பிரபல சுற்றுலா, பயண ஏற்பாட்டுத் தொழி்லதிபரும் மதுரா டிராவல்ஸ் உரிமையாளருமான வி.கே.டி. பாலன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 70.
தமிழ்நாட்டின் பயண ஏற்பாட்டுத் தொழிலில் மிகவும் சிறிய அளவில், தனி மனிதராக தொழிலைத் தொடங்கிய வி.கே.டி. பாலன், தன் தொடர் உழைப்பாலும் திறனாலும் உலகம் முழுவதும் தமிழர் வசிக்கும் நாடுகளுக்கு பயண ஏற்பாடுகளைச் செய்துதரும் நிறுவனத்தை உருவாக்கிக் காட்டினார். இவரின் இந்தப் பணியைப் பாராட்டி தமிழ்நாட்டு அரசின் சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சொந்த ஊராகக் கொண்ட பாலன், சென்னையில் வசித்துவந்தார். இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு, சென்னை, மந்தைவெளியில் உள்ள அவரின் இல்லத்தில் நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும். காலை 8 மணி முதல் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாலனின் இல்ல முகவரி:
44,தேவ் அபாட்மெண்ட், 4ஆவது டிரஸ்ட் குறுக்குத்தெரு, மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.