மணல் கொள்ளையரைக் கைதுசெய்யாமல் இருப்பதா?- சீமான் கண்டனம்

சீமான்
சீமான்
Published on

பழனி ஆயக்குடியில் கிராம நிர்வாக அலுவலரைக் கொல்ல முயன்ற மணற்கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியில் மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற கிராம நிர்வாக அலுவலரை மணற்கொள்ளையர்கள் பார வண்டியை ஏற்றி படுகொலை செய்ய முயன்றது, நேர்மையான அரசு அதிகாரிகளின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை; சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, கடந்த வாரத்தில் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் மணல் கடத்தப்படுவதாகப் பொதுமக்கள் அளித்த புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி மற்றும் அவரின் உதவியாளர் மகுடீஸ்வரன் நேரில் சென்று ஆய்வுசெய்ததில் திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கர் ஆகியோர் கட்டுப்பாட்டில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவது உறுதியானது என்றும், 

”அவர்களை ஆயக்குடி காவல்நிலையத்தில் ஒப்படைக்க அழைத்துச்சென்றபோது, கிராம நிர்வாக அலுவலர், அவரின் உதவியாளர் மற்றும் இரு காவலர்கள் என நான்கு பேர் மீதும் மணற் கொள்ளையர்கள் பார வண்டியை ஏற்றியும், அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மணலைக் கொட்டியும் படுகொலை செய்ய முயன்றது திமுக ஆட்சியில் மணற்கொள்ளையர்கள் எந்த அளவிற்கு அச்சமின்றி சுதந்திரமாகச் செயல்படுகின்றனர் என்பதற்கு சான்று.” என்றும்,

”கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸிஸ் மணற்கொள்ளையைத் தடுத்ததற்காக தன் அலுவலகத்திலேயே மணற்கொள்ளையர்களால் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அக்கொடூர நிகழ்வின் வடு மறைவதற்குள், கடந்த மே மாதம் திருச்சி மாவட்டம் துறையூரில் செம்மண் கொள்ளையைத் தடுத்து நிறுத்தியதற்காக வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீது திமுகவைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர் மகேசுவரன், தனபால், மணிகண்டன், கந்தசாமி உள்ளிட்ட நால்வர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.” என்றும்,

”ஆளுங்கட்சி என்ற திமிரிலும், அதிகார மமதையிலும் திமுகவினர் தொடர்ச்சியாக அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் மிரட்டி, அச்சுறுத்தி, தாக்குவதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? இதுவரை அவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை? திமுக அரசு இக்கொடுமைகளைத் தொடர்ந்து அனுமதிப்பதேன்? இத்தகைய சமூக விரோதச் செயல்களுக்குக் காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் முழுமையான பொறுப்பேற்க வேண்டும்.” என்றும் சீமான் இன்றைய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com