கர்நாடகாவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த பாஜக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக சார்பில் போட்டியிட முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டாருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இதனால் அதிருப்தி அடைந்த அவர், எம்எல்ஏ பதவியிலிருந்து அவர் நேற்று விலகினார். இதுதொடர்பாக சபாநாயகரை சந்தித்து தனது பதவிவிலகல் கடிதத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, ஹூப்பள்ளியிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரு சென்றார். அங்கு கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர் சிவசங்கரப்பா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார். மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் பதவிகளை வழங்க கட்சித் தலைமை முன்வந்தபோதிலும், அதனை ஏற்க மறுத்து கட்சியிலிருந்து ஜெகதீஷ் ஷெட்டார் விலகியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா குற்றம்சாட்டி இருந்தார்.