நீதிபதியைப் போல சபாநாயகர் செயல்படுவதா?- நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடும் தாக்கு

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
Published on

இலஞ்ச ஊழல் வழக்குகளில் நீதிபதியைப் போல சட்டப்பேரவைத் தலைவர் செயல்படுவதா என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையாக கருத்துத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சரும் ஜெயலலிதா அமைச்சரவையில் 2001-06 காலகட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரின் குடும்பத்தினர் வருவாய்க்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் சொத்து சேர்த்தனர் என ஊழல் தடுப்புத் துறையால் 2006ஆம் ஆண்டில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் பின்னர் 2012இல் அனைவரையும் விடுவித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து மறுஆய்வு செய்துவருகிறார்.  

நேற்று இந்த வழக்கை அவர் விசாரித்தபோது, திமுக ஆட்சியில் ஓ.பன்னீர் மீது வழக்குப்பதிய தந்த அனுமதியை அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவர் ஒரு நீதிபதியைப் போல செயல்பட்டு ரத்துசெய்துள்ளார் என்றும் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், அது மட்டுமல்லாமல் குற்றவியல் விசாரணையையே கேலிக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார். 

அரசியலமைப்பு உயர்நீதிமன்றத்துக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை சட்டப்பேரவைத் தலைவர் குழிதோண்டிப் புதைத்துவிட்டார் என்றும் கடுமையாகக் கூறியுள்ளார். 

மேலும், உயர்நீதிமன்றமும் அதிகாரவரம்பே இல்லாத சிவகங்கை நீதிமன்றத்துக்கு ஓ.பன்னீர் வழக்கை மாற்றியதன் மூலம் தவறு செய்துவிட்டது என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com