தேர்தல் முடிவு சோர்வடையச் செய்யாது – எடப்பாடி பழனிசாமி கருத்து

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவு வந்திருப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அ.தி.மு.க. என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

தனித்து நின்றோம்; கொள்கை வீரர்களாகத் தலைநிமிர்ந்து நிற்கிறோம். “இனி அ.தி.மு.க. அவ்வளவுதான்” என்று 1980, 2004 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் போதும்; 1996 சட்டமன்றத் தேர்தல் முடிவின்போதும்; ஏன், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும், நம் கதை முடிந்ததாக ஆரூடம் கூறி ஆனந்தப்பட்டவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு.

2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணி 75 இடங்களைப் பெற்று நாம் யார் என்பதை உலகுக்குக் காட்டினோம். இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது.

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதில் மகத்தான வெற்றி பெறுவோம்.

தேர்தலின்போது அல்லும், பகலும் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன். ‘உங்கள் உழைப்புக்கும், தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்.’ என்று கண் கலங்குகிறேன்.

இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பணியாற்றி, நீங்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடை போட உறுதி ஏற்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைவருக்கும் நன்றி.” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com