“கூட்டணியில் இடம்பெறும் கட்சிக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிங்கப்படும்.” என தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் கூறியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, வி. சாலையில் இன்று மாலை 3 மணியளவில் கட்சிப் பாடலுடன் தொடங்கியது. மாநாட்டில் விஜய்யின் பெற்றோர்களான ஷோபா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தொடங்கியதையடுத்து மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது முடிந்தவுடன் விஜய் மேடைக்கு வருகை தந்தார். பின்னர் 800 மீட்டர் நீளமுள்ள ரேம்பில் நடந்துவந்தார். பின்னர் ரிமோட் மூலம் 100 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியேற்றிவைத்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நடந்தது. அப்போது, கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் உறுதிமொழி வாசித்தார். அதில்: “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் மண்ணிலிருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியை காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றை பேணிகாக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என உறுதியளிக்கிறேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரிலுள்ள வேற்றுமைகளைக் கலைந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தவெகவின் கொள்கை பாடல் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விஜய் பேசியதாவது:
“பிறந்த குழந்தைக்கு தாயின் பாச உணர்வையும் பாம்பை கண்டால் ஏற்படும் பயஉணர்வை அந்த குழந்தைக்கு சொல்லத் தெரியாது. அது தாயை பார்க்கின்ற அதே சிரிப்போடு தான் பாம்பையும் பிடித்து விளையாடும். இங்க அந்த பாம்பு அரசியல். அதை பிடித்து விளையடும் குழந்தை நான். அரசியலில் கவனமாக தான் களமாட வேண்டும்.
அனைவருக்கும் எனது உயிர் வணக்கங்கள். நாம் அனைவரும் ஒன்று. நான் மற்ற கட்சி தலைவர்களை குறித்து பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பமும் தான் மாற்றம் காண வேண்டுமா? அரசியலிலும் மாற்ற வேண்டும்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். இங்க யாரும், மேலே கீழ என்ற எந்த பாகுபாடும் பார்க்கப் போவதில்லை. நாம் எல்லோரும் ஒன்றுதான் எல்லோரும் சமம்தான். அறிவியலும், தொழில்நுட்பமும் மட்டும்தான் மாறணுமா, அரசியல் மாறக்கூடாதா. இங்கு எப்போதும் மாறாதது மனித பிறப்பு பசி வேலை உழைப்பு பணம் என சில மட்டும்தான்.
பெரியார் எங்கள் கொள்கை தலைவர். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்க போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அண்ணா கூறியபடி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனாலும் பெண் கல்வி பெண்கள் முன்னேற்றம் சமூக சீர்திருத்தம் சமூக நீதி பகுத்தறிவு சிந்தனை, பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம்.
பெரியாருக்கு அப்புறம் எங்களின் கொள்கை தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் இந்த மண்ணில் மதச்சார்பின்மைக்கும் நேர்மையான நிர்வாகத்துக்கும் செயல்பாட்டுக்கும் முன் உதாரணமாக இருப்பதால், அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம். இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்கிக் காட்டியவர் அண்ணல் அம்பேத்கர். இந்தப் பெயரைக் கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிற அவர்கள் எல்லோரும் நடுங்கிப் போய் விடுவார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடிய அவரை எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம்.
பெண்களைக் கொள்கை தலைவர்களாக ஏற்றுக் களத்தில் வரும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம்தான். அதில் ஒருவர் வீராங்கனை... இந்த மண்ணை கட்டிக்காத்த அந்தப் பேரரசி வேலுநாச்சியார். சொந்த வாழ்க்கையின் சோகத்தைக்கூட மறந்து விட்டு இந்த மண்ணுக்காக வாளையும் வேலையும் ஏந்தி போர்க்களம் புகுந்த ஆணை காட்டிலும் வீரமான வேகமான வேறு புரட்சியாளர்தான் நம் வேலுநாச்சியார். இன்னொருவர், இந்த மண் பின்தங்கி விடக் கூடாது என்று அதன் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட அஞ்சலையம்மாள். சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்தியச் சுதந்திரப் போராட்ட களத்தில் இறங்கிப் போராடிய புரட்சி பெண்மணி தான் நம் அஞ்சலையம்மாள். இவர்கள்தான் நம் கொள்கைத் தலைவர்கள். இவர்களை நாம் பின்பற்றுவதே நம் மதச்சார்பின்மைக்கும் சமூக நல்லிணக்கத்துக்குமான மிகப்பெரிய சான்றாக இருக்கும்.
நம்மை பார்த்து யாரும் விசிலடிக்கும் கூட்டம் என சொல்லக்கூடாது. நாம் விவேகமாக செயல்பட வேண்டும். நமது வலிமையை அதில் காட்ட வேண்டும். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையில் எடுக்க மாட்டோம். சொல் முக்கியமில்லை செயல் தான் முக்கியம். அரசியலில் சமரசத்தத்துக்கோ, சண்டை நிறுத்தத்துக்கோ இடமில்லை. நமது அரசியல் நிலைப்பாடு தான் நமது எதிரி யார் என்பதை காட்டும். பிளவுவாத சக்திகள் மற்றும் ஊழல் மலிந்த அரசியலை எதிர்ப்பதும் தான் நமது கொள்கை.
இந்த ஊழல்வாதிகள் கபடதாரிகள். கருத்தியல் பேசி கொள்கை நாடகம் போடுவார்கள். தமிழகத்தில் சாதி இருக்கும். ஆனால் அது அமைதியாகவே இருக்கும். மக்களுக்காக நிற்பது தான் எங்கள் கொள்கை. நாங்கள் மாற்று அரசியல் என சொல்லி ஏமாற்றப் போவதில்லை. நான் எக்ஸ்ட்ரா லக்கேஜாக இங்கு வரவில்லை. தமிழகத்தை முதன்மையாக மாற்றுவதே நம் நோக்கம். இதிலிருந்து நாம் பின்வாங்கப் போவதில்லை.
நாங்கள் சமூக வலைதளத்தில் கம்பு சுத்த வந்தவர்கள் அல்ல; மக்கள் நலனுக்காக வாள் ஏந்த வந்தவர்கள். அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு பிறரை அடி பணிய வைக்க மாட்டேன். தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்பார்த்து இருக்கும் மக்களுக்காக உங்களில் ஒருவனாக அரசியலில் களம் கண்டுள்ளேன்.
எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் மக்கள் அளிக்க உள்ள தவெக-வுக்கு செலுத்த உள்ள வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும். திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்ன தான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும் எங்களிடம் அது எடுபடாது. பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி. அவர்கள் செய்வது பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?
திராவிடமும், தமிழ் தேசியமும் எங்களது இரு கண்கள். தகுதி இருந்தும் நீட் தேர்வு தடையாக உள்ளது. எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை சகோதரி அனிதாவை இழந்த போதும் நான் பெற்றேன்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள். நான் கூத்தாடி தான். அரசியலுக்கு எம்ஜிஆர், என்டிஆர் வந்த போதும் கூத்தாடிகள் என்று தான சொன்னார்கள். கூத்து என்பது இந்த மண்ணோடும் மக்களுடன் கலந்து. நான் உங்களில் ஒருவன். கூட்டணியில் இடம்பெறுவோருக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு அளிங்கப்படும்” என அவர் பேசினார். 45 நிமிடங்களுக்கும் மேல் விஜய் உரையாற்றினார். இவரின் உரையைத் தொடர்ந்து கட்சியின் கொடி, கொள்கை விளக்கம் தொடர்பான காணொளி ஒளிபரப்பப்பட்டது.