ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பெண் ஆண் குழந்தை பெற்றெடுத்தார்!

அனுசுயா
அனுசுயா
Published on

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, வெள்ளத்திற்கு மத்தியில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது. இதனால், அந்த மாவட்ட மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் தேதி, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தின் அடிப்பகுதி அரித்துச் சென்றதால், ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ரயிலில் 700க்கும் அதிகமானோர் சிக்கியிருந்த நிலையில் முதற்கட்டமாக 100 பேர் வரை மீட்கப்பட்டனர். ஆனால், அதன் பின்னர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலைகள் மழை வெள்ளத்தால் மூழ்கியதால் மீட்பு படையினரால், மேற்கொண்டு முன்னேர முடியவில்லை. இதனால், அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்கப்பட்டது. இந்த பயணிகளில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் இருந்தார்.

நேற்று சூலூரில் இருந்து வந்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அனுசுயா என்ற கர்ப்பிணிப் பெண், 3 குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் மீட்கப்பட்டனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனுசுயா, பிரசவ வலிகாரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அனுசுயாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணிப் பெண்ணான அனுசுயாவுக்கு குழந்தை பிறந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com