40 சதவிகித மதிப்பு குறைந்துள்ளது. 2014 இல் வங்கியில் ரூபாய் 100 டெபாசிட் செய்திருந்தால் இன்றைய மதிப்பு ரூபாய் 60 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் மக்கள் அடைந்த பாதிப்பை அண்ணாமலையால் அறிய முடியுமா ?

தி.மு.க. ஆட்சியில் மணல் விற்பனையில் ரூபாய் 4700 கோடி ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியதாக அண்ணாமலை சொல்கிறார். அமலாக்கத் துறை இப்படி கூறுவதற்கு என்ன ஆதாரம் ? அரசியல் உள்நோக்கம் கொண்டு அமலாக்கத் துறை செயல்படுவதால் தான் மணல் குவாரி குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

இன்றைக்கு பா.ஜ.க.வோடு கூட்டணி சேர எந்த கட்சியும் முன்வராத நிலையில் பிரதமர் மோடி அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை, வருமானவரித் துறை, எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் ஆளுநர்கள் என கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார். ” என்று கே.எஸ். அழகிரி தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com