திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாமல் பேசுகிறார்கள்- தி.மு.க.வினரைச் சீண்டிய சீமான்!

விழுப்புரம் நா.த.க. பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
விழுப்புரம் நா.த.க. பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
Published on

“நாங்கள் பரம்பரை பரம்பரையாக தி.மு.க. என்பவர்கள், திராவிடம் என்றால் என்னவென்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர்” என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்துள்ளார்.

அண்மையில் திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது, “தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் இன ரீதியாக பிரிவினை இருப்பது போன்றதொரு தவறான தகவலை உருவாக்கினார்கள். திராவிடம், ஆரியம் என்ற இனங்கள் இருப்பது போல பிரிவை உருவாக்கினார்கள். திராவிடர்கள் என்பவர்கள் தனி இனம் என்ற கருத்தாக்கத்தின் தந்தை ராபர்ட் கால்டுவெல். உண்மையில் இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டிஷாரின் உத்திகளில் இதுவும் ஒன்று.” என ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சைக்குரிய வகையில் குறிப்பிட்டார்.

இதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், திராவிடம் தொடர்பாக கிண்டலாக கேள்விகளை முன்வைத்தார்.

“நாங்கள் பரம்பரை பரம்பரையாக தி.மு.க. என்பவர்கள், திராவிடம் என்றால் என்னவென்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு நேரம் திராவிடம் என்றால் அது ஒரு இடத்தை, இனத்தைக் குறிக்கிறது என்பார்கள். அப்படி ஒரு இனம் இல்லையே என்றால், அது ஒரு மொழியைக் குறிக்கிறது என்பார்கள். எந்த மொழியும் திராவிட மொழி இல்லையே என்றால், எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதுதான் திராவிடம் என்பார்கள். வடிவேலு சொல்வதைப் போல, பாரதியாரா பாரதிராஜாவா? வேண்டாம் விட்டுடலாம். அவரே குழப்பமாகிட்டார். அதுபோல அவர்களும் குழப்பமாகிவிட்டார்கள்” என்று சீமான் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com