தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியர் குத்திக் கொல்லப்பட்டது குறித்து பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேசிடம் முதலமைச்சர் ஸ்டாலின் விவரம் கேட்டார்.
அன்பில் மகேஷ் சென்னை, எழும்பூரில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் இன்று காலையில் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அப்போது தஞ்சை சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. முதலமைச்சர் ஸ்டாலின் அன்பில் மகேசைத் தொலைபேசியில் அழைத்து, என்ன நடந்தது என விசாரித்துள்ளார். இதை மகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொல்லப்பட்ட ஆசிரியர் இரமணி பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமிக்கப்பட்டவர் என்று குறிப்பிட்டார்.
”தஞ்சை மாவட்டத்தில் மிகக் கொடுமையான நிகழ்வு இது; எந்தப் பிரச்னையாக இருந்தாலும் பள்ளியில் நுழைந்து இப்படி சம்பவம் நடந்திருக்கக்கூடாது; முதலமைச்சர் என்னை அழைத்து விவரம் கேட்டார்; மாவட்டத்தின் அமைச்சர் உயர்கல்வி அமைச்சர் அங்கு விரைந்து கொண்டிருக்கிறார்; நானும் விமானம் மூலம் சம்பவ இடத்துக்கே செல்ல இருக்கிறேன்; சம்பந்தப்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்; பள்ளிக்கு உடனடியாக விடுமுறை விட்டு குழந்தைகளுக்கு கவுன்சிலிங் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் சொல்லியிருக்கிறோம். ஆசிரியரின் மறைவு வேதனைக்குரியது. அவருடைய குடும்பத்துக்குத் துணைநிற்போம்.” என்று அன்பில் மகேஷ் கூறினார்.
மேலும், “ ஆசிரியர்கள் எங்களிடம் எப்போதும் கேட்பது பணிப் பாதுகாப்பு. தமிழ்நாட்டின் முதலமைச்சரின் கவனத்துக்கும் இதைக் கொண்டுசெல்வோம். சொந்தப் பிரச்னையாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்காதவண்ணம் எந்த அளவுக்கு கவனம் செலுத்தமுடியுமோ அந்த அளவுக்கு கவனம்செலுத்துவோம்.” என்றும் அமைச்சர் மகேஷ் கூறினார்.