டாஸ்மாக்கில் பில் தருவாங்களா? மாட்டாங்களா?

 டாஸ்மாக்கில் பில் தருவாங்களா? மாட்டாங்களா?
Published on

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி, “காலை 7 மணி முதல் 9 மணி வரை கட்டடம் உள்ளிட்ட வேலைகளுக்கு செல்பவர்கள் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று நாங்கள் போகிற இடமெல்லாம் கோரிக்கை வைக்கிறார்கள். அதுபற்றி ஆலோசித்து வருகிறோம். இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை” என்று கூறினார்.

இதற்கு சமூக செயல்பாட்டாளர்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. சமூக ஊடகங்களிலும் மக்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் அப்படியொரு திட்டம் இல்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.

“டாஸ்மாக்கில் நேர மாற்றத்திற்கு வாய்ப்பே இல்லை. தற்போது உள்ள அதே நேரமே தொடரும். 12pm -10pm இந்த நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. டாஸ்மாக்கை காலையில் திறக்கும் திட்டம் எதுவும் தமிழக அரசிடம் இல்லை” என்று கூறினார்.

மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கப்படுவதாக சொல்லப்படும் புகார்கள் குறித்து பதிலளித்த அவர், “டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கும் நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அனைத்து கடைகளிலும் பத்து ரூபாய் வாங்கப்படுவது இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே வாங்கப்படுகிறது.

அவை முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் போதுமான இடமில்லாததால் பில் கொடுக்க முடியவில்லை. கடைகளில் மதுபானம் விற்பனை செய்யும் அலுவலர்களே பெரும்பாலான நேரம் நின்று கொண்டு தான் மது விற்பனை செய்கிறார்கள்.

அங்கே மெஷின் வைத்து பில் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு தனியாக இடம் வேண்டும். ஆனால் தற்போது பல கடைகளில் திரும்புவதற்கு கூட இடமில்லை. கேரளா போன்ற மாநிலங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக இடம் இருப்பதால் அவர்கள் பில் கொடுக்கிறார்கள். பில் கொடுப்பதற்கு போதுமான இடம் கண்டறியப்பட்டு பிறகு தமிழ்நாட்டின் பில் கொடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com