சென்னையில் உள்ள 75 சதவீத வீடுகளில் வயிற்றுப்போக்கு, வாந்தியை உண்டாக்கும் இ- கோலி பாக்டீரியா கலந்த தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீரைப் பற்றி மக்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் நீரின் தரம் குறித்த ஆய்வை சென்னை ஐஐடியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் நகரில் உள்ள 752 வீடுகளிலிருந்து குடிநீர் மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
அவர்கள் செய்த ஆய்வின்படி குழாய்கள், போர்வெல்கள், தொட்டிகள் இ - கோலி பாக்டீரியா வளர்வதற்கான இடமாக உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. தண்ணீர் சுத்திகரிப்பான் பயன்படுத்துபவர்கள் கூட பாதுகாப்பான தண்ணீரை குடிக்கவில்லை என்கிறது இந்த ஆய்வு.
சென்னையில் உள்ள 75 சதவீத வீடுகளில் இ- கோலி பாக்டீரியா கலந்த குடிநீரைத்தான் பயன்படுத்துகின்றனர் என்றும் இந்த வீடுகளில் உள்ள குழந்தைகளும் இதே குடிநீரை குடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட 58% குழந்தைகள் குழாயிலிருந்து நேரடியாக தண்ணீரைக் குடிப்பதாகவும், 15 % பேர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்துவோரில் 73% பேர் தண்ணீரின் தரம் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். ஆய்வின்படி, 48% குடும்பங்கள் தங்களது குடிதண்ணீரைக் குழாய்களில் பிடிப்பதாகவும் 18% பேர் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வடிகட்டிய நீர் அமைப்புகளை நம்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தண்ணீரை எப்படி பாதுகாப்பது?
சுத்திகரிப்பானை பராமரிப்பது. தண்ணீர் குழாய்கள், தொட்டிகளை சுத்தமாக வைத்திருப்பது. சுத்தமான, காற்றுபுகாத பாத்திரத்தில் தண்ணீரை சேமித்து வைப்பது. குடிப்பதற்கு முன்னர் தண்ணீரை ஒரு நிமிடம் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
இ - கோலி பேக்டீரியா என்ன செய்யும்?
மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் காணப்படும் ஒருவகை பாக்டீரியா இது. அசுத்தமான உணவுகள், மலம் கலந்த தண்ணீர், பச்சை பால், அசுத்தமான காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள் மூலம் இது மனிதர்களுக்கு பரவுகிறது. இதனால் மனிதர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம்.