போதைப் பொருள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 2000 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று மத்திய போலீஸ் குற்றம்சாட்டியது. இதையடுத்து, தி.மு.க.வில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்.
தொடர்ந்து, போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி நேரில் விசாரணைக்கு வருமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர்ர், கடந்த 23ஆம் தேதி ஜாபர் சாதிக் வீட்டில் அழைப்பாணை ஒட்டினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து, அவரையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் ஜெய்ப்பூரில் வைத்து ஜாபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஜாபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.