மைசூரிலிருந்து தர்பங்காவுக்குச் சென்ற பாக்மதி அதிவிரைவு தொடர்வண்டி கவரைப்பேட்டை அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில்வண்டி மீது மோதியது.
வழக்கமான பாதையில் செல்லவேண்டுமானால், பொன்னேரியைக் கடந்து கவரைப்பேட்டை வந்த இந்த வண்டி, பொதுத் தடம் வழியாக கும்மிடிப்பூண்டிக்குச் சென்றிருக்க வேண்டும். ஆனால், கவரைப்பேட்டையில் லூப் லைன் எனப்படும் பக்கவாட்டுப் பாதையில் தடம் மாறியதால், அங்கு நின்றிருந்த சரக்கு வண்டி மீது மோதியது.
110 கி.மீ. வேகத்தில் சென்ற பாக்மதி விரைவு வண்டி பக்கவாட்டுப் பாதையில் திரும்பியதால் 90 கி.மீ. வேகத்துக்குக் குறைந்தது. முதன்மைத் தடத்தின் வேகத்தில் சென்றிருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்கிறார்கள், இரயில்வே பொறியாளர்கள்.
பாக்மதி வண்டிக்கு பச்சை சிக்னல் தரப்பட்டபோதும், எப்படி அது பக்கவாட்டில் சென்றது என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது.
தடம் புரண்டதால் 13 பெட்டிகள் கவிழ்ந்துள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து இன்று காலை முதல் இரயில்வே பொறியாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.