விக்கிரவாண்டி: பா.ம.க.வை வெற்றி பெற வைக்க பின் வாங்கலா? பழனிசாமி பதில்!

செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி
செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி
Published on

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்தது என்பது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அக்கட்சியின் சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. அ.தி.மு.க.வின் இந்த தேர்தல் புறக்கணிப்புக்கு காரணம், பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கே என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், ப.சிதம்பரம் கூறிய கருத்துத் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பழனிசாமி அளித்த பதில்:

“ப.சிதம்பரத்துக்கும் எங்கள் கட்சிக்கும் என்ன சம்பந்தம்? இது எங்கள் கட்சி எடுத்த முடிவு.

ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தி.மு.க. அதையே செய்கிறது. தேர்தல் ஆணையம், காவல் துறை, அரசு அதிகாரிகள் மாநில அரசுக்குத் துணை நிற்கிறார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் ஆட்சி அதிகார பலத்தையும் செல்வத்தையும் பயன்படுத்தி பரிசுப் பொருட்களையும் பணத்தையும் வாரி இறைப்பார்கள். பூத் வாரியாக பணமழை பொழியும். ஜனநாயக படுகொலை நடைபெறும். அதனால்தான், அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளது. சுதந்திரமாக தேர்தல் நடைபெறாது என்பதாலேயே இந்த முடிவு.

2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது பலிக்காது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com