அருவருப்புப் பிரச்சாரத்தை நிராகரித்த மக்கள்- முத்தரசன் கருத்து

இரா. முத்தரசன்
இரா. முத்தரசன்
Published on

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் அருவருப்புப் பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்துவிட்டனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“நடந்துமுடிந்த 18-வது நாடாளுமன்றத் தேர்தலில் திமுகழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் இண்டியா கூட்டணி சார்பில், புதுச்சேரி உட்பட்ட 40 தொகுதிகளும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

இண்டியா கூட்டணிக்கு எதிராகவும், இந்தக் கூட்டணியை உருவாக்கி வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த தி.மு.க. மீதும் பாஜக தலைவர்கள் வெறுப்பூட்டும் அருவருப்புப் பரப்புரையில் ஈடுபட்டனர்.

அதிகாரத்தையும், அளவற்ற பண செல்வாக்கையும் பயன்படுத்தி பல்வேறு பகுதியினரை மிரட்டி ஆதரவு தெரிவிக்குமாறு நிர்பந்தித்தனர்.

பிரதமர் மோடி ஒன்பது முறை தமிழ்நாட்டுக்கு வந்து பரப்புரை மேற்கொண்டார். பா.ஜ.க. ஆதரவாக நின்ற ஊடகங்கள் செய்தி என்ற பெயரிலும் கருத்துக்கணிப்பு என்ற பெயரிலும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை திணித்து குழப்பங்களை ஏற்படுத்தி வந்தனர்.

இவை அனைத்தையும் நிராகரித்து புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், ஆதரித்த பொதுமக்களுக்கும், தேர்தல் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வெற்றிக்கு வழி வகுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாரட்டும், வாழ்த்துக்களும்.” என்று முத்தரசனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com