சென்னையில் அரசு டாக்டர் கத்தியால் கொடூரமாகக் குத்தப்பட்டதைக் கண்டித்தும் உரிய நடவடிக்கைகளை எடுக்கக்கோரியும் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் இதை அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் செந்தில் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு சூம் வழியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை, கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவ வல்லுநர் பாலாஜியின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குக் கண்டனமும் அதிர்ச்சியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
1. தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம்-டிஎன்ஜிடிஏ கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை புற்றுநோய் வல்லுநர் பாலாஜி மீது நோயாளியின் உடனாளர் கொடூரமாகத் தாக்கியதற்கு சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.
2.மருத்துவமனைகள் பாதுகாப்புச் சட்டப்படியும் குற்றவியல் சட்டப் பிரிவுகளின்படியும் மருத்துவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3. வருங்காலத்தில் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க கடுமையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
* அனைத்து மருத்துவமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் அவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.
* அட்டண்டர் பாஸ் வழங்கி நோயாளியுடன் தங்கி கவனிக்கும் நபர்களுக்கு கறாராக கட்டுப்பாடு விதிக்கவேண்டும்.
* இப்படியான சம்பவங்கள் தொடர்பாக மருத்துவர் சங்கம் கூறிய ஆலோசனைகளையும் நிறைவேற்றவேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி, புறநோயாளிகள் சிகிச்சை, சாதாரண அறுவைச்சிகிச்சைகள், மாணவர் வகுப்புகள், கூட்டங்கள் ஆகிய உயிர்காக்கும் சிகிச்சை அல்லாத பணிகளைக் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்வரை அனைத்து இடங்களிலும் இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக நாளை மதியம் 12 மணிக்கு மாநிலச் செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும் என்று சங்கத் தலைவர் செந்தில் தெரிவித்துள்ளார்.