எழுத்தாளர் வீட்டுத் திருமணம் எப்படி இருக்கும்?

ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நிறம் உண்டு.
அஜிதன் மணவிழா
அஜிதன் மணவிழா
Published on

செய்தொழில் வேற்றுமையால், பண பல வேறுபாட்டால் திருமணக் கோலங்களும் விதவிதமாக வண்ணங்கள் காட்டுவதுண்டு. கருமித்தனமாக, சிக்கனமாக, அளவாக, ஆடம்பரமாக, படாடோபமாக, ஊதாரித்தனமாக என்று பல்வேறு விதங்கள்; பல்வேறு நிறங்கள். எல்லாமும் இயல்பாக இணைந்தவை என்று சிலவே அமையும்.

ஒவ்வொரு திருமண விழாவிலும் நாம் கற்றுக் கொள்வதற்கும் தவிர்ப்பதற்குமான பாடங்கள் நிறைய உண்டு.

எல்லாவற்றையும் எவ்வளவோ கவனமாகப் பார்த்தாலும் நம் வீட்டுத் திருமணத்தில் எங்காவது ஒரு சுருதி பிசகிவிடுவதுண்டு. ஒரு சின்ன விஷயம் பெரிய அளவில் நிம்மதியைக் குலைத்து விடுவதுண்டு.

அலங்கரிக்கப்பட்ட தேரில் தேரோட்டம் சிறப்பாக அமைய, பெரிய கடையாணி மட்டுமல்ல ஒரு சிறு திருகாணியும் அவசியம்.

ஒரு திருமணம் என்பது பல்வேறு பட்ட வாத்தியங்கள் இணைந்து நடத்தும் ஒரு கச்சேரி போன்றது தான். யாரோ ஒருவர் சுருதி தப்பி இசைத்தாலும் சங்கீத சந்தோஷத்தின் சதவிகிதம் குறைந்து விடும்.

அனைவரையும் திருப்திப்படுத்தும்படியாக, குறை சொல்ல முடியாத படியாக, அப்படி ஒரு திருமண விழாவாக, எழுத்தாளர் ஜெயமோகன் இல்லத் திருமண விழா நடைபெற்றது.அவரது மகனும் வளர்ந்து வரும் எழுத்தாளருமான அஜிதனுக்கும் தன்யாவுக்கும் இன்று திருமணம் கோயம்புத்தூர் ராம் நகரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா பூஜா சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபத்தின் பெயரைப் பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் பிம்பத்திற்கு எதிராக, குளிரூட்டப்பட்டு நவீன சாயலுடன் அழகான மண்டபமாக அது இருந்தது.

முதல் நாள் மதியம் நிச்சயதார்த்த விழா, மாலை வரவேற்பு விழா, மறுநாள் காலை திருமண விழா என்பது விழாத்திட்டம். முதல் நாளான வரவேற்பு நாள் காலையிலிருந்து எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று வரத் தொடங்கி இருந்தார்கள்.

காலையிலேயே ஜெயமோகன், அஜிதன் குடும்ப சகிதமாக வந்திருந்து மண்டபத்தை ஓர் உலா வந்தார்கள்.

ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன என்று அந்த சிற்றுலாவில் ஒரு சுற்று கண்காணித்தார்கள்.

காலையிலேயே கவிஞர் தேவதேவன், எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், பேராசிரியர் மு. இளங்கோவன் வந்திருந்தனர்.

நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள்.

ஜெயமோகனை யார் வந்து சந்தித்தாலும் அவர்களைப் பற்றிச் சொல்வதற்குச் சில செய்திகளை வைத்திருப்பார். அறிமுகப்படுத்தும் போது வந்தவரைப் பற்றிச் சிறு அபிப்பிராயமோ கேலி கிண்டலோ நகைச்சுவையோ ஏதாவது ஒன்று சொல்வார். அந்த அளவிற்கு வருகை தந்தவர்கள் அனைவரையும் அவர் அறிந்தவராக இருந்தார் .

விழா நாள் முழுவதும் வந்தவர்களை வரவேற்று நலம் விசாரிப்பது, அவர்களிடம் பேசுவது, மேடையில் மணமக்களுடன் புகைப்படம் எடுப்பவர்களுடன் போஸ் கொடுப்பது என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். சில நேரம் அதிலிருந்து வெளியேறி, தனியே அமர்ந்து வேடிக்கை பார்ப்பவராக இருந்தார்.

தள்ளி நின்று உற்றுப்பார்த்த போது எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளே இருந்து பலர் வெளியே வந்தார்கள்.

வாசகருடன் பேசும் போது மட்டும் அவர் ஒரு எழுத்தாளராக இருந்தார். உறவினர்களிடம் அவர் சொந்தக்காரராக இருந்தார். நண்பர்களிடம் அவர் ஜாலியானவராக இருந்தார். எழுத்தாளர்களுடன் மூத்த ஒரு படைப்பாளியாக, இலக்கிய சித்தாந்தவாதிகளுடன் ஒரு விமர்சகராக, இப்படிப் பலர்...

உறவினர்களை நண்பர்களிடம் அறிமுகப்படுத்தும் போது கூட அவர்களைப் பற்றிக் கூறும் போது அவர்களது ஊருக்கான பின்புலத்தையும் கூறுவார்.

எவ்வளவுதான் ஆன்மிகம், சமயம், தத்துவம் சார்ந்து எழுதினாலும் திருமண மேடை சம்பிரதாயங்களில் புரோகிதர் மந்திரம் கூறும் போது ஒரு கிளிப்பிள்ளை போல் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு அவர் கூறியது ஒரு சுவாரசியமான காட்சியாக இருந்தது.

ஜெயமோகனின் மகன் அஜிதன் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருக்கிறார். இந்த வயதிற்குள்இரண்டு நாவல்கள் எழுதி இருக்கிறார்; இலக்கிய உரை நிகழ்த்துகிறார்.

ஆனால் பட்டு வேட்டி , சட்டை போட்டதும் எங்கிருந்து வந்தது அப்படி ஒரு மாப்பிள்ளை வெட்கம். ஆளாளுக்கு கேலி செய்த போது அவர் முகத்தில் வெட்க ரேகைகள் இழைந்து ஓடின.அதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மணமக்களை புகைப்படத்திற்காக போஸ் கொடுக்க வைத்த போது,புகைப்படக்காரர் சொன்னபடி நடிக்கத்தெரியாமல் நெளிந்தார்.

வெளிநாட்டில் இருந்து வந்த ஆஸ்டின் செளந்தர் போன்றவர் முதல் அதே ஊரில் உள்ளவர்கள் வரை விழாவுக்குப் பலரும் வந்திருந்தார்கள்.

எழுத்தாளர்கள் பாவன்ணன், கலாப்ரியா, பெங்களூரு மகாலிங்கம்
எழுத்தாளர்கள் பாவன்ணன், கலாப்ரியா, பெங்களூரு மகாலிங்கம்

எழுத்தாளர்கள் மலையாள எழுத்தாளர் கல்பற்றா நாராயணன், மூத்த படைப்பாளி நாஞ்சில்நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ரவிசுப்பிரமணியன், பவா செல்லத்துரை,சாம்ராஜ், கீரனூர் ஜாகீர் ராஜா, நிர்மால்யா , திருச்செந்தாழை, அகர முதல்வன், மோகனசுந்தரம், பட்டிமன்றப் பேச்சாளர்கள், பாரதி பாஸ்கர், பட்டிமன்றம் ராஜா, கவிஞர் கலாப்ரியா, பதிப்பாளர் விஜயா பதிப்பகம் வேலாயுதம், பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா, இளைய எழுத்தாளர்கள் செல்வேந்திரன் ,சுஷீல் குமார், சுரேஷ் பிரதீப், விக்னேஷ் ஹரிஹரன்,தமிழ் விக்கி ரம்யா,ஓவியர்கள் ஜீவா,வெண்முரசு புகழ் ஓவியர் சண்முகவேல் என வந்திருந்தனர்

ஜெயமோகனின் நட்பு மண்டலத்தில் உள்ள விஷ்ணுபுரம் பரிவாரங்களான அரங்கன், ஜா.ராஜகோபாலன், காளிப்ரசாத், ஈரோடு கிருஷ்ணன், குவிஸ் செந்தில், மீனாம்பிகை, சுசித்ரா, சாகுல் ஹமீது, நவீன், அணங்கன் போன்றோர் அனைத்து பணிகளிலும் பக்க பலமாக இருந்தார்கள். குக்கூ அமைப்பு நண்பர்கள் விடைபெறும் போது மூலிகைச் செடிகளை வழங்கினார்கள்.

விருந்தோம்பல் என்பது உணவின் ருசி , அதை முகமலர்ச்சியுடன் உபசரித்து நல்மனத்தோடு வழங்குதையும் சேர்ந்ததுதான்.

அந்த வகையில் விருந்தோம்பல் சிறந்த முறையில் இருந்தது. பந்தியில் பரிமாறுபவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். அதனால்தான் ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் கவனிக்கும் அளவிற்கு அவர்கள் கவனம் செலுத்தினார்கள். ஒவ்வொருவரின் முகக் குறிப்பை அறிந்து அவர்களுக்குப் பிடித்ததைப் பரிமாறினார்கள்.இப்படித் தனி மனித இயல்பு சார்ந்து கவனித்த அந்த அணுகுமுறை பாராட்டத்தக்கது.

விருந்தினர்கள் எதைச் சாப்பிடுகிறார்கள் என்பதைக் கவனித்தார்கள். விரும்பிச் சாப்பிடுவதை மீண்டும் இலையில் வைத்தார்கள்.இது பல திருமணங்களில் நடக்காதது.

சாப்பிட்ட பின் டீ, காபி வழங்கும் இடத்திலும் நாட்டுச் சர்க்கரையா , வெள்ளைச் சர்க்கரையா எனக் கேட்டு ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்புகிற அளவில் தனித்தனியாகக் கலந்து கொடுத்தார்கள்.

சாப்பாட்டுப் பந்தியில் திருமணத்துக்கு முதல் நாளான வரவேற்பு நாள் காலையிலிருந்து தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் . பல ஊர்களில் இருந்து உறவினர்களும் வாசகர்களும் நண்பர்களும் வருவதால் அவர்கள் எந்த நேரத்தில் வந்தாலும் 12 மணி வரை காலை உணவு வழங்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அதேபோல் மதிய உணவு தொடங்கி மாலை வரை தொடர்ந்தது.

குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டினால் பல பெரிய கல்யாணங்களில் சாப்பாடு இருக்காது.

சாப்பாட்டு நேரம் என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்திருப்பார்கள். ஆனால் இங்கே காலை முதல் உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது; சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

யாரும் சாப்பிட்டு விடாமல் இருந்துவிடக் கூடாது என்பதில் இருந்த கவனமும் அக்கறையும் அதில் புலப்பட்டன.

உணவு வழங்கப்படும் விதம் சுத்தமாகவும் ருசியாகவும் நாகரிகமாகவும் இருந்தது.ஆரோக்கியமான உணவாகவும் இருந்தது .அதிக எண்ணெய் சேர்த்தவை, கரிய பொரியல்கள் தவிர்க்கப்பட்டன.

எப்போதும் எல்லாரையும் சாப்பிட வைத்துவிட்டு ஜெயமோகன் கடைசிப் பந்தியில்தான் சாப்பிட்டார்.

பொதுவாகத் திருமணத்திற்கு வருபவர்கள் வருகைப்பதிவு போல் ஆஜராகி விட்டு மணமேடை சென்று வாழ்த்தி விட்டு போட்டோ போஸ் கொடுத்து விட்டு சாப்பிட்டுவிட்டு சில நேரம் சாப்பிடாமல் கூட அவசரமாக அந்த இடத்தை விட்டு அகன்று விடுவது உண்டு.கிராமங்களில் கூட தாலி கட்டியவுடன் ஒரு பரபரப்பு பற்றிக்கொள்ளும். அந்த இடத்தை விட்டு ஓடிவிடத் துடிப்பார்கள்.வந்தவர்களுடன்கலந்து பேசி உறவினருடன் கூடி மகிழ்ந்து இருந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

ஆனால் இங்கே வந்தவர்கள் அனைவரும் கூடிக் கூடி, சேர்ந்து கொண்டு தங்களுக்குள் உரையாடிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தார்கள்.

வெளியேறாமல் கடைசிவரை பெரும் கூட்டமாக இருந்தது அரிதான காட்சி. கடைசியில் பிரிய மனமில்லாமல் தான் விடை பெற்றார்கள்.

மகிழ்வானதொரு மணவிழா சடங்கு
மகிழ்வானதொரு மணவிழா சடங்கு

திருமண விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் ஒத்த இலக்கிய ரசனை உடையவர்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அப்படி எழுத்தாளர் ஒருவருக்கொருவர் சந்திப்பதும் வாசகர்கள் எழுத்தாளர்கள் சந்திப்பதும் என ஆங்கங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகும் பத்து மணி வரை அந்தக் கூட்டம் அங்கே தங்கள் நினைவுகளை அசைபோட்டுக் கொண்டும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டும் இருந்தது.

பந்திக்குச் செல்லும்போதும் காலி இடம் இருப்பதை அனுசரித்துதான் உள்ளே நுழைந்தார்கள். முண்டியடித்துக் கொண்டு யாரும் செல்லவில்லை. ஒருவர் சாப்பிடும் போது பின்னணியில் நின்று கொண்டு சாப்பிடுபவர் சாப்பிடுவதை ஏக்கப்பார்வை யாரும் பார்க்கவில்லை.

பெரும்பாலான பந்திகளில் நடக்கும் அநாகரிகங்கள் எதுவும் இல்லாமல் அனுசரிப்போடு பந்திகளில் அமர்ந்தனர். பரிமாறப்பட்டது.மகிழ்ச்சியாகச் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்கள்.

வந்தவர்கள் ஜெயமோகனுடன் படம் எடுப்பதற்குக் கூட பொறுமை கடைப்படித்து ஒரு முறைமை காட்டினார்கள்.

திருமணம் முடிந்ததும் அவரது ஜாலி சபை கூடியது. ஒவ்வொரு முறை விஷ்ணுபுரம் விருது விழா முடிந்த பிறகும் இரவு கூடுவது போல் அந்த வட்ட மேசை (இல்லா) மாநாடு நடந்தது.

அதில் அவர் அவர் கொளுத்திப் போட்ட ஜாலி பட்டாசுகளுக்கு வெடிச்சிரிப்புகள் வெடித்தன. அவ்வப்போது நண்பர்களும் அவரை வாரினார்கள்.

திடீரென புகுந்து அவரது மனைவி அருண்மொழி நங்கை அவர் பங்குக்கு கேலி செய்து சிரிப்பு வெடிகுண்டை வீசினார்.

மொத்தத்தில் திருமண விழா போல் இல்லாமல், மணமக்கள் தாலி கட்டியது போன்றவற்றைத் தவிர்த்தால் ஓர் இலக்கிய விழா போலவே,குறிப்பாக விஷ்ணுபுரம் விருது விழா போலவே இந்த விழா இருந்தது.

உள்ளூர் மக்களுக்காக இன்னொரு வரவேற்பு விழாவை நாகர்கோவிலிலும் திரையுலக நண்பர்களுக்காக சென்னையிலும் நடத்துகிறார் ஜெயமோகன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com