நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் இந்த டிவிட்டர் கணக்கு முடக்கத்துக்கு தமிழக காவல்துறையே காரணம் என்று நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். பின்னர் முதலமைச்சர் கண்டனமும் சென்னை போலீஸின் மறுப்பும் வெளியாயின. இந்நிலையில் முதல்வரின் நிலைப்பாட்டுக்கு சீமானும் நன்றி தெரிவித்துள்ளார்.
’கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணைநிற்கும் மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி!’ என்று அவர் கூறியுள்ளார்.