பெரிய பதவி, சின்ன புத்தி- பழ. நெடுமாறன் கடும் கண்டனம்

Nedumaran
பழ. நெடுமாறன்
Published on

ஆளுநர் ஆர்.என்.இரவியின் போக்குக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் இரவி வழக்கம் போலத் தனது கோணல் புத்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் தான் இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.

”முதல்வர், ஆளுநர், குடியரசுத் தலைவர், தலைமையமைச்சர் போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அதிகாரிகளால் முன் ஒத்திகைகள் ஒருமுறைக்குப் பலமுறை பார்க்கப்படும். நிகழ்ச்சி நிரலின் ஒவ்வொரு பகுதியும் மிகக் கவனமாகப் பரிசீலனை செய்த பிறகே அந்நிகழ்ச்சி இறுதியாக நடத்தப்படும்.”என்று சுட்டிக்காட்டியுள்ள நெடுமாறன், ”ஆனால், ஆளுநர் முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்பவரைப் போலத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். ஆனால் இந்த மறுப்பு ஏற்கத்தக்கது அல்ல.” என்று குறிப்பிட்டுள்ளார்.

”தமிழ்நாட்டின் ஆளுங்கட்சிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பல முறை ஆளுநர் இரவி பலத்த கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறார். தன்மானமுள்ள வேறு யாராவது இப்பதவியில் இருந்தால், பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருப்பார்கள். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் கிடைத்துள்ள பதவி நாற்காலியை இழக்கச் சம்மதிக்காதவர்கள் ஆளுநர் இரவியைப் போலத்தான் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பார்கள்.” என்றும் நெடுமாறனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com