“ஒவ்வொரு பெண்ணும் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். ஒவ்வொருவரும் 10 பேரை குடிக்காமல் இருக்க மனமாற்றம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், மதுக் கடைகளை மூட வேண்டாம். அது தானாகவே மூடப்படும் நிலை வரும்.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.
இதில் திமுக கூட்டணி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர். திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவனும் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் மாநாட்டில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:
“திமுக சார்பில் நானும் டிகேஎஸ்.இளங்கோவனும் வந்து இருக்கிறோம். இது எதை காட்டுகிறது என்றால் தளபதிக்கும் திருமாவளவனுக்கும் உள்ள நெருக்கத்தையும் தொடர்பையும் எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது என்பதை இந்த மாநாடு நிரூபித்துக்கொண்டு இருக்கிறது.
திருமாவளவனை பொறுத்தவரை அவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் உறுதியாக இருப்பார் என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் மதுவின் கொடுமையை சொன்னார்கள். அதில் கருத்து வேறுபாடு கிடையாது.
திமுக தலைவர் கலைஞர் மது விலக்கை தள்ளிவைக்கும்போதே ஒரு கருத்தை சொன்னார்.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் அது பிரசாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் மக்கள் மத்தியிலே எழுச்சியை உண்டாக்க வேண்டும் என்று சொல்லி, 1971இல் எங்கள் கட்சியின் பொருளாளராக இருந்த அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்கள் தலைமையில் குழுவை அமைத்து அந்த குழு நாடு முழுவதும் பிரசாரம் செய்யும் என்று சொன்னார். அதற்கு பின்னால் நடந்தவற்றை சொல்ல நேரம் போதாது.
ஆனால் மீண்டும் அந்த பிரசாரத்தை செய்ய வேண்டும் என்ற முடிவினை திருமாவளவன் இன்று கையில் எடுத்து இருக்கிறார்.
இங்கு வந்திருக்கும் ஒவ்வொரு மகளிரும், கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு சிறுத்தையும் திருமாவளவனை வைத்துக்கொண்டு ஒரு உறுதிமொழியை எடுக்க வேண்டும்.
இந்த மாநாடு கலைந்து செல்லும்போது நாம் ஒவ்வொருவரும் ஒரு 10 பேரையாவது குடிப்பவர்களை மனமாற்றம் செய்வோம் என்ற உறுதிபாட்டை எடுக்கின்ற மாநாடாக இது அமைந்தால் கடைகளை யாரும் மூட வேண்டிய அவசியமில்லை. கடைகள் தானாக மூடி விடும்.
ஒருகாலத்தில் குடும்ப கட்டுப்பாடு என்றால் பாவமாக கருதப்பட்டது.
ஆனால் குடும்ப கட்டுப்பாடு முதலில் 3, பின்னர் 2, அதன் பின்னர் நாம் இருவர் நமக்கு ஒருவர், இன்று நாம் இருவர் நமக்கேன் இன்னொருவர் என்று தமிழ்நாட்டில் குடும்ப கட்டுப்பாடு வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பிரசாரம். விளம்பரம் அதைத்தான் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து டி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:
“இந்த மாநாடு நடக்கவிருப்பதை அறிந்ததும், முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவனை அழைத்து, எங்கள் கட்சி சார்பில் இருவர் கலந்துகொள்வார்கள் என அப்போதே எங்கள் பெயரையும் குறிப்பிட்டுக் கூறினார். இந்த மாநாட்டின் நோக்கம் மிக உயர்ந்த நோக்கம். அதற்கு துணை நிற்பது தி.மு.க-வின் கடமை என உணர்ந்துதான் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. போதை சுயமரியாதைக்கு எதிரானது.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது. ஆனால் நமது அண்டை மாநிலங்களில் மது விற்பனையில் இருந்தது. இங்கு மது கிடைக்காதவர்கள் அங்கு சென்று அதை அருந்தினார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் மது விலக்கு பூரணமாக நிறைவேற்றமுடியவில்லை. எனவே இந்தியா முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஒற்றை நோக்கம்தான் இதற்கான வெற்றியாக அமையும் என்பதை எங்கள் தலைவர் ஏற்றுக்கொண்டதால்தான் எங்களை பேச அனுப்பியிருக்கிறார். வி.சி.க-வின் இந்த மாநாட்டு தீர்மானத்தை படித்தபோது, போதை ஒழிப்பு பிரசாரத்துக்கென ஆட்களை தயார் செய்ய நிதியை அதிகப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசும் அந்த நிதியை அதிகப்படுத்த வேண்டும்.
அந்த வகையில் முதல் கடமை மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்க வேண்டும். இரண்டாவது அகில இந்திய அளவில் மதுவிலக்கை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும். எல்லா மதுக்கடைகளையும் மூடிவிட்டாலும், போதைப் பொருள் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்படுகிறது. குஜராத்தில் 2022-ல் 96 பேரும், பீகாரில் 140 பேர் போதையால் உயிரிழந்திருக்கிறார்கள். எனவே இது அகில இந்திய பிரச்னை. எனவே ஒன்றிய அரசு இதற்காக சட்டமியற்ற வேண்டும். இந்த மாநாட்டின் தீர்மானத்தை வரவேற்கிறேன்" எனப் பேசினார்.