கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

கி.வீரமணிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

Published on

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 91ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் இல்லத்துக்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துதெரிவித்தார். சென்னை, அடையாறு பகுதியில் உள்ள கி.வீரமணியின் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் அவருக்கு புத்தகத்தையும் பரிசாக அளித்தார். 

பின்னர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு வந்த வீரமணிக்கு, பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

முன்னாள் துணைவேந்தர் சாதிக், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் சேகர்பாபு, வி.சி.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபு, தி.மு.க. மாவட்டச்செயலாளர் சிற்றரசு, காங்கிரஸ் தமிழகத் துணைத்தலைவர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், துணைச்செயலாளர் மு.வீரபாண்டியன், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், விவசாயிகள் தொழிலாளிகள் கட்சியின் தலைவர் பொன்.குமார் உட்பட்டோர் வீரமணியைச் சந்தித்து அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ”அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும் எங்களை எல்லாம் மிஞ்சிய மானமிகு அய்யா ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். தங்களின் வழிகாட்டுதல் தொடர்ந்து எங்களுக்குக் கிடைக்க வேண்டும். பெரியாரியப் பெரும்பணி தொடரவேண்டும்! சமூகநீதிக் களத்தில் "வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும்"!” என்று குறிப்பிட்டுள்ளார்.      

logo
Andhimazhai
www.andhimazhai.com