நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, அவருக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன், அவரும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கட்சியிலிருந்து விலகியிருப்பது குறித்து அவர் கூறியதாவது:
“14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம். ஈழ மக்களை காப்பாற்றக் கட்சியை ஆரம்பித்தோம். தற்போது தமிழ் நாட்டு மக்களின் பிரச்சினைக்காக நிற்கிறோம். அதற்காக பல்வேறு வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்று உள்ளோம்.
கிருஷ்ணகிரி மண்டலத்தில் 20,000 பேரை உறுப்பினர்களாக இனைத்து 1 லட்சம் வாக்குகளை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கியுள்ளோம்.
கட்சி ஆரம்பித்த பொழுது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை. திட்டமிட்டு எங்களை ஒதுக்குகிறார்கள். பேசமறுக்கிறார்கள்.
தமிழகத்தில் எந்த பொறுப்பாளரளையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை. 14 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு தங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தெரியாதா? தமிழகம் முழுவது பழைய ஆட்கள் நிராகரிக்கப்படுவதன் காரணம் என்ன? எங்கள் இளமை காலம் முழுவதும் கட்சியில் போய்விட்டது.
மாற்று கட்சியில் உள்ள எங்கள் உறவினர் நல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கிறீர்கள். ஆனால் நீங்கள் மட்டும் அனைத்து கட்சியினர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறீர்கள்.
நாங்கள் பிச்சை எடுத்து கட்சிக்கு நிதி கொடுத்தால் கட்சியை பாக்யராஜ் என்ற தனி நபர் பெயரில் பதிவு செய்து உள்ளீர்கள் நாம் தமிழர் கட்சியில் யாரும் வளர கூடாது என சீமான் நினைக்கிறார். சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார் என கருதுகிறோம்.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியில் கட்டுப்பாடு இல்லை. கட்சிக்காக உழைத்து சிறை சென்றவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள். எளிமையான அரசியல் இல்லை.
திமுக, அதிமுக மற்றும் பணக்காரர்கள் அழைத்தால் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் சீமான் நாம் தமிழர் கட்சினர் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை.
கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லையென்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும்.
செயற்குழு கூட்டம், பொதுக்குழுக் கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது.
மாதம் 2.5 லட்சம் வாடகை, 3 பேருக்கு 15 வேலை ஆட்கள் என சொகுசாக வாழ்கிறார்கள், ஆனால் ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.
கட்சியில் வளர்ந்து வருபவர்களை தள்ளி வைத்துவிடுகிறார்கள். புதிதாக வருபவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். பதினைந்து வருஷமாக எங்கள் பணத்தை செலவு செய்து கட்சியை வளர்த்துள்ளோம்.
எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ தெரியவில்லை. உங்களிடம் வந்து மாட்டி 14 வருட வாழ்க்கைய இழந்துவிட்டோம்.” என்று ஆதங்கத்துடன் பிரபாகரன் பேசினார்.