அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் போதிய பேருந்துகள் இல்லை என்பதால் தான் தனியார் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
“தனியார் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்களில் திணிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் போதிய எண்ணிக்கையில் பேருந்துகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது” என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 8,182 புதிய பேருந்துகளை வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரசு நினைத்திருந்தால் அந்த பேருந்துகளை எப்போதோ வாங்கியிருக்கலாம். ஆனால், மூன்றரை ஆண்டுகளில் 1088 புதிய பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டன. மீதமுள்ள பேருந்துகளை குறித்த காலத்தில் வாங்க முடியாத அளவுக்கு தமிழக அரசை தடுத்தது யார்?” என்றும் அவர் கேட்டுள்ளார்.
”தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு காலாவதியான பேருந்துகளின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பங்கு அளவுக்குகூட புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பாமல் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஒப்பந்தப் பணியாளர்களை மட்டும் அரசு நியமித்திருக்கிறது. இவை அனைத்தும் தனியார்மயமாக்கத்திற்கான முன்னேற்பாடுகள் தான். மிகக்குறைந்த எண்ணிக்கையில் புதிய பேருந்துகளை வாங்குவதையும் சில நூறு பணியாளர்களை மட்டும் நியமிப்பதையும் சுட்டிக்காட்டி அரசுப் போக்குவரத்துக் கழங்கள் தனியார்மயம் ஆக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறுவதை எவரும் நம்பமாட்டார்கள்.” என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
மேலும், ”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு உண்மையாகவே இருந்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கணிசமான அளவில் நிதியை ஒதுக்கி தேவையான அளவுக்கு புதிய பேருந்துகளை வாங்குவதுடன், புதிய பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். பயணிகள் சேவையையும், நிர்வாகத்தையும் மேம்படுத்துவதன் மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து திருவிழாக் காலங்களில் சிறப்புப் பேருந்துகளாக இயக்க தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்யும் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர் விரோத செயல்களில் அரசு ஈடுபடக்கூடாது.” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.