டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். சவுத் பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் நடந்தது.
இந்தச் சந்திப்பின் போது, சமக்ர சிக்ஷ அபியான் என்ற மத்திய அரசின் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும், சென்னை மெட்ரோ 2 ஆம் கட்டப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்தார்.
முன்னதாக, தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில், அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன்” எனத் தெரிவித்தார்.
அதன்படி, நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதலமைச்சரை, டி.ஆர்.பாலு எம்.பி., டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, இரவு டெல்லியில் தங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.
தொடர்ந்து அவர், மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியின் வீட்டுக்குச் சென்று அங்கு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, இன்று மாலை 5.30 மணிக்கு தில்லியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் திரும்புகிறாா்.