விழுப்புரத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சி.சி.டி.வி கேமராக்கள் மீண்டும் செயலிழந்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம் என்று அழைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த அறைக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமீபத்தில் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என புகார் எழுந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் சிறிது நிமிடங்களில் அது சரிசெய்யப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
தற்போது, மீண்டும் விழுப்புரம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் உள்ள 39 சி.சி.டி.வி. கேமராக்களில் 7 கேமராக்கள் செயலிழந்துள்ளன. இன்று காலையில் விழுப்புரம் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததே காரணம் என்று கூறப்படுகிறது.