வாச்சாத்தி: குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதிசெய்தது உயர் நீதிமன்றம்!
வாச்சாதி வன்கொடுமை வழக்கில் தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சந்தன மரக் கடத்தல் புகார் எனக் கூறி, கடந்த 1992ஆம் ஆண்டு, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தைச் சுற்றி வளைத்து காவல்துறை, வருவாய் துறைகளைச் சேர்ந்த கூட்டுப் படை பெரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த 18 பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர்; கிராம மக்களைத் தாக்கி சித்திரவதை செய்தனர்; கிராமத்தினரின் வீடுகள் உட்பட்ட உடைமைகள் சூறையாடப்பட்டன என்று புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக பழங்குடி மக்கள் சங்கம் இந்தப் பிரச்னையில் தலையிட்டது.
அப்போதைய ஜெயலலிதா அரசாங்கம் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. சிபிஎம் கட்சியுடன் மற்ற பல இடதுசாரி இயக்கங்களும் போராட்டத்தில் குதித்தன. பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் தரப்பட்ட அழுத்தத்தால், புகார் பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
சிபிஐ நடத்திய விசாரணையில், 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத் துறையினர், காவல்துறை, வருவாய்த் துறையினர் என்று 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
தண்டிக்கப்பட்டவர்கள் அந்தத் தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
குற்றவாளிகள் தரப்பிலான 27 மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடிசெய்து நீதிபதி வேல்முருகன் இன்று உத்தரவிட்டார்.
மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதில் 5 லட்சம் ரூபாயைக் குற்றம் புரிந்தவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் யாருக்கேனும் பிணை வழங்கப்பட்டிருந்தால், அது உடனே ரத்துசெய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர் அல்லது அவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
1992ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தவர், காவல் கண்காணிப்பாளராக இருந்தவர், வனத்துறை அதிகாரியாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.